`இதுக்கெல்லாம் ரிவ்யூவா? - அதிகரித்திருக்கும் அம்பயரிங் சர்ச்சைகள்; தொழில்நுட்பம் வரமா, சாபமா?

அம்பயரிங் - சவால்களாலும் சர்ச்சைகளாலும் புனையப்பட்ட பணி. ஐபிஎல்லில் தொடரும் அம்பயரிங் சர்ச்சைகள் கள அம்பயர்களின் உரிமைகள் பறிக்கப்படும் புள்ளியை நோக்கி நம்மை நகர்த்துகின்றனவா?

நடப்பு ஐபிஎல்லுக்காக Smart Review System (SRS) என்ற ஒன்றை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. எடுக்கப்படும் முடிவுகளில் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் புகுத்துவதுதான் இதன் நோக்கம். பால் டிராக்கிங்கிற்காகவும், அல்ட்ரா எட்ஜ்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஹாக்-ஐ இம்முறை இன்னமும் தரம் உயர்த்தப்பட்டிக்கிறது. மைதானத்தைச் சுற்றி நிறுவப்பட்டுள்ள எட்டு கேமராக்களால் நொடிக்கு 300 ஃப்ரேம் என்ற கணக்கில் காட்சிப்பதிவுகள் காணக்கிடைக்கும்.

மைதானத்தைச் சுற்றி வரும் கேமரா

சைட் ஆன், ஃப்ரன்ட் ஆன் கோணங்களில் கிடைக்கும் இக்காட்சிகளால் ஸ்டம்பிங், ஓவர் த்ரோ, கேட்ச், ரன்அவுட் அத்தனையிலும் முடிவெடுப்பது சுலபமாக்கப்படுவதோடு அதிவேகமாகும். மூன்றாவது அம்பயருடன் அமர்த்தி வைக்கப்படும் ஹாக்-ஐ வல்லுநர்களால் கிரிக்கெட் ஞானமும், தொழில்நுட்பமும் கைகோர்த்து சரியான முடிவெடுக்க உதவும். இதற்குரிய சிறப்புப் பயிற்சிகள்கூட அம்பயர்களுக்குத் தரப்பட்டன. இத்தனையும் மீறி இந்த சீசன்தான் முன்பிலும் அதிகமான சர்ச்சைகளைக் காட்சிப்படுத்திக் கொண்டுள்ளது. வொய்டு, உயரத்திற்கான நோ பால் பிரச்னை, சிக்ஸரா பவுண்டரியா என்பதில் குழப்பங்கள், மூன்றாவது அம்பயருக்கும், கள அம்பயருக்கும் தொடர்பு இடைவெளி இருக்கிறதோ என்றே சந்தேகிக்க வைக்கும் தருணங்கள் என முடிவிலியாய் நீளுகின்றன. ஒவ்வொரு முடிவு குறித்த ஆதரவும், எதிர்ப்பும் கிரிக்கெட் வல்லுநர்களிடம் தொடங்கி ரசிகர்கள் வரை பொதுவெளிகளில் பேசுபொருளாகின்றன.

கே.கே.ஆருக்கு எதிரான போட்டியில் கோலி ஆட்டமிழந்த விதம் விவாதப்பொருளானது. இடுப்பிற்கு மேல் உயர்ந்த பந்துக்கு நோ பால் கொடுக்காமல் அம்பயர் அவுட் கொடுத்திருக்கிறார் என்பதே பலரின் ஆதங்கமும். ஆனால் ஹாக்-ஐ தொழில்நுட்பம் நெற்றிக்கண்ணைத் திறந்து `குற்றம் குற்றமே என கோலி Popping Crease-ல் இருந்து நகர்ந்து முன்பாக வந்திருந்ததையும், பால் டிராக்கிங்கில் அந்த ஸ்லோ பால் க்ரீஸுக்கு வருகையில் Dip ஆவதையும் காட்டியிருந்தது. ஹாக்-ஐ விழிப்போடுள்ளதென மகிழும் கால அவகாசம் கூடத்தராமல், சுனில் நரைன் வீசிய பந்து க்ரீஸ் நோ பாலாக இருந்தும் அது ஃபேர் டெலிவரியாகக் கணக்கு வைக்கப்பட்டது. பிரபுதேஷாய் அடித்த பந்து சிக்ஸரா பவுண்டரியா என்பது ஏற்படுத்திய குழப்பம் எல்லாம் அம்பயர்களின் கவனக்குறைவால் தொழில்நுட்பமும் தோற்றுப்போன தோற்றமளித்தது.

காயின் டாஸ்

மிகவும் மோசமான அம்பயரிங் தவறுகளை மும்பை - ஆர்.சி.பி போட்டி பார்த்தது. மேட்ச் ரெஃப்ரி ஸ்ரீநாத் டாஸ் போட்ட காயினின் பக்கத்தை மாற்றினார் என்று சிறு அதிர்வாகத் தொடங்கிய சர்ச்சை பேரலையானது. கீழே விழும் நாணயம் கேமராவில் காட்டப்படத் தொடங்கியது, கே.கே.ஆர் - மும்பை போட்டியில் கிளம்பிய டாஸ் பஞ்சாயத்துகள்கூட இதன் கிளைக்கதைகளே. ஆர்.சி.பி-க்குத் தரப்பட்டிருக்க வேண்டிய வொய்டு மறுக்கப்பட்டது, மும்பைக்கான ரிவ்யூக்கள் முடிந்த பிறகும் ரிவ்யூக்கு அனுமதித்தது, லாம்ரோர் ஆட்டமிழந்த விதம் என வரிசையாக அப்போட்டியில் அம்பயர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டது.

தினேஷ் கார்த்திக்கிற்கு இடுப்பளவிற்கு மேல் வந்த பந்துக்கு நோ பால் தரப்படவில்லை. எல்லா வீரர்களது உயரமும் க்ரீஸில் நிற்கையில் அளக்கப்பட்டு உள்ளதாகவும், அந்தத் தரவுகளோடு குறிப்பிட்ட பந்து அடையும் உயரமும் ஒப்பிடப்பட்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டது. கோலி விஷயத்திலாவது அவர் எல்லை தாண்டினார் என்பதால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தினேஷ் கார்த்திக்கோ க்ரீஸுக்கு உள்ளே நின்றும் பந்து அந்த பொஷிசனில் அவரது இடுப்புக்கு மேல் நகர்ந்தும்கூட நோ பால் மறுக்கப்பட்டதன் மர்மம்தான் அவிழவில்லை‌.

அம்பயரிங் சர்ச்சைகள்

குஜராத் - லக்னோவுக்கு இடையிலான போட்டியில், மோகித் சர்மா வீசிய பந்தொன்றினை கள அம்பயர் வொய்டாக அறிவிக்க, கேப்டன் கில் ரிவ்யூவுக்கு சென்றார். அதை சரிபார்த்த மூன்றாவது அம்பயர், "தங்களது முடிவு சரிதான், அது வொய்டு அல்ல" என்றுகூற, குழப்பம் உண்டாக, தான் வொய்டு என்ற முடிவையே கூறியிருப்பதை கள அம்பயர் நினைவூட்ட மீண்டும் சரிபார்த்த அவர் வொய்டு என அறிவித்தார். ஏற்கெனவே ஐபிஎல்லை ஸ்க்ரிப்ட் எனக் கூறிவரும் ஒருசில ரசிகர்களுக்கு இவையெல்லாம் நாடகத்தில் பேசமறந்த வசனங்கள் போலவே காட்சியளித்தன. இவை தவிர்த்து குஜராத்துக்கு எதிரான போட்டியில் ப்ரித்வி ஷா ஆட்டமிழக்க வைத்த நூர் அஹ்மத்தின் கேட்ச், மும்பைக்கு எதிராக ஆயுஸ் பதோனி ரன்அவுட் என்ற முடிவு, ராஜஸ்தானுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் ரன்அவுட் இல்லை என்ற முடிவு, லக்னோவுக்கு எதிரான போட்டியில் தோனிக்குக் கொடுக்கப்பட்ட வொய்டு என சர்ச்சைகள் ஸ்மார்ட் ரிவ்யூ சிஸ்டத்திற்கே டிஆர்எஸ் கேட்க வைக்கின்றன.

இந்தச் சர்ச்சைகள் உண்டாக்கி உள்ள தார்மீக ரீதியிலான கோபம்தான் டாம் மூடியை Specialised Third Umpire என்ற வாதத்தை முன்வைக்க வைத்தது, ஏபிடி வில்லியர்ஸை வொய்டுக்கான வரையறையை தெளிவுபடுத்துங்கள் என்று பேசவைத்தது, கள அம்பயரிங் முழுவதுமே கணினிமயமாக்கப்பட்டு Artificial Intelligence முன்மொழிவதை அம்பயர் வழிமொழிவதாக மாற்றுங்கள் என்றெல்லாம் பேச வைத்துள்ளது. பல அம்பயர்கள் இன்னமும் சிறப்பாகவே பணியாற்றுகையில் ஓரிருவர் தவறிழைப்பதற்காக ஒட்டுமொத்த அம்பயர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எவ்வகையில் சரியாகும்?
ஏபிடி வில்லியர்ஸ்

அம்பயரிங் சவால்களாலும் சர்ச்சைகளாலும் புனையப்பட்ட பணி. அதனால்தான் டிஆர்எஸ் என்ற மதிப்பிழப்பு நடவடிக்கையை ஐசிசி அமல்படுத்தியிருந்தாலும் கூடவே Umpires Call என்னும் அனுகூலத்தையும் இலவச இணைப்பாய் அவர்களுக்குக் கொடுத்துள்ளது. அதேநேரம் அந்தக் காரணத்தால் கள அம்பயர்களின் அஜாக்கிரதையும் அவ்வளவு சுலபமாகக் கடக்க முடியாதது. எந்தச் சார்புமின்றி ஒரு நீதிபதியின் பார்வையோடு முடிவுகளை கிரிக்கெட்டின் விதிகளுக்கு உட்பட்டே அம்பயர்கள் எடுக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அம்பயர்களுக்கான அங்கீகாரங்களும் இங்கே கேலிக்கூத்தாகின்றன என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.

2020 சீசனில் க்ரீஸ் நோ பால் முடிவு கள அம்பயர் கையிலிருந்து பறிக்கப்பட்ட போதே அதுகுறித்த மாற்றுக்கருத்துக்கள் எழுந்தன. நடப்பு சீசனிலோ நினைத்த மாத்திரத்தில் வொய்டுக்காக கேப்டன்கள் ரிவ்யூ போவது அதிகரித்திருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கல்ல. போட்டி முழுவதும் நடந்தேறுகிறது என்றாலும் இருக்கும் Casual Leave-ஐ எடுத்துத் தீர்ப்போமே என்பது போல் கேப்டன்கள் 17 - 20 ஓவர்களில் அதிகளவில் வொய்டுக்கு ரிவ்யூ போவதை வழக்கமாக்கி வருகின்றனர்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முடிவு கள அம்பயர்களுக்கு சாதகமாகவே இருந்து காலவிரயத்துக்கு வித்திடுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி அம்பயர்களின் ஒவ்வொரு முடிவையும் சந்தேகத்திற்கு உட்படுத்துவது அவர்களது இருப்பையே அர்த்தமற்றதாகி விடாதா என்ற கேள்வி எழுகிறது.

கேமரா

எல்பிடபிள்யூ போன்ற தருணங்களில் பிட்சிங் இன் லைன், ஹிட்டிங் தி ஸ்டம்ப், இன்சைட் எட்ஜ் என மூன்று கோணங்களில் சரிபார்க்க வேண்டும். உயரத்திற்கான ஃபுல் டாஸ் நோ பால்களும் கள அம்பயருக்கு சவாலானவைதான். வொய்டிலோ பேட்ஸ்மேனின் ஸ்டான்ஸ் மற்றும் எந்த ஸ்டம்புக்கு கார்ட் எடுத்திருக்கிறார், எங்கே நகர்கிறார், பந்து அடையக்கூடிய வீச்சில் இருக்கிறதா என்ற கோணங்களில் ஆராய வேண்டியுள்ளது. இருப்பினும் மற்றவற்றோடு ஒப்பிடுகையில் வொய்டுகள் குறித்த முடிவுகள் அத்தனை சிரமமானது அல்ல, கள அம்பயர்களாலேயே கணிக்க முடியும். ஆனால் அங்கேயும் தொழில்நுட்பத்தை நாடி, கள அம்பயரிங் என்பதையே கேலிக்கூத்தாக்குவது அத்தனை சரியான அணுகுமுறை இல்லை. இது மொத்தமாக அவர்கள் மீது சந்தேகப்பார்வையை படரவிடுவதாக இருக்கும். ஒரு சிட்னி டெஸ்டுக்காகவும் ஸ்டீவ் பக்னருக்காகவும் அம்பயர்களே வேண்டாம் என முடிவெடுப்பது போன்றதுதானே இது?

சைமன் டோஃபெல், டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட், ரூடி கோர்ட்ஜென் உள்ளிட்ட தலைசிறந்த அம்பயர்கள் எல்லாம் தொழில்நுட்பமே இல்லாத காலத்தில்கூட துல்லியமான பாரபட்சமே இல்லாத முடிவுகளை எடுத்தார்கள்தானே? அம்பயரிங் அல்ல பிரச்னை சில அம்பயர்கள் மட்டுமே பிரச்னை. நடப்பு ஐபிஎல்லில் கடந்தாண்டைவிட சர்வதேச தரம் வாய்ந்த அம்பயர்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் அதிகரித்துள்ள அம்பயரிங் சர்ச்சைகளுக்கான காரணம். விதையிலும் வேரிலும் பழுதினை வைத்துக்கொண்டு பழம் ஏன் கசக்கிறது என்று ஆராய்ந்து கொண்டுள்ளது பிசிசிஐ.
பிசிசிஐ

டென்னிஸில் அம்பயர்களுக்கு Ipad-கள் வழங்கப்பட்டிருப்பதோடு, ஹாக்-ஐ தொழில்நுட்பத்தின் துணைகொண்டு முடிவெடுப்பதற்கான வழிவகையும் சமீபத்தில் செய்யப்பட்டது. அதன்பின் அம்பயரிங்கில் ஏற்படும் குறைபாடுகளின் சதவிகிதம் குறைந்துள்ளது. கிரிக்கெட்டிலும் தொழில்நுட்பத்தை அம்பயர்களுக்கு மாற்றாகக் கருதாமல் அவர்களது வேலையை சுலபமாக்கப் பயன்படுத்தலாம்.

சிறந்த அம்பயர்களைக் கொண்டுவந்து தொழில்நுட்பத்தையும் அவர்களுக்கு உதவும் கருவியாக்குவதும் மட்டுமே உலகத்தரம் வாய்ந்த ஒரு லீக்காக இதை இனங்காட்டும். அதனால் மட்டுமே உறுத்தலும் சந்தேகமுமின்றி ரசிகர்கள் போட்டியைப் பார்ப்பதோடு அம்பயரிங்கின் மாண்பும் காப்பாற்றப்படும்.

செய்யுமா பிசிசிஐ?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.