RRvRCB : `ஈ சாலாவும் கப் நமதில்லை! - போராடி வென்ற ராஜஸ்தான்; வெளியேறிய ஆர்சிபி!

ஈ சாலாவும் கப் நமதில்லை! என்றாகியிருக்கிறது. தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு ஆறு போட்டிகளில் வரிசையாக வென்று வரலாறு படைத்த ஆர்சிபி எலிமினேட்டரில் தோற்று தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.,
RR v RCB

டாஸை வென்ற ராஜஸ்தான் ஆர்சிபியை பேட்டிங் செய்ய பணித்திருந்தது. பவர்பிளே தொடங்கி டெத் ஓவர்கள் வரை எங்கேயுமே ஆர்சிபி தலைதூக்க ராஜஸ்தான் அனுமதிக்கவில்லை. சந்தீப், சஹால், ஆவேஷ் கான் ஆகிய மூவரது எக்கானமியும் 10-ஐ தாண்டியிருந்தாலும் ஆர்சிபியின் ஸ்கோர் போர்டில் குறைந்த ரன்களே சேர்ந்ததற்கு காரணம் போல்ட் மற்றும் அஷ்வின்தான்.

அற்புதமாக ஸ்விங் ஆன புதுப் பந்தினை போல்ட் ஆட்டிவைத்து இன்ஸ்விங்கிங் டெலிவரிகளால் போர் தொடுக்க, பவர்பிளேயில் அவர் வீசிய மூன்று ஓவர்களில் வெறும் 8 ரன்களை மட்டுமே ஆர்சிபியால் எடுக்க முடிந்தது. மற்ற மூன்று ஓவர்கள் 42 ரன்களைக் கொண்டு வந்தது தனிக்கதை என்றாலும் போல்டின் கனகச்சிதமான லைன் அண்ட் லெந்த் பேட்ஸ்மேன்களின் பேட் இயங்குவதற்கான அத்தனை சுதந்திரத்தையும் தட்டிப் பறித்தது.

ஆர்சிபியின் தலைக்கு மேலே தொங்கிய கத்தியை மெல்ல மெல்ல கழுத்துக்கு இறக்கிக் கொண்டிருந்தனர் போல்டும் கூடவே அஷ்வினும். அஷ்வின் வீசி பேட்ஸ்மேன்கள் சந்தித்த எந்தப் பந்துமே ரன்களாக மாற்றக்கூடிய வகையினதாக இல்லை. டூ ப்ளஸ்ஸிஸின் விக்கெட்டை வீழ்த்தி போல்ட் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார் என்றால் அஷ்வின் பேக் டு பேக் விக்கெட்டுகளாக க்ரீன் மற்றும் மேக்ஸ்வெல்லை வெளியேற்றி அதகளப்படுத்தி இருந்தார்.

முதல் பத்து ஓவர்களில் ரன்கசிவைக் கட்டுப்படுத்துவதில் அந்த இருவர் செய்த மாயத்தை இரண்டாவது பாதியில் விக்கெட்டுக்களை வீழ்த்தி, பார்ட்னர்ஷிப்களை உடைத்துக் கொண்டே இருப்பதில் ஆவேஷ் கானின் பந்தும் செய்தது. செட்டில் ஆகியிருந்த பட்டிதர், பந்துகளை துவம்சம் செய்யத் தொடங்கிய லாம்ரோர், வெகுவாக திணறிக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரையுமே வெளியேற்றி இருந்தார் ஆவேஷ். தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னதாக அவுட் அளிக்கப்படாத சர்ச்சை அம்பயரிங் குறித்து மீண்டும் விமர்சனங்களுக்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளது.

RR

22 யார்டுகளுக்கு இடையில் மட்டுமே நடப்பதல்ல கிரிக்கெட், பவுண்டரிகளின் அளவு கூட பெரும் காரணியாகி ஆட்டத்தின் போக்கை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்பதற்கு ஆர்சிபி - ராஜஸ்தானுக்கு இடையிலான போட்டியே ஒரு சான்று‌. மிகப்பெரிய பவுண்டரி உள்ள முனையிலிருந்து பந்து வீசப்பட்டதன் காரணமாக ஒற்றைப்படை எண்களை உள்ள பத்து ஓவர்களில் வெறும் 51 ரன்களை மட்டுமே ஆர்சிபி எடுத்திருந்தது, ஆனால் ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தனர். சஹால் சிக்கியதோ சின்ன பவுண்டரியை பேட்ஸ்மேன்கள் டார்கெட் செய்த ஓவர்கள்தான். அந்த 10 ஓவர்களில்தான் ஆர்சிபி 121 ரன்களை எடுத்திருந்தது. அதில் ஒன்றில் தான் கோலி ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்திருந்தார்.

Ashwin
ப்ளே ஆஃப் பதற்றம் ஆர்சிபியின் பக்கம் நிரம்பவே காணப்பட்டது. தவறான ஷாட்களால் சில பேட்ஸ்மேன்கள் தங்களது குழியை தாங்களே அகலப்படுத்தினர் இத்தொடரில் நான்காவது முறையாக டக் அவுட் ஆகிய மேக்ஸ்வெல்லும் சரி, பொறுப்போடு நின்று ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த பட்டிதரும் சரி மோசமான ஷாட்டுக்கு தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்திருந்தனர்.

இறுதி ஐந்து ஓவர்களில் வெறும் 47 ரன்களை மட்டுமே ஆர்சிபி எடுத்திருந்தால் 200+ என்பதெல்லாம் வாய்ப்பே அற்றதாக மாறிவிட்டது. ஏதோவொரு கூட்டணி ஒன்றாக இணைந்து ஒரு கேமியோவை அரங்கேற்றி இருந்தாலும் இன்னமும் சில ரன்கள் ஆர்சிபி கணக்கில் ஏறியிருக்கும், சவாலான இலக்கையும் நிர்ணயிக்க முடிந்திருக்கும். ஆர்சிபி தோற்றது டெத் ஓவர்களில் தான்.

Jaiswal

நாக் அவுட் போட்டிகளில் சேஸிங் என்பது கூடுதல் அழுத்தம்தான் என்றாலும் ராஜஸ்தானுக்கு பல சாதகங்களும் இருந்தது பக்கபலமானது. துரத்தக் கூடிய எளிய இலக்கு, பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவளிக்கும் களம், எதிரணியை திண்டாட வைக்கும் ஈரப்பதம் என ராஜஸ்தானை பல விஷயங்களும் ராஜ பாட்டையில் பயணிக்க வைத்தன. யாஷ் ஓவர்களில் இரு கேட்ச்கள் தவற விடப்பட்டன. க்ரீன் தவறவிட்ட ஜெய்ஸ்வாலின் கேட்சாவது ஓரளவு கடினமானது. ஆனால் மேக்ஸ்வெல்லோ கைக்கு வந்த கேட்சை விட்டு கோலருக்கு இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்தார். ஸ்வப்னில் மற்றும் சிராஜ் வீசிய டைட்டான ஓவர்கள் தவிர்த்து லெக் கட்டரால் ஃபெர்கூசன் கோலரை வெளியேற்றியது மட்டும்தான் பவர்பிளேயில் ஆர்சிபிக்கு சரியாக நடந்த விஷயம். இருப்பினும் ஏழாவது ஓவரிலேயே ஸ்வப்னில் அள்ளிக் கொடுக்க 64 ரன்களை எட்டிவிட்டது ராஜஸ்தான்.

ஒரு பக்கமாவே நகர வேண்டிய போட்டியினை உயிர்ப்போடு மாற்றியது க்ரீனின் ஓவர்தான், ஜெய்ஸ்வாலை அவர் வெளியேற்றிய அந்தத் தருணம்தான். அதன் தொடர் நிகழ்வுகள் தான் சாம்சனின் ஸ்டம்பிங், ஜுரேலின் ரன்அவுட் ஆகிய ராஜஸ்தானின் அபத்தங்களுக்கு எல்லாம் ஆணிவேராகின.

ஜுரேலினை ரன்அவுட் செய்த கோலியின் அதிவேகமும் துல்லியமும் ஏன் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக அவர் கொண்டாடப்படுகிறார் என்பதை நிரூபித்தது.
RCB

பராக் - ஹெட்மயர் கூட்டணிக்கு விக்கெட்டுக்களுக்கு இடையில் ஓடுவதில் மட்டுமே தடுமாற்றம் இருந்ததே ஒழிய இலக்கை நோக்கி அணியை நகர்த்துவதில் எந்த சிரமமும் இல்லை, தனது முதல் மூன்று ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே க்ரீன் கொடுத்திருந்தார். ஆனால் அவரது இறுதி ஓவரைக் குறிவைத்து அதில் மட்டுமே 17 ரன்களை இந்தக் கூட்டணி வேட்டையாடியது. பராக்கின் அந்த இன்சைட் அவுட் ஷாட் எல்லாம் தனிரகம். ஆர்சிபிக்கான ப்ரேக் த்ரூ இந்தக் கூட்டணி உடைந்த புள்ளியில்தான் கிடைத்தது. சிராஜ் ஒரே ஓவரில் இருவரது விக்கெட்டுக்களையும் வீழ்த்தி ஆர்சிபியின் பக்கம் ஆட்டத்தை திருப்ப முயன்றார். ஆனால் பவலின் மினி கேமியோ ராஜஸ்தானை சுலபமாக வெல்ல வைத்து விட்டது.

டெத் ஓவர்களில் நுழையும் வரை இரு அணிகளும் ஒரே பாதையில் தான் பயணித்து இருந்தன. பவர்பிளேயை ஆர்சிபி 50/1 ரன்களோடு முடித்திருக்க ராஜஸ்தானோ 47/1 என முடித்தது. மிடில் ஓவர்களிலோ அவை முறையே 75/4 மற்றும் 79/3 என வந்திருந்தன. ஆக டெத் ஓவர்தான் மாற்றத்தை ஏற்படுத்தியது. 47 ரன்களை மட்டுமே அடித்திருந்த ஆர்சிபி நல்ல ஃபினிஷிங்கைக் கொடுக்கத் தவறியது. ராஜஸ்தானோ ஆட்டத்தை முடுக்கி 4 ஓவர்களிலேயே தேவைப்பட்ட ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

வெற்றிக்கு மிக அருகில் போய் மீண்டும் தோல்விமுகத்தோடு ஆர்சிபி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

RCB

கடைசி ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத ராஜஸ்தான் இறுதியாக மிக முக்கியமான தருணத்தில் மீண்டிருக்கிறது.

இரண்டாவது தகுதிச்சுற்றில் சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.