RCB v CSK: இன்னைக்கு ஜெயிக்கிறவங்கதான் கப்பையும் ஜெயிப்பாங்க! - கமெண்டேட்டர் நானி சிறப்புப் பேட்டி

ஐ.பி.எல் தமிழ் கமெண்ட்ரியில் கலக்கி வரும் வர்ணனையாளர் நானியுடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நடப்பு ஐ.பி.எல் சீசன் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். அவரின் பேட்டி இங்கே...
Nanee

கமெண்ட்ரி என்பது ஒரு தனித்துவமான கலை. இதில் உங்களை எப்படி நிலைப்படுத்திக் கொண்டீர்கள்?

"நானும் ஒரு கிரிக்கெட் பிளேயர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். இப்போது கமெண்ட்ரியில் இருக்கும் வீரர்கள் பலருடனும் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். ஒரு பார்வையாளராக இருந்து கிரிக்கெட்டைப் பேசுவதை விட வீரராக இருந்து கிரிக்கெட்டைப் பேசுவதில் கூடுதல் நுணுக்கம் இருக்கும். 2007 டி20 உலகக்கோப்பையிலிருந்து கமெண்ட்ரி செய்து வருகிறேன். இப்போது வரை நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய கணிப்புகள் பல சமயத்தில் அப்படியே பலிக்கும். அதை நானி ஜோசியம் என அடையாளப்படுத்துவார்கள். ஜோசியமெல்லாம் ஒன்றும் இல்லை. இத்தனை வருடங்களாக கிரிக்கெட்டுடன் இணைந்தே பயணிப்பதால் கிடைத்த அனுபவத்தின் வழி சில விஷயங்களைச் சரியாக கணிக்க முடிகிறது. அவ்வளவுதான்."

Nanee

2007 முதலே டி20-க்களைக் கவனித்து வருகிறீர்கள். இப்போது டி20-க்கள் அடைந்திருக்கும் பரிணாமத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"டி20 இப்போது பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது. முன்பெல்லாம் பவர்ப்ளேயில் முதல் 4 ஓவர்களுக்கு அடித்து ஆடுவார்கள். அதன்பிறகு மிடில் ஓவர்களில் மெதுவாக ஆடிவிட்டு டெத் ஓவர்களில்தான் மீண்டும் அட்டாக் செய்வார்கள். ஆனால், இப்போது நிலைமை வேறு. களத்தில் இறங்கிய முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்குகிறார்கள். இறுதிவரை அந்த வேகத்தை விடாமல் பிடித்துக் கொள்கிறார்கள். இம்பாக்ட் பிளேயர் போன்ற விதிமுறைகள் இதற்குச் சாதகமாக அமைகிறது. கூடுதலாக ஒரு பேட்டர்தானே இருக்கிறார் என நினைக்கலாம். ஆனால், கூடுதலாக ஒரு விக்கெட் இருப்பது எல்லா வீரர்களுக்கும் ஒருவித சுதந்திரத்தைக் கொடுக்கிறது. அவர்களால் அழுத்தமின்றி ஆட முடிகிறது. அதனால்தான் ஓடிஐயில் அடிக்கப்படும் ஸ்கோர்களையெல்லாம் டி20 யிலேயே பார்க்கிறோம். இந்த மாதிரியான போக்கெல்லாம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என சிலர் விமர்சிக்கிறார்கள். அதில் எந்த நியாயமும் இல்லை. ரசிகர்களின் தரப்பிலிருந்து இதைப் பார்க்க வேண்டும். இது ஒரு பொழுதுபோக்கு. இங்கே ரசிகர்கள் பெரிய பெரிய சிக்ஸர்களையும் 250 ஸ்கோர் ஆட்டங்களையும் பார்க்கத்தான் விரும்புவார்கள். ஆங்காங்கே ஒரு சில சமயங்களில் மட்டும் லோ ஸ்கோர் ஆட்டங்கள் இருந்தால் போதும். கெரி பேக்கரே கிரிக்கெட்டை இன்னும் பெரிய பொழுதுபோக்காக மாற்ற வேண்டும் என்றுதான் பல விஷயங்களைப் புதிதாக அறிமுகப்படுத்தினார். தூய்மைவாதத்தோடு கிரிக்கெட் பார்க்க விரும்புபவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்கலாம். அங்கே உங்களுக்கு வேண்டியவை எல்லாம் கிடைக்கும். டி20 கிரிக்கெட் இப்படி ஒரு பொழுதுபோக்காக இருப்பதுதான் நல்லது."

நடப்பு சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக மும்பை அணி முடித்திருக்கிறது. கேப்டன்சி மாற்றம்தான் அவர்களின் பிரச்னையா... எங்கேதான் அவர்கள் சொதப்பினார்கள்?

Rohit Sharma

"நீங்கள் கேட்பது சரிதான். கேப்டன்சி மாற்றம்தான் அவர்களின் பெரிய பிரச்னை. சுமாரான ஊழியர்களை வைத்துக் கொண்டே ஒரு நிறுவனத்தால் சிறப்பான லாபத்தை ஈட்ட முடியும். அதற்கு அந்த வீரர்களிடம் ஒரு குழு மனப்பான்மை இருக்க வேண்டும். அணியாக இணைந்து செயல்பட வேண்டும். மும்பையிடம் அதுதான் பிரச்னை. ஹர்திக் பாண்டியா, புதிய கேப்டனாக அறிவிக்கப்படுகிறார். அதற்கு ரோஹித்தின் மனைவி எதோ ட்வீட் செய்கிறார். பும்ராவும் சூர்யாவும் ரோஹித்துக்கு ஆதரவாகப் பதிவுகளை வெளியிடுகிறார்கள். இதுதான் சிக்கல். நாங்களெல்லாம் ஒரே குடும்பம். வருங்காலத்திற்காக இனி ஹர்திக் கேப்டனாக இருப்பார் என ஒரு அறிக்கையோ அல்லது ஹர்திக்கின் தோள் மீது கைப்போட்டு ஒரு புகைப்படத்தையோ ரோஹித் வெளியிட்டிருந்தால் பிரச்னையே வந்திருக்காது. சொல்லப்போனால் தொடருக்கு முன்பாக பிளே ஆஃப்ஸ் செல்ல வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் மும்பையும் இருந்தது. கேப்டன்சி மாற்றம் உண்டாக்கிய விளைவுகள்தான் அந்த அணியின் சரிவுக்குக் காரணம்."

சென்னை அணி இந்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறதே?

Ruturaj Gaikwad

"ஆம், சென்னை அணியில் தோனியிடமிருந்து ருத்துராஜூக்கு கேப்டன்சி எந்தச் சங்கடமும் இல்லாமல் கைமாற்றப்பட்டிருக்கிறது. ருத்துராஜூம் சிறப்பாகச் செயல்படுகிறார். தோனி 2007-லிலிருந்து ஒரு பெரும் சகாப்தமாக பெரும் ஆளுமைத்தன்மையோடு செயல்பட்டிருக்கிறார். பல கோப்பைகளை வென்றிருக்கிறார். ஒரே ஒரு சீசனில் கேப்டன்சி செய்திருக்கும் ருத்துராஜை தோனியோடு ஒப்பிடுவதில் நியாயமில்லை. ஆனாலும் ருத்துராஜ் நன்றாகத்தான் செயல்படுகிறார். கேப்டன்சியால் அவரது தனிப்பட்ட செயல்பாட்டிலும் எந்தப் பாதிப்பும் இல்லை. முன்னதாக ஜடேஜா கேப்டனாக்கப்பட்ட போது அவர் கடுமையாகச் சொதப்பினார். பேட்டர், பௌலர் என்பதைத் தாண்டி அவர் ஒரு நல்ல பீல்டர். ஆனால், அவர் கேட்ச்சுகளையெல்லாம் தவறவிட்டார். அதனால்தான் தோனியே மீண்டும் கேப்டன் பதவியை வாங்கிக்கொண்டார். ஆனால், ருத்துராஜ் அப்படியில்லை. பேட்டிங்கில் அவரின் தாக்கம் குறையவே இல்லை. மேலும் அவருக்கு வழிகாட்டுவதற்கு தோனி இருப்பதால் பிரச்னையே இல்லை."

தோனிக்கு இதுதான் கடைசி சீசனா?

Dhoni

"தோனி என்ன முடிவை எப்போது எடுப்பார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால், தோனி ஏன் இப்போது ஓய்வை அறிவிக்க வேண்டும். இப்போதும் பெரிய சிக்ஸர்களைப் பறக்கவிடுவார். ஒருவேளை பெங்களூருக்கு எதிரான போட்டியில் திடீரென பேடை கட்டிக்கொண்டு நம்பர் 3-இல் வருகிறார் என வைத்துக் கொள்வோம். அப்போதும் அவரால் நாம் எதிர்பார்க்காத மேஜிக்குகளை செய்ய முடியும். நன்றாக ஆடிக்கொண்டிருப்பவர் எதற்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்? தோனி ஆடும் வரை அவர் சார்ந்த ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாடுவோம்."

உங்களுடைய கணிப்புகளுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. நீங்கள் சொல்லுங்கள் சென்னை Vs பெங்களூரு போட்டியில் வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் கோப்பையை தட்டிச்செல்லப் போவது யார்?

RCB v CSK

"பெங்களூரு அணி இரண்டாம் பாதியில் சிறப்பாக கம்பேக் கொடுத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் வில் ஜாக்ஸ். அவர்தான் அதிரடியாக ஒரு மொமண்டமை உருவாக்கிக் கொடுத்தார். கோலி ஏற்கெனவே பார்மில் இருந்தார். அவருக்கு உறுதுணையாக இன்னொரு வீரர் வரும்போது கூடுதல் உத்வேகத்துடன் ஆடுகிறார். வெற்றிகளும் கிடைக்கின்றன. அது அணியின் மற்ற வீரர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. சிராஜ் உட்பட பௌலர்கள் சிறப்பாக வீசத் தொடங்கியிருக்கின்றனர். தற்போதைய சூழலுக்கு நல்ல பார்மில் இருக்கிறார்கள். பேப்பரில் ஒப்பிட்டால் சென்னையை விட பெங்களூர்தான் பலமான அணி. அவர்கள் ஊரிலேயே வைத்து சென்னையை எதிர்கொள்கிறார்கள். இத்தனையும் இருந்தாலும் சென்னைதான் வெல்லும். காரணம், தோனி ஃபேக்டர். இந்த மாதிரியான பெரிய போட்டியில் தோனி போன்ற வீரர் அணியில் இருப்பதே பெரும்பலம். ஆக, சென்னைதான் வெல்லும். இறுதிப்போட்டி சென்னைக்கும் சன்ரைசர்ஸூக்கும் நடக்கும். சேப்பாக்கத்தில் நடப்பதால் சென்னைக்குதான் வாய்ப்பு அதிகம். இது எல்லாமே கணிப்புதானே. ஒருவேளை பெங்களூரு அணி வென்று பிளேஆஃப்ஸ் சென்றால் கவலையே வேண்டாம். அவர்களுக்குதான் கோப்பை. மொத்தத்தில் சென்னை vs பெங்களூரு போட்டியில் வெல்பவரே கோப்பையையும் வெல்வார் என எடுத்துக்கொள்ளலாம்."

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.