CSK vs LSG: `சிஎஸ்கே-வை நாங்கள் இப்படித்தான் தோற்கடித்தோம்- லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ்
நேற்றைய போட்டி குறித்தும், ஆஸ்திரேலிய அணி குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் 17 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணியும் கே.எல் ராகுல் தலையிலான லக்னோ அணியும் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டாய்னிஸ் 7 சிக்சர் 13 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்திருந்தார்.
சிறப்பாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் என்னை விட சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் சில பந்துவீச்சாளர்களைக் குறிவைக்க விரும்பினோம். நான் இந்தப் போட்டியில் பவுண்டரி அடிக்க முடியாத ஒரு நேரம் இருந்தது. அதனால் உள்ளே வந்த பூரனால் மட்டுமே அழுத்தத்தை குறைக்க முடியும். அவர் அந்த வேலையை சரியாகச் செய்தார்.
போட்டியில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. அதை நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்தேன். டி20 கிரிக்கெட் தற்போது நிறைய மாறி வருகிறது. அது சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. ஏனென்றால் ஸ்கோர், இம்பேக்ட் பிளேயர் விதிகள், எந்த பவுலருக்கு எதிராக ரன்கள் சேர்ப்பது என்று ஏராளமான திட்டமிடல் தேவைப்படுகிறது. லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா அணியில் இணைந்து செயல்பட்டுள்ளோம். ஆஸ்திரேலியா அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். அதனை மீண்டும் பெறுவதற்கு வெகு தூரம் பயணிக்க வேண்டும். இளம் வீரர்கள் எனது இடத்தைப் பிடிப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


