Dhoni: `தோனி செய்தது நியாயமா? - ஓடமறுத்து மிட்செல்லின் நம்பிக்கையைக் குலைத்தாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டி நேற்று சேப்பாக்கத்தில் நடந்திருந்தது. பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் எளிதாக வென்றிருந்தது. போட்டியைத் தாண்டி அதிகம் பேசுபொருளாகியிருக்கிறது தோனியின் செயல்.
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது. இன்னிங்ஸின் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியிருந்தார். ஸ்ட்ரைக்கில் தோனி இருந்தார். இன்னொரு பக்கம் டேரில் மிட்செல் இருந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை தோனி தூக்கி அடிக்கிறார். பவுண்டரி இல்லை. டேரில் மிட்செல் வேகவேகமாக ரன்னுக்கு ஓடுகிறார். தோனி மிட்செல்லை ரன்னுக்கு அழைக்கவும் இல்லை. அவர் ஓடி வருவதைப் பார்த்த பிறகும் அசரவே இல்லை. அங்கேயே க்ரீஸூக்குள் நின்றார். ஓடி வந்த டேரில் மிட்செல்லை திரும்பிப் போ.. எனக்கூறினார். அப்போதும் டேரில் மிட்செல் பொறுப்போடு க்ரீஸூக்குள் பேட்டை வைத்துவிட்டு மீண்டும் எதிர் முனைக்கு வேக வேகமாக ஓடி வந்து நான் - ஸ்ட்ரைக்கர் முனையில் செட்டில் ஆகியிருந்தார். தோனியும் சேர்ந்து ஓடியிருந்தால் கட்டாயம் 2 ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால், தோனி ஸ்ட்ரைக்கை தக்கவைக்க எண்ணி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தோனியின் இந்த செயல் இரண்டு விதமான பார்வைகளுக்கு வித்திட்டிருக்கிறது. ஒன்று தோனிக்கு ஆதரவானது. இன்னொன்று தோனிக்கு எதிராக விமர்சனம்.
முதலில் தோனியின் பக்கம் சொல்லப்படும் நியாயத்தைப் பற்றி பார்க்கலாம். டெத் ஓவர்களில் ரன்கள் ஓடாமல் ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக் கொள்வது தோனியின் ஸ்டைல். இதை பலமுறை செய்திருக்கிறார். இப்படி செய்து ஸ்ட்ரைக்கை வைத்துக் கொண்டு அவர் பந்தை வீணடிக்கப் போவதும் இல்லை. சிக்சருக்குதான் முயற்சி செய்யப்போகிறார். அதன்மூலம் அணியின் ஸ்கோர்தான் உயரப்போகிறது. தன்னால் சிக்சர்களை அடித்து அணியின் ஸ்கோரை எதிர்பார்ப்பதைவிட அதிகமாக்க முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதால்தான் அப்படி செய்கிறார். இந்த சீசனிலுமே இதற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவை ஒரு முனையில் வைத்துக்கொண்டு அவருக்கு ஸ்ட்ரைக்கே கொடுக்காமல் தோனி மட்டும்தான் பந்துகளை எதிர்கொண்டார். அப்போதும் நோர்கியா வீசிய கடைசி ஓவரில் சிக்சர்களை பறக்கவிட்டிருப்பார். அதேமாதிரிதான் நேற்றும். அந்த பந்தில் ரன் ஓடாவிட்டாலும் அதற்கடுத்த ஒரு பந்தில் சிக்சர் அடித்தாரே.
மேலும், டேரில் மிட்செல் அப்போதுதான் க்ரீஸூக்கு வந்திருந்தார். ஒரே ஒரு பந்தைதான் எதிர்கொண்டிருந்தார். தோனி சில பந்துகளை எதிர்கொண்டு செட்டில் ஆகியிருந்தார். அதனால்தான் டேரில் மிட்செல் அழைத்தபோது ஓடவில்லையே தவிர மற்றபடி வேறொன்றுமில்லை. இதுதான் தோனிக்கு ஆதரவாகப் பேசுபவர்களின் குரல்.
இன்னொரு பக்கம் வேறொரு பார்வையும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, நேற்றைய போட்டியில் ஏற்கனவே டேரில் மிட்செலின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துவிட்டார்கள். 8 போட்டிகளாக பெர்பார்ம் செய்யாதவர், கடந்த போட்டியில்தான் அரைசதம் அடித்து டச்சுக்கு வந்தார். அப்படிபட்டவரை இந்த போட்டியில் கடைசிக்கட்டத்தில் நம்பர் 8 இல் கொண்டு வந்து இறக்கினார்கள். அதிலேயே அவரின் நம்பிக்கை குலைந்திருக்கும். போதாக்குறைக்கு டேரில் மிட்செல் பெவிலியனில் இருக்கும்போதே சமீர் ரிஸ்வியை இம்பாக்ட் ப்ளேயராக இறக்குகிறார்கள். இது அவரின் மனவலிமையை இன்னும் குத்தி கிழித்திருக்கும். பேட்டிங் ஆர்டரில் மேலே கீழே என மாறி மாறி இறக்கப்பட்டிருந்தார் மிட்செல். அதுவே ஒரு பேட்டரின் ஆட்டத்தைக் கொஞ்சம் தடுமாறச் செய்துவிடும். இப்போது நம்பர் 3-ல் தனது ரோல் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக ஆடத் தொடங்கியிருக்கிறார். இது ஆரம்பம்தான். தொடர்ந்து அப்படி ஆடுவார் என்றே எதிர்பார்க்கிறோம். கடந்த போட்டிக்குப் பிறகு மைக் ஹஸ்ஸி இப்படி பேசியிருந்தார். அப்படி பேசிவிட்டு இந்தப் போட்டியில் மிட்செலை கீழே தள்ளி இறக்கியதே பெரிய அநியாயம்.
இதுபோக கடைசியில் களத்திற்கு வந்தவுடன் தோனியும் ரன் ஓட மறுத்து டேரில் மிட்செலை அங்கும் இங்கும் பதறிப்போய் ஓட வைத்தது அவரை இன்னும் தாழ்வாகவே உணர வைத்திருக்கும். மேலும், ரிஸ்க் எடுத்து ரன் ஓட வேண்டிய பந்தில் தோனி அந்த ரன்னை ஓடாமல் தவிர்த்திருந்தால்கூட புரிந்துகொள்ளலாம். ஆனால், டேரில் மிட்செல் இரண்டு ரன்களை ஓடி முடிக்கும் வரை அங்கு நிறைய நேரம் இருந்தது. அப்படியிருந்தும் தோனி ஓட மறுத்ததுதான் இங்கே பிரச்சனை. டி20 க்களில் ஒவ்வொரு ரன்னும் எவ்வளவு முக்கியம் என்பதை தோனிக்கு பாடமெடுக்க அவசியமில்லை. அப்படியிருக்க அவரே இப்படி செய்வதுதான் தவறாக இருக்கிறது என்கின்றனர்.
தோனியின் இந்த செயலைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


