IND vs PAK: `பாகிஸ்தானுக்குச் செல்ல மறுக்கும் இந்திய அணி! - இன்னமும் தேவைதானா இந்த வெறுப்பரசியல்?
2025-ம் ஆண்டு ஐ.சி.சியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. கிரிக்கெட்டுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசியல் ரீதியான பிரச்னைகள்தான் இதற்கு முழுமுதற்காரணம்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லப்போவதில்லை என்பது போன்ற செய்திகளும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. கிரிக்கெட்டை கிரிக்கெட்டாகப் பார்க்காமல் அரசியலாகப் பார்த்து இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருப்பது நியாயமான விஷயம்தானா?
பிசிசிஐ தரப்பில் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசியிருக்கும் அதிகாரி ஒருவர், "இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களையெல்லாம் மறந்துவிடுங்கள். வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கே இந்திய அணி பாகிஸ்தானுக்குப் பயணிக்குமா எனத் தெரியவில்லை. போட்டி நடக்கும் இடங்களை மாற்றி ஹைப்ரிட் முறையில் தொடரை நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.
ஐ.சி.சி தொடர் என்பதால் இந்தியாவிற்கு முடிவு எடுப்பதில் சிரமமாக இருக்கலாம். ஆனாலும் மத்திய அரசின் நிலைப்பாடை பொறுத்துதான் எல்லாம் அமையும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு வேறு சுமூகமாக இல்லை" என அவர் சொல்லியிருக்கிறார்.
அரசியலுக்காக ஒரு ஐ.சி.சி தொடருக்கு பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என்பது சரியா என்பதுதான் இங்கே மிகப்பெரிய கேள்வி. இந்தியாவில் நடந்த சென்ற உலகக்கோப்பைக்கு முன்பாக ஓர் ஆசியக்கோப்பைத் தொடர் நடந்திருந்தது. அதை பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து நடத்தியிருந்தன. அதிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. இலங்கையில் வைத்து மட்டுமே போட்டிகளில் ஆடியது. இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாதவாறு ரொம்பவே விநோதமாக ஒரு போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் ஜெய்ஷா இருந்ததால் இதெல்லாம் எளிதில் சாத்தியப்பட்டது. இதற்கு பிறகும் கூட பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கு இந்தியாவுக்கு வர ஒப்புக்கொண்டு வந்து ஆடியிருந்தது. பாகிஸ்தான் அணிக்குப் பல இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாம் உலகக்கோப்பைக்காக இந்தியா சென்றால் இந்தியா சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் வரக்கூடும் என்கிற நினைப்பில்தான் பாகிஸ்தான் அணி அக்டோபரில் இந்தியா வந்திருந்தது.
இந்நிலையில்தான் அந்த எதிர்பார்ப்புகளெல்லாம் உடைபட்டுபோகும் வகையில் பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியா எதிர்பார்ப்பதைப் போல இந்தியாவின் ஆட்டங்களை மட்டும் பாகிஸ்தான் இல்லாமல் வேறொரு பொதுவான நாட்டில் வைத்து நடத்த ஐ.சி.சி முடிவெடுக்க வாய்ப்பிருக்கிறது. ஐ.சி.சியில் இந்தியாவின் செல்வாக்கு அதிகம் என்பதால் இந்தியாவின் விருப்பப்படிதான் எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இது கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதா? நிச்சயமாக இல்லை.
சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட்டில் பேசியிருந்த ரோஹித் சர்மா, "பாகிஸ்தான் ஒரு நல்ல அணி. அவர்களிடம் மிகச்சிறப்பான வேகப்பந்துவீச்சுப் படை இருக்கிறது. இரு அணிகளும் மோதினால் அது சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும். அதுவும் வெளிநாட்டு மைதானங்களில் மோதினால் கூடுதல் சவாலாக இருக்கும்.

கடைசியாக 2006-ல்தான் இரு அணிகளும் மோதின என நினைக்கிறேன். வாசிம் ஜாபர் அப்போது இரட்டைச்சதம் அடித்திருந்தார். இரு அணிகளும் தொடர்ந்து கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நான் இங்கே கிரிக்கெட்டைப் பற்றி மட்டும்தான் பேசுகிறேன். வேறெதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. பேட்டுக்கும் பந்துக்கும் இடையிலான போராக மட்டுமே இது இருக்கும். பெரும் சுவாரஸ்யமிக்க தொடராக இருக்கும். அதனால் ஏன் இரு அணிகளும் ஆடக்கூடாது?" எனப் பேசியிருந்தார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமும் சில நாள்களுக்கு முன்பு உலகக்கோப்பையில் ஆடியபோது இந்தியாவில் அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, "இந்தியாவிற்கு முதல் முறையாக உலகக்கோப்பையில்தான் ஆட வந்திருக்கிறேன். எனக்கு இந்தியாவைப் பற்றிப் பெரிதாக எதுவும் தெரியாது. அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அளவுகடந்த அன்பை வெளிக்காட்டினார்கள். எங்களின் கிரிக்கெட்டைப் பாராட்டினார்கள். நான் அதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. பல மைதானங்களில் எங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது" எனப் பேசியிருந்தார்.
இரு அணி வீரர்களின் எண்ணமும் இதுதான். அவர்களுக்கு இரு அணிகளும் அடிக்கடி ஆட வேண்டும். இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவுக்கு வர வேண்டும். ஆரோக்கியமாக இரு அணிகளும் மோதி நல்ல கிரிக்கெட்டை விருந்தாகப் படைக்க வேண்டும். ரசிகர்களின் எண்ணமும் இதுதான். இந்தியா - பாகிஸ்தான் என்றில்லை. நன்றாக கிரிக்கெட் ஆடும் எந்த வீரரையும் எந்த அணியையும் ஆதரிக்க இரு நாட்டு ரசிகர்களும் தயாராக இருக்கிறார்கள். அதற்கான அறிகுறிகளை பல சமயங்களில் வெளிக்காட்டிவிட்டனர். இங்கே தடையாக இருப்பது அரசியல் மட்டும்தான். கிரிக்கெட்டின் வழியே வெறுப்பை விதைக்க இருதரப்பிலும் கோரப்பற்களோடு அரசியலர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருநாட்டுக்கிடையேயான உரசலையும் அரசியல் சூட்டையும் அப்படியே தக்கவைத்துக் கொள்ள கிரிக்கெட்டையும் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். இதில் எந்த விதத்திலும் நியாயமில்லை. கிரிக்கெட்டுக்கும் சரி இருநாட்டின் நல்லுறவுக்கும் சரி, இது ஆரோக்கியமானதல்ல. இந்தியா, சாம்பியன்ஸ் ட்ராபிக்காக பாகிஸ்தான் செல்லமாட்டோம் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கும் பட்சத்தில் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


