IPL Playoff Explainer: RCB, CSK இரண்டுமே தகுதிபெறலாமா? பிளே-ஆஃப் செல்ல அணிகள் என்ன செய்ய வேண்டும்?
நடப்பு ஐ.பி.எல் தொடரில் லீக் சுற்றில் மிதமிருப்பது வெறும் 8 போட்டிகள்தான். இருந்தாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தவிர்த்து எந்த அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுவதை இன்னும் உறுதிசெய்யவில்லை. மும்பை, பஞ்சாப் தவிர்த்து அனைத்து அணிகளுமே பிளே-ஆஃப் வாய்ப்புக்காக முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் என்ன செய்தால் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற முடியுமென இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
With a Q to their name, #KKR stand tall at the of the points table
— IndianPremierLeague (@IPL) May 12, 2024
Time is running out for the others to qualify for the #TATAIPL playoffs‼️ @KKRiders pic.twitter.com/j03BMgSJMU
சென்னை சூப்பர் கிங்ஸ்
தற்போதைய நிலை: வெற்றி - 7, தோல்வி - 6, நெட் ரன்ரேட் - +0.528
மீதமிருக்கும் போட்டி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது, சென்னை அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு மிக அருகில் கொண்டு சென்றிருக்கிறது. தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி தனது கடைசி போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ஏற்கெனவே நல்ல நெட் ரன் ரேட் இருப்பதால் அந்தப் போட்டியில் வெற்றிபெற்றாலே 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்துவிடும் சென்னை. லக்னோ அணி 16 புள்ளிகளை எட்டினாலும் நெட் ரன்ரேட்டில் (-0.769) சென்னை அணியை நெருங்கவே முடியாது என்பதே நிதர்சனம்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் சென்னைக்குத் தகுதிபெற வாய்ப்பிருக்கிறது. அதற்கு லக்னோ அல்லது சன்ரைசர்ஸ் அணிகளில் ஏதேனும் ஒரு அணி 16 புள்ளிகளை எட்டாமல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் பெங்களூருடன் சென்னை தோற்கலாம், ஆனால் பெரிய அளவில் தோற்கக்கூடாது. நெட் ரன்ரேட்டில் பெங்களூருவை விட முன்னிலையில் இருக்க அதிகபட்சமாக 18 ரன்களுக்கும் குறைவான வித்தியாசத்தில் சென்னை தோற்றால் பிரச்னை இல்லை. முதல் பேட்டிங் என்றால் 18 ஓவர்களுக்குள் பெங்களூரை சேஸ் செய்யவிடக்கூடாது. (இந்த கணக்குகள் இலக்கைப் பொறுத்து சற்றே மாறும்). அப்படிச் செய்தால் சென்னை தகுதிபெற்றுவிடும்.
ஒருவேளை லக்னோ, சன்ரைசர்ஸ் இரண்டு அணிகளுமே 16 புள்ளிகளை எட்டமுடியாமல் போனால் சென்னை, பெங்களூரு என இரண்டு அணிகளுமே தகுதிபெற வாய்ப்புகள் உண்டு. ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் அடுத்த போட்டிகளில் சொதப்பினால் முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் வாய்ப்பு கூட சென்னை அணிக்கு இன்னும் இருக்கிறது. அது நடந்துவிட்டால் என்ன நடந்தாலும் தோனியின் இறுதிப்போட்டி சென்னையில்தான் என்பதும் முடிவாகிவிடும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தற்போதைய நிலை: வெற்றி - 6, தோல்வி - 7, நெட் ரன்ரேட் - +0.387
மீதமிருக்கும் போட்டி - சென்னை சூப்பர் கிங்ஸ்

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்று முடியாததை முடித்துக் காட்டும் முனைப்பில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது பெங்களூரு அணி. இந்த ஐந்து வெற்றிகளைப் பெரிய வெற்றிகளாகவும் மாற்றி நெட் ரன் ரேட்டில் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது. இருந்தும் சில போட்டிகள் எதிர்பார்த்தது போல நிகழ்ந்தால் மட்டுமே பெங்களூரு தகுதிபெற வாய்ப்பிருக்கும். லக்னோ, சன்ரைசர்ஸ் இரண்டு அணிகளுமே 16 புள்ளிகளை எட்டிவிட்டால் பெங்களூரு வெளியேற்றப்படும். கடைசி போட்டியில் சென்னையை வென்றாலும் எந்தப் பயனும் இருக்காது. அப்படி நடக்கவில்லை என்றாலும் நல்ல வெற்றியைச் சென்னை அணிக்கு எதிராகப் பதிவுசெய்யவேண்டியது அவசியம்.
200+ அடித்தால் 18-க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டியது இருக்கும். இந்தப் போட்டிக்கு முன்பாகவே லக்னோவின் இரண்டு போட்டிகளும் முடிந்திருக்கும் என்பதால் போதிய தெளிவுடனே இறுதிப்போட்டியில் பெங்களூரு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் வரும் சனிக்கிழமை பெங்களூரு, சென்னை மோதும் இந்தப் போட்டி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இருக்கும்.
டெல்லி கேபிட்டல்ஸ்
தற்போதைய நிலை: வெற்றி - 6, தோல்வி - 7, நெட் ரன்ரேட் - -0.482
மீதமிருக்கும் போட்டி- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
நேற்று பெங்களூருக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியதன் மூலம் கிட்டத்தட்ட பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது டெல்லி அணி. ஹைதராபாத், சென்னை, பெங்களூரு அணிகளுடன் ஒப்பிடுகையில் நெட் ரன்ரேட் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் 14 புள்ளிகளை எட்டினாலும் டெல்லி தகுதிபெறுவதற்கான வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவுதான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து, சென்னை அணி பெங்களூரை வென்று, லக்னோ அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோற்றால் மட்டுமே டெல்லியால் தகுதிபெற முடியும். இரண்டு போட்டியையும் சேர்த்து ஏறத்தாழ 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கவேண்டும் சன்ரைசர்ஸ். அப்படித் தோற்றாலும் மீதமிருக்கும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் டெல்லி. இது அரங்கேறுவதற்கான வாய்ப்புகள் அரிதிலும் அரிதாகவே தெரிகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ்
தற்போதைய நிலை: வெற்றி - 8, தோல்வி - 4, நெட் ரன்ரேட் - 0.349
மீதமிருக்கும் போட்டிகள் - பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

சிறப்பாக ஆடி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்விகளால் தற்போது பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஏற்கெனவே 16 புள்ளிகளை எட்டிவிட்டாலும் இன்னும் மூன்று அணிகளால் (சென்னை, லக்னோ, சன்ரைசர்ஸ்) 16 புள்ளிகளை எட்டமுடியும் என்பதால் இன்னும் ராஜஸ்தான் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுவது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. ஆனால், அந்த மூன்று அணிகளில் ஒன்றான லக்னோவின் நெட் ரன்ரேட் மிகவும் குறைவாக உள்ளதால் எப்படியும் ராஜஸ்தான் அணி தகுதிபெற்றுவிடும் என்பதே நிதர்சனம். மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்தால் முதல் இரண்டு இடங்களில் முடித்து குவாலிஃபையர் 1 ஆடுவதை உறுதிசெய்யலாம் ராஜஸ்தான். மீதமிருக்கும் இரண்டு போட்டிகளையும் கவுகாத்தி மைதானத்தில் ஆடுகிறது ராஜஸ்தான்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
தற்போதைய நிலை: வெற்றி - 7, தோல்வி - 5, நெட் ரன்ரேட் - +0.406
மீதமிருக்கும் போட்டிகள்: குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ்

ஏற்கெனவே நல்ல ரன்ரேட் இருப்பதால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றாலும் 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்துவிடும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத். லக்னோவின் பரிதாபகரமான நெட் ரன் ரேட்தான் இதற்கும் காரணம். இரண்டு வெற்றிகளைப் பெற்றுவிட்டால் முதல் இரண்டு இடங்களில் கூட ஹைதரபாத் அணியால் முடிக்க முடியும். ஆனால் இரண்டு போட்டிகளையும் தோற்றால் சென்னை, பெங்களூரு அணிகள் நெட் ரன் ரேட்டில் சன்ரைசர்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளித் தகுதிபெற வாய்ப்புகள் உள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
தற்போதைய நிலை: வெற்றி- 6, தோல்வி- 6, நெட் ரன்ரேட்- -0.769
மீதமிருக்கும் போட்டிகள்: டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ்

லக்னோவுக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமிருந்தாலும் நெட் ரன்ரேட் கவலைக்கிடமாக இருப்பதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கப்போகிறது. சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே 16 புள்ளிகளை எட்டினால் எப்படியும் நெட் ரன்ரேட் அடிப்படையில் வெளியேறும் லக்னோ. அதனால் ஏதேனும் ஒரு அணியாவது 16 புள்ளிகளை எட்டாமல் இருந்து லக்னோ 16 புள்ளிகளை எட்டினால் மட்டுமே லக்னோ தகுதிபெறும்.
குஜராத் டைட்டன்ஸ்
தற்போதைய நிலை: வெற்றி - 5, தோல்வி - 7, நெட் ரன்ரேட் - -1.063
மீதமிருக்கும் போட்டிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

குஜராத் அணியால் 14 புள்ளிகளை எட்டமுடியும் என்றாலும் மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் அவர்களது நெட் ரன்ரேட் அவர்கள் வெளியேறுவதை இப்போதே உறுதிசெய்துவிட்டது. மீதமிருக்கும் போட்டிகளில் வென்றாலும் இப்போதே நான்கு அணிகள் 14 அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளுடன் இருப்பதால் குஜராத் தகுதிபெறுவது என்பது கணித ரீதியாக வாய்ப்பிருந்தாலும் நடைமுறையில் சாத்தியமில்லை.
மும்பை, பஞ்சாப் அணிகள் அதிகபட்சமாக 12 புள்ளிகளுக்குத்தான் வரமுடியும் என்பதால் ஏற்கெனவே அந்த அணிகள் தகுதி இழந்தது உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஒரே அணியாக புள்ளிப்பட்டியலில் பெயரின் அருகில் Q வைத்திருக்கும் கொல்கத்தா அணி நல்ல நெட் ரன்ரேட்டுடன் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதையும் இப்போதே ஏறத்தாழ உறுதிசெய்துவிட்டது. அதனால் போட்டி என்பது மேலே குறிப்பிடப்பட்ட அணிகளுக்கிடையேதான். பல முக்கிய போட்டிகள் நடக்கவிருக்கும் இந்தக் கடைசி வாரத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்பது மட்டும் உறுதி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


