CSK v PBKS: `நியாயமாரே... சென்னையின் அணுகுமுறையில் இத்தனை ஓட்டைகளா? பஞ்சாப் வென்றது எப்படி?

சென்னையின் கோட்டையிலேயே அந்த அணிக்கு இன்னொரு அடி விழுந்திருக்கிறது. இந்த முறை தாக்குதலைத் தொடுத்திருப்பது பஞ்சாப் அணி. இந்த சீசனில் சென்னை அணி ஆடிய மிக மோசமான போட்டிகளில் ஒன்றாக இது மாறியிருக்கிறது.

வழக்கம்போல சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் டாஸைத் தோற்றார். வழக்கம்போல முதல் பேட்டிங் கிடைத்தது. சென்னை அணி பேட்டிங்கைத் தொடங்கியது. 20 ஓவர்களில் சென்னை அணி 162 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மோசமான பேட்டிங், ரொம்பவே சராசரியான ஸ்கோர். பேட்டிங்கில் வேறு ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருந்தன. பவர்ப்ளேயிலேயே இன்டென்ட் காட்டாமல் உருட்ட ஆரம்பித்தனர். முதல் 4 ஓவர்களில் வெறும் 23 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர்.

CSK v PBKS

ரஹானே இந்த சீசனில் டச்சிலேயே இல்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு அவருக்கு வாய்ப்புகளைக் கொடுத்துவிட்டார்கள். நம்பிக்கையோடு ஆடிவந்த இளம் வீரர் ரச்சினை ரஹானேவுக்காக டிராப் வேறு செய்திருந்தார்கள். இவ்வளவு செய்தும் ரஹானே எதிர்பார்த்த ரிசல்ட்டைத் தரவில்லை. இந்தப் போட்டியிலும் சொதப்பல்தான். 24 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஹர்ப்ரீத் ப்ராரின் பந்தில் அவுட் ஆனார். நம்பர் 3-ல் ஷிவம் துபே. வந்த வேகத்தில் முதல் பந்திலேயே ப்ராரிடம் lbw ஆகி வெளியேறினார். இதுதான் சென்னை அணிக்குப் பெரிய பிரச்னையாக மாறியது. துபேவின் விக்கெட்தான் ஆட்டத்தை பஞ்சாப் கைக்குள் கொண்டு சென்றது.

துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக வெளுத்து வாங்குவார். அவரை ஒரு ஸ்பின்னரை வைத்தே வீழ்த்திவிட்டார்கள். அதன்பிறகு ஸ்பின்னர்களுக்குப் பிரச்னையே இல்லை. ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சஹார் இருவருமே தங்களின் 4 ஓவர்கள் கோட்டாவை முழுமையாக முடித்துவிட்டனர். அந்த 8 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். சேப்பாக்கம் பிட்ச்சை சென்னையை விட மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஜடேஜா வந்த வேகத்திலேயே ராகுல் சஹாரிடம் lbw ஆகி வெளியேறினார். அதிரடி வீரர் சமீர் ரிஸ்வி தனக்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 23 பந்துகளில் 21 ரன்களை அடித்திருந்தார். இடையில் கிட்டத்தட்ட 9 ஓவர்களுக்கு பவுண்டரியே இல்லை. ஆளாளுக்கு உருட்ட, ருத்துராஜூக்கும் ஸ்ட்ரைக்கே கிடைக்காமலிருந்தது. ரிஸ்வி அவுட் ஆன பிறகு ருத்துராஜூக்கு சாம் கரண் ஓவர் ஒன்று கிடைத்தது. அதில் சிக்ஸரையும் பவுண்டரிகளையும் அடித்து அரைசதத்தைப் பூர்த்தி செய்துகொண்டார். 44 பந்துகளில் அரைசதத்தைக் கடந்திருந்தார். முக்கியமான இன்னிங்ஸ் என்றாலும் இத்தனை மெதுவாக ஆடியிருக்க வேண்டாம். அரைசதத்தைக் கடந்து அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ருத்துராஜ் ஸ்டம்பைப் பறிகொடுத்து வெளியேறினார். தோனி களமிறங்கினார். அவரும் பெரிதாக அதிரடியாக ஆடவில்லை. 11 பந்துகளில் 14 ரன்கள். ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர்தான் வந்திருந்தன.

CSK v PBKS

பஞ்சாபுக்கு 163 ரன்கள் டார்கெட். 2 புள்ளியைத் தேற்றிக்கொள்ள ஏதுவான டார்கெட். பஞ்சாப் அணியும் பெரிதாகச் சிரமமெல்லாம் படவில்லை. கான்வேக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருந்த க்ளீசன் சென்னை அணியிலிருந்தார். பவர்ப்ளேக்குள் ஓவரையும் வீசினார். நல்ல வேகத்தில் நல்ல லெந்தைப் பிடித்துச் சிறப்பாக வீசினார். பேர்ஸ்ட்டோ இவரின் ஓவரில் பல பந்துகளில் பீட்டன் ஆனார். இவர்தான் சென்னை அணிக்கு முதல் விக்கெட்டாக பிரப்சிம்ரனை வீழ்த்தி நம்பிக்கையும் கொடுத்தார். ஆனாலும் டார்கெட் சிறியதுதான் என்பதால் பஞ்சாப் அணி பெரிதாக அழுத்தத்தையெல்லாம் உணரவே இல்லை.

பேர்ஸ்ட்டோவும் ரூஸோவும் நின்று அடித்தனர். இவர்களின் ஆட்டத்தால் முதல் 10 ஓவர்கள் முடியும்போதே 99 ரன்களை எடுத்துவிட்டார்கள். செய்வதறியாது ஷிவம் துபேவை இந்த சீசனில் முதல் முறையாகப் பந்துவீச வைத்தார்கள். அவரும் முதல் ஓவரிலேயே பேர்ஸ்ட்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனாலும் பஞ்சாபுக்கு அது எந்த வித சவாலையும் ஏற்படுத்தவில்லை. விக்கெட்டுகள் நிறைய இருந்தன, பந்துக்குப் பந்தாகத்தான் ஸ்கோரும் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால், இடையில் முஷ்டாபிசுர் ரஹ்மான் ஒரு நல்ல ஓவரை வீசினார். சஷாங்க் சிங்கை கிரீஸில் வைத்து ஒரு மெய்டனை வீசினார். அந்தச் சமயத்திலுமே பஞ்சாப் அணி 30 பந்துகளுக்கு 28 ரன்களை மட்டுமே அடிக்க வேண்டியிருந்தது. அதனால் இப்போதும் அவர்களுக்குப் பெரிய அழுத்தமெல்லாம் இல்லை. உருட்டி உருட்டி பேட்டிங் ஆடி சராசரியை விடக் குறைவாக, பேட்டியளிக்கத் தகுதியே இல்லாத ஒரு ஸ்கோரை சென்னை அணி எடுத்ததுதான் பிரச்னை. சாம் கரண், சஷாங்க் சிங் இருவருமே நின்று ஆட்டத்தை முடித்துவிட்டார்கள். சொந்த மைதானத்தில் சென்னை அணிக்கு மற்றுமொரு தோல்வி. கடந்த சீசனிலும் பஞ்சாப் அணி சென்னையை சேப்பாக்கத்தில் வைத்தே வீழ்த்தியிருக்கும். அது இந்த முறையும் நிகழ்ந்திருக்கிறது.

CSK v PBKS

சென்னை அணியின் பேட்டிங் சொதப்பல்தான் தோல்விக்கு மிக முக்கிய காரணம். அவர்களின் அணுகுமுறையே முழுமையாக மாறியிருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஆல் அவுட் அட்டாக் செய்வதுதான் சென்னை அணியின் பாணியாக இருந்தது. எந்தத் தயக்கமும் இல்லாமல் தயவு தாட்சணியமின்றி சென்னையின் பேட்டர்கள் அதிரடி காட்டுவார்கள். இப்போது இந்த அணுகுமுறை மாறியிருக்கிறது. இரண்டு மூன்று போட்டிகளாகத் தற்காப்பாக ஆடுகிறார்கள். சென்னை வெளிக்காட்ட நினைக்கும் இன்டென்ட்டை அவர்களால் வெளிக்காட்ட முடியவில்லை. நல்ல தொடக்கம் கிடைப்பதில்லை. தொடக்கத்தில் மொமன்டம் கிடைக்காததால் இன்னிங்ஸூம் அப்படியே தேமேவெனச் செல்கிறது.

போதாக்குறைக்கு டேரில் மிட்செல் மாதிரியான ஒரு பேட்டரை நம்பர் 8-ல் ஆட வைத்தார்கள். சிரமப்பட்டுப் பல போட்டிகளுக்குப் பிறகு கடந்த போட்டியில்தான் அவர் அரைசதம் அடித்து டச்சுக்கு வந்திருந்தார். அவரை இந்தப் போட்டியில் கீழே இறக்கி கடைசியில் ஒரு சிங்கிள் கூட எடுக்கவிடாமல் அரக்கப் பறக்க ஓட வைத்தது அவரின் நம்பிக்கையை எவ்வளவு குலைத்திருக்கும்? வழக்கமாக சி.எஸ்.கே இப்படியான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள். இந்த முறை ஏன் இப்படி ஆடினார்கள் என்பது கேப்டனுக்கும் கோச்சுக்குமே வெளிச்சம்!

CSK v PBKS
போட்டி ஒரு மாதிரியாக இறுதிக்கட்டம் வரை சென்றிருந்தாலும் இது சென்னை அணியின் போட்டியாக எந்த இடத்திலுமே மாறவில்லை. அவர்கள் வழக்கமாக ஆடும் ஆட்டமும் இது இல்லை. எப்படியோ, இது பஞ்சாப்புக்கு நல்லதொரு வெற்றி. அவர்களின் இந்த வெற்றியால் தொடர் இன்னும் சுவாரஸ்யமடைந்திருக்கிறது. நல்லதுதானே!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.