PBKSvsCSK : தோனி விக்கெட்டை கொண்டாடல ஏன் தெரியுமா? - ஹர்ஷல் படேல் நெகிழ்ச்சி
தரம்சாலாவில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து ஹர்ஷல் படேல் பேசியிருக்கிறார்.
தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 43 ரன்கள் எடுத்திருந்தார். ருத்துராஜ் 32 ரன்கள் மற்றும் டேரில் மிட்செல் 30 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 139 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் தோனி முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்திருந்தது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘தல’ தோனி, முதல் பந்திலேயே ஹர்ஷல் படேலிடம் தனது விக்கெட்டை இழந்திருந்தார். ஆனால் தோனியின் விக்கெட்டை ஹர்ஷல் பட்டேல் பெரிதாக கொண்டாடவில்லை. இந்நிலையில் போட்டிக்கு பிறகு ஹர்ஷல் படேலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ தோனி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதனால்தான் அவர் விக்கெட்டை வீழ்த்திய பிறகு பெரிதாகக் கொண்டாடவில்லை” என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஹர்ஷல் படேல், “ ஆடுகளத்தை பார்த்து முதலில் நாங்கள் தவறாக கணித்து விட்டோம். முதலில் யாக்கர் பந்துகளை வீச எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் என்னுடைய பந்துவீச்சில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றேன். சரியான முறையில் பந்து வீச வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகின்றேன்.

இதுதான் என்னுடைய தாரக மந்திரம். நான் இங்கு சிறப்பாக செயல்பட்டதற்கு காரணம் பயிற்சியின் போது நான் கடுமையாக உழைத்ததுதான். இதை சரியாக செய்தாலே நமக்கு வெற்றி கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


