சஞ்சு சாம்சன், தனது திறமையை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவார் -கவுதம் கம்பீர்

இந்த 2024 ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு, இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவிருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 504 ரன்கள் விளாசி ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃபிற்குச் செல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வாகி, டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடவிருக்கிறார்.

சஞ்சு சாம்சன்

இந்நிலையில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், சஞ்சு சாம்சனைப் பாராட்டி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய கம்பீர், "ஒரு கிரிக்கெட் வீரரை ஐந்து நிமிடம் பார்த்தாலே அவர் எப்படி விளையாடுவார் என்று சொல்லிவிடுவேன். சஞ்சு சாம்சன் விளையாடுவதை இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பார்த்தேன். மிகச் சிறந்த பேட்டர் அவர்.

இந்த ஐபிஎல் தொடர் ராஜஸ்தானுக்காக 14 போட்டிகளில் 504 ரன்களைக் குவித்து அணிக்கு பலம் சேர்த்திருக்கிறார். அதேபோல, இந்திய அணிக்காகவும் வரும் உலகக் கோப்பைத் தொடரில் அர்ப்பணிப்புடன் விளையாடுவார். இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுவார் என்பதில் சந்தேகமேயில்லை.

கவுதம் கம்பீர்

அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது அவருக்கு ஒன்றும் புதிது கிடையாது. இதற்கு முன்னரே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியிருக்கிறார். பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்படுவார். அவர் யார் என்று அனைவருக்கும் காட்டுவதற்கும், தன் திறமையை வெளிப்படுத்துவற்கும் அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்" என்று சஞ்சு சாம்சனைப் பாராட்டி பேசியிருக்கிறார் கவுதம் கம்பீர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.