KKRvSRH: அடாவடி கொல்கத்தா; அதிரடி ஹைதராபாத்; இறுதிப்போட்டிக்குள் செல்லப் போகும் முதல் அணி எது?

ஒரு பரபரப்பான திரைப்படத்தின் க்ளைமாக்ஸை எட்டியதைப் போல இருக்கிறது நடப்பு ஐ.பி.எல். இன்று கொல்கத்தாவும் சன்ரைசர்ஸூம் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதவிருக்கின்றன. வெல்லும் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.
Pat Cummins and Sheryas Iyer

இரண்டு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள். ஒரு பக்கம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு ஊக்கமாக இருந்தால் இன்னொரு பக்கம் பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கைமிக்க தலைவனாக இருக்கிறார். வெல்லப்போவது யார்?

சன்ரைசர்ஸ் ஆரம்பத்தில் பிடித்த வேகத்தைக் கடைசி வரைக்கும் விடவே இல்லை. திரும்ப திரும்ப அதிகபட்ச ஸ்கோருக்கான ரெக்கார்டை உடைத்தவர்கள் கடைசி லீக் போட்டியில் கூட 215 ரன்களை சேஸ் செய்திருக்கிறார்கள். பேட்டிங்தான் அவர்களின் பெரிய பலம். இமாலய இலக்குகளை எட்டுவதைத் தங்களின் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, க்ளாசென் ஆகியோர் வெளுத்து வாங்குகிறார்கள்.

Travis head
ஹெட் 533 ரன்களை 201.13 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். அபிஷேக் 467 ரன்களை 209 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். க்ளாசனும் 180+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். திரிபாதி, நிதிஷ் ரெட்டி எல்லாம் க்ளாஸ். பேட் கம்மின்ஸ் வரைக்கும் பேட்டிங் இருக்கிறது.
Head & Abisheik

கொல்கத்தாவின் பௌலர்கள் பவர்ப்ளேயில் சீக்கிரமாக விக்கெட்டுகளை எடுக்கத் தவறும்பட்சத்தில் நிச்சயமாக சன்ரைசர்ஸ் அணி 250 ரன்களைத்தான் இலக்காக வைத்து முன்னேறும். நினைத்ததை எட்டவும் செய்வார்கள். கொல்கத்தா அணியாலும் பெரிய ஸ்கோர்களை எட்ட முடியுமெனினும் ப்ளே ஆப்ஸ் போன்ற ஒரு பெரிய ஆட்டத்தில் அது கூடுதல் அழுத்தத்தைதான் கொடுக்கும். சன்ரைசர்ஸை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விட்டாலே கொல்கத்தா அணிக்கு வெற்றிதான்.

கடைசியாக ஆடிய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 215 ரன்களை சேஸ் செய்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரை எடுத்துக்கொண்டால் முதலில் பேட்டிங் செய்வதைவிட சேஸ் செய்கையில் சன்ரைசர்ஸ் அணி கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருந்திருக்கிறது. எனவே சன்ரைசர்ஸை சேஸ் செய்ய வைத்து கொல்கத்தா ஒரு பெரிய ஸ்கோரை டார்கெட்டாக நிர்ணயித்தாலும் கொல்கத்தாவுக்கு வாய்ப்பு அதிகம். மேலும், சன்ரைசர்ஸின் பந்துவீச்சும் அத்தனை சீராக இல்லை. எவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்தாலும் அதை 90% திரும்ப கொடுத்து நெருக்கமாக வந்துதான் பல போட்டிகளை வென்றிருக்கின்றனர்.

Natarajan

புவனேஸ்வர் குமார், நடராஜன், பேட் கம்மின்ஸ் போன்றோர் பெரிய போட்டி என்பதால் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக வீசவும் வாய்ப்பிருக்கிறது. பலம், பலவீனங்களைத் தாண்டி பேட் கம்மின்ஸ் உலகக்கோப்பையை வென்ற மைதானம் இது. ஒரு லட்சம் ரசிகர்களை இங்கேதான் அமைதிப்படுத்தினார். அவர் தடம்பதித்த மைதானம். அவருக்கு பிடித்தமான மைதானம். அதனால் கூடுதல் உத்வேகத்துடன் அவர் களம் காணக்கூடும்.

கொல்கத்தா அணியில் சால்ட் இல்லை. எப்படி சன்ரைசர்ஸ் அணியில் ஹெட் - அபிஷேக் ஓப்பனிங் கூட்டணியோ அப்படித்தான் இங்கே சுனில் நரைனும் சால்ட்டும் இருவரும் கொடுக்கும் அதிரடி தொடக்கம்தான் கொல்கத்தா அணியின் பெரிய பலம். ஆனால், சால்ட் இப்போது இல்லை. அவர் சில நாட்களுக்கு முன்பே ஊருக்கு கிளம்பிவிட்டார். சால்ட்டுக்கு பதிலாக ரஹ்மானுல்லா குர்பாஸை அணியில் எடுக்கலாம் என்கிற ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால், கொல்கத்தா அணியின் கடைசி 2 போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டு நடைபெறாமல் போயிருந்தது. இதனால் சால்ட்டின் இடத்தை வேறொரு வீரரை வைத்து நிரப்பிப் பார்க்கும் வாய்பு கொல்கத்தாவுக்கு கிடைக்கவே இல்லை. இது சன்ரைசர்ஸூக்கு சாதகமாக முடிய அதிக வாய்ப்பிருக்கிறது.

Narine

ஓப்பனிங் கூட்டணியை சீக்கிரம் முறிக்கும்பட்சத்தில் கொல்கத்தாவை அசௌகரியப்படுத்த முடியும். குர்பாஸ் சீசனில் களமிறங்கும் முதல் போட்டியிலேயே செட்டில் ஆகி பெரிய இன்னிங்ஸ் ஆடுவாரா என்பது சந்தேகமே. பந்துவீச்சை பொறுத்தவரைக்கும் கொல்க்கத்தா அணியின் சுனில் நரைனும் வருண் சக்கரவர்த்தியும்தான் அவர்களின் பெரும் பலம். அவர்கள் வீசப்போகும் 8 ஓவர்கள்தான் முக்கியம். வருண் 18 விக்கெட்டுகளை 8 ஐ சுற்றிய எக்கானமி ரேட்டில் எடுத்திருக்கிறார். நரைன் 15 விக்கெட்டுகளை 6 ஐ சுற்றிய எக்கானமி ரேட்டில் எடுத்திருக்கிறார்.

KKR
ஆனால், அஹமதாபாத் மைதானத்தில் இந்த சீசனில் வேகப்பந்து வீச்சாளர்கள் 43 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள். ஸ்பின்னர்கள் 19 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள். ஆக, இயல்பிலேயே வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கொஞ்சம் கூடுதல் சௌகரியம் இந்த மைதானத்தில் கிடைக்கிறது.

இங்கேதான் ஸ்டார்க்கின் தேவை அதிகமாகிறது. ஸ்டார்க் 12 போட்டிகளில் 12 விக்கெட்டுகளைத்தான் எடுத்திருக்கிறார். ஒரு கோடிக்கு ஒரு விக்கெட் என்று வைத்தாலும் அவர் வாங்கப்பட்ட விலைக்கு இன்னும் பல விக்கெட்டுகளை எடுத்தால்தான் ஈடுகட்ட முடியும். ஸ்டார்க் அனுபவமிக்கவர். அதனால் பெரிய போட்டிகளில் அவரை நிச்சயமாக நம்பலாம். இந்த சீசனில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ஸ்டார்க் நாக் அவுட்டிலாவது நன்றாக வீச வேண்டும்.

SRH

இந்த சண்டையில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறும். அப்படி முன்னேறும் அணிக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னதாக போதுமான அளவுக்கு இளைப்பாறிக் கொள்ளவும் நேரம் கிடைக்கும். எனவே இந்தப் போட்டியிலேயே வென்று நேரடியாக இறுதிக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இரு அணியின் இலக்கும். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

எந்த அணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது உங்களது யூகத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.