Virat Kohli: ``என்னை விமர்சிக்கும் நீங்கள் இந்த சூழலிலெல்லாம் இருந்திருப்பீர்களா? - கோலி காட்டம்
நடப்பு ஐ.பி.எல் போட்டிகள் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்களை அடித்திருந்தார். விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்களை அடித்திருந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி தன் மீது விமர்சனம் வைத்தவர்களுக்கெல்லாம் சரமாரியாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
விராட்கோலி பேசியதாவது, வில் ஜாக்ஸ் க்ரீஸூக்குள் வந்த புதிதில் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தார். அவரால் பந்துகளை சரியாக ஸ்ட்ரைக் செய்ய முடியவில்லை. அவருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இடைவேளைகளில் பேசினோம். மோகித் சர்மாவுக்கு எதிராக அவர் அதிரடியாக அடிக்க தொடங்கியதிலிருந்து ஆட்டத்தில் என்னுடைய ரோலை மாற்றிக் கொண்டேன். இன்னொரு முனையில் நின்றுகொண்டு அவரின் ஆட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
19 வது ஓவரில் போட்டியை வென்று விடுவோம் என கணித்தேன். ஆனால், 16 வது ஓவரிலேயே வென்றுவிட்டது அபாரமானது. நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த டி20 சதங்களுள் இதுவும் ஒன்று. அந்த சதத்தை இவ்வளவு நெருக்கமாக நின்று பார்க்க முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி.
எங்களுக்காக நாங்கள் போராட வேண்டிய நேரமிது. எங்களின் சுயமரியாதைக்காக நாங்கள் ஆட நினைத்தோம். முதல் பாதி தொடரில் ஆடியதை போல எங்களால் இனி ஆட முடியாது. நாங்கள் முன்பை விட அட்டாக்கிங்காக ஆடுகிறோம். எங்களின் பீல்டர்கள் பவுண்டரி லைனில் சிரத்தையெடுத்து பாய்கிறார்கள். இப்படித்தான் நாங்கள் ஆட விரும்புகிறோம். எங்களின் சுயமரியாதைக்காகவும் எங்களின் ரசிகர்களுக்காகவும் ஆட விரும்புகிறோம்.
விமர்சகர்கள் குறித்து பேசியவர், ‘‘என் ஸ்ட்ரைக் ரேட்டைப் பற்றியும், ஸ்பின்னர்களுக்கு எதிரான என் ஆட்டத்தைப் பற்றியும் விமர்சிப்பவர்கள், என் இந்த இன்னிங்ஸை அதிகம் விரும்புவார்கள் என நம்புகிறேன். ஆனால், எனக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அணிக்காக போட்டிகளை வென்று கொடுப்பதே என் வேலை. அதை 15 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறேன்.

கமென்ட்ரியில் என்னை விமர்சிக்கும் நீங்கள் இந்த சூழலிலெல்லாம் இருந்திருப்பீர்களா என்று தெரியவில்லை. தங்கள் சொந்தக் கருத்துகளை அங்கே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், களத்தில் தினசரி அணிக்காக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியும். அணிக்காக வென்று கொடுப்பது என் தசை நினைவுகளில் ஊறியிருக்கும் உணர்வு.’’ என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


