IPL 2024: ``நீ என்ன நினைக்கிறாயோ அதைச் செய்யலாம் - ருத்துராஜுக்கு தோனி சொன்ன அறிவுரை!
ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 12 லீக் போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இருப்பினும் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் கொஞ்சம் பாசிட்டாவாக இருப்பதால் எதிர்வரும் இரண்டு போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்பிருக்கிறது. அவ்வகையில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் இடையேயான இன்றையப் போட்டி மிகவும் முக்கியமானது.
இந்நிலையில் சமீபத்தில் சிஎஸ்கே கேப்டன்ஸி குறித்து பேசியிருக்கும் ருத்துராஜ், "கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது ஒருவேளை சிஎஸ்கே அணியின் கேப்டனாக நான் இருந்தால் என்ன முடிவுகளெல்லாம் எடுப்பேன், ஃபீல்டிங், பேட்டிங் ஆர்டர்கள் எப்படி அமைப்பேன் என்றெல்லாம் நிறைய யோசித்துப் பார்த்திருக்கிறேன்.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாகவே ஆகியிருக்கிறேன். கேப்டன்ஸியை என்னிடம் தரும்போது தோனி என்னிடம் சொன்னது, "நீ என்ன நினைக்கிறாயோ அதைச் சுதந்திரமாக நீ செய்யலாம். உன்னுடைய முடிவில் நான் தலையிட மாட்டேன். ஒருவேளை இக்கட்டான சூழ்நிலையில் என்னுடைய உதவி தேவையென்றால் நிச்சயம் செய்வேன். அதுவும் 50 -50 என உன்னுடைய முடிவும், என்னுடைய முடிவும் சேர்ந்துதான் இருக்கும். நானாக எதையும் செய்ய மாட்டேன் என்று கூறினார். ஃபீல்டிங்கில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால் தோனியின் கண்களைப் பார்பேன். அவர் கண்களின் அசைவை வைத்து அவர் சொல்ல வருவதைப் புரிந்துகொண்டு அதைச் செய்வேன்" என்றார்.
தோனியுடனான நெகிழ்ச்சியான நினைவைப் பகிர்ந்து கொண்ட ருத்துராஜ், "மகாராஷ்டிரா அணிக்காக முதல் ரஞ்சிப் போட்டியில் நான் ஜார்க்கண்டுக்கு எதிராக ஆடும்போது, அந்த அணியின் ஆலோசகராக தோனி இருந்தார். அப்போட்டியின்போது காயம் ஏற்பட்டு கையில் பிளாஸ்திரி போட்டிருந்தேன். அந்தச் சமயத்தில் தோனி என்னிடம் வந்து கை எப்படி உள்ளது, என்ன க்ளவுஸ் பயன்படுத்துகிறாய் என அக்கறையுடன் கேட்டறிந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ஒருவர் கிரிக்கெட்டில் தொடக்க கட்டத்தில் உள்ள என் மீது இவ்வளவு அக்கறை எடுத்து பேசியது ஆச்சரியமாக இருந்தது. அப்போது பிளாஸ்திரியில் GET WELL SOON என ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். பிறகு அறுவை சிகிச்சையின்போது, பிளாஸ்திரியில் உள்ள தோனியின் ஆட்டோகிராஃபை பத்திரமாக வைக்கச் சொன்னேன். ஆனால், அவர்கள் மறந்துவிட்டார்கள்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


