RR v RCB: `கோலிக்கு ஆபத்தா? பாதுகாப்பு கருதி பயிற்சி செஷன் ரத்து; அஹமதாபாத்தில் என்ன நடக்கிறது?
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டியில் அஹமதாபாத்தில் இன்று நடக்கவிருக்கிறது. இந்நிலையில், விராட் கோலியின் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பும் பயிற்சி செஷனும் ரத்து செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஐ.பி.எல்-இல் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் பின்பும் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தப்படும். இதில் போட்டியில் மோதும் இரண்டு அணிகள் சார்பிலும் எதோ ஒரு வீரரோ பயிற்சியாளரோ வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதிலளிப்பர். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு பயிற்சி செஷன்கள் நடைபெறும். இதில் இரண்டு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபடுவர். இது அத்தனை போட்டிகளுக்கும் வழக்கமாக நடக்கக்கூடியது.
நேற்று அஹமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்திருந்தது. எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முந்தைய நாள் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் பயிற்சி செஷனில் ஈடுபட வேண்டும். பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும்.
ஆனால், நேற்று தகுதிச்சுற்றுப் போட்டி நடந்ததால் அவர்களுக்கு மைதானத்தை ஒதுக்கிக் கொடுக்க முடியவில்லை. இதனால் அருகிலிருந்த வேறொரு மைதானத்தில் இரண்டு அணிகளும் பயிற்சியில் ஈடுபடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் அஹமதாபாத் விமான நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நான்கு பேர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து அபாயகரமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அவர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் விராட் கோலிக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

இந்த விஷயம் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் என இரண்டு அணிகளுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் இரு அணிகளின் சார்பிலும் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் அணி வலைப்பயிற்சியில் மட்டும் ஈடுபட்டிருக்கிறது. ஆனால், பெங்களூரு வலைப்பயிற்சியையும் ரத்து செய்திருக்கிறது.

மே 18-ம் தேதி பெங்களூரு அணி சென்னை அணிக்கு எதிராக மோதியிருந்தது. அதன்பிறகு பெங்களூரு அணி வலைப்பயிற்சியிலேயே ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


