CSK: ``தோல்விக்கு காரணம் இதுதான், இந்த சீசன் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது - ருத்துராஜ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் ப்ளேஆஃபிற்குள் செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
கடந்த ஐந்து 13 போட்டிகளில் 583 ரன்கள் என மிகச் சிறப்பாக அணிக்காக நின்று விளையாடி ஸ்கோர் செய்த சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ், நேற்றைய போட்டியில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகினார். இது சென்னை அணியின் மிகப்பெரும் சரிவாக அமைந்தது. இருப்பினும், இந்த சீசனில் மிகச்சிறப்பாக கேப்டன்ஸியையும், பேட்டிங் ஃபர்பான்ஸையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இம்பேக்ட் ப்ளேயராக நம்பிக்கையுடன் களமிறக்கப்பட்ட சிவம் துபே 15 பந்தகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்து RCB-யின் கச்சிதமான பந்துவீச்சு மற்றும் அட்டாக்கிங் ஃபீல்டிங்கால் திணறி, நல்ல விளையாடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்திராவையும் ரன் அவுட்டாக்கிவிட்டு, தானும் அடுத்த சில பந்துகளிலேயே அவுட்டாகி மிக மோசமான தருணத்தை ஏற்படுத்தினார். சென்னை அணியின் ப்ளேஆஃப் கனவு நொறுங்கியதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் முடிவில் பேசிய ருத்துராஜ், "தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். டி20 போட்டிகளில் இதுபோல் எதிர்பாராத விக்கெட்கள் வீழ்வது சகஜமான விஷயம்தான். இந்தத் தொடரின் 14 போட்டிகளில் 7 போட்டிகள் எங்களுக்குச் சிறப்பாக அமைந்தது. மற்ற போட்டிகள் அனைத்திலும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காயம் காரணமாக கான்வே வெளியேறினார். அதைத் தொடர்ந்து பதிரனாவும் அதே காரணத்தால் வெளியேறினார். முஸ்தப்பிசூர் ரஹ்மானும் பங்கேற்க முடியாமல் போனது.
இவை அணிக்கு எதிர்பாராத இழப்புகளாக அமைந்தன. இதனால் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் போனது. இந்த சீசனில் நான் சிறப்பாக விளையாடியது எனக்கு முக்கியமில்லை. அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியம். அவ்வகையில் இந்த சீசன் தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது" என்று மிகுந்த வருத்ததுடன் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


