IPL: `தார் ரோடு பிட்ச்கள்; தாறுமாறாக ஸ்கோர் செய்யும் பேட்டர்கள்! - கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதா?
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரான ஜுனைட் கான் சமீபத்தில் "51 சர்வதேச டி20களில் ஆடி மொத்தமே 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சுனில் நரைனைக்கூட ஐபிஎல் களங்களால்தான் ஒரே போட்டியில் 85 ரன்களை 39 பந்துகளில் அசாத்தியமாக அடிக்க வைக்க முடிகிறது" என ஃப்ளாட் டிராக்குகளை மறைமுகமாகச் சாடினார்.
கெவின் பீட்டர்சனோ குறைந்து போன கிரவுண்டின் அளவுகள் போல பௌலர்களுக்கான வாய்ப்புகள் குன்றியுள்ளது குறித்துப் பேசியிருந்தார்.
சன்ரைசர்ஸின் கேப்டன் கம்மின்ஸ், ஒலியின் வேகத்தோடு போட்டியிடும் ரன்ரேட்டை தனது அணியும், ஸ்ட்ரைக்ரேட்டை தனது பேட்ஸ்மேன்களும் கொண்டிருந்தும், "இதே களத்தில் அடுத்ததாக நானும் அல்லவா பந்து வீசவேண்டும்?", என பௌலர்களின் பரிதாப நிலையை பேசியிருக்கிறார்.
ஆம்! இந்த ஐபிஎல்லில் 500+ ரன்கள் என்பதே சாதாரணமாகி விட்டது. முதல் 36 போட்டிகளில் 11 முறை மட்டுமே முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 170-க்குக் கீழிருக்க ஒன்பது முறை 200+ ஸ்கோர், 300-ஐ நெருங்கிவிடும்படியான எச்சரிக்கை, 125 என்னும் பவர்பிளே ஸ்கோர் என எல்லாம் இணைந்து பௌலர்களின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்க்க, `சர்வமும் பேட்ஸ்மேன் மயம் என மாறியுள்ளது. ஹெட் அடுத்த இலக்கு 300தான் எனக் கூறியிருக்க, ஹைதராபாத் பிட்ச் வடிவமைப்பாளரும் அதை ஒட்டியே கருத்தையே தெரிவித்ததாகவும் தீபக் சஹார் கூறியிருந்தார்.
முதல் 34 போட்டிகளை வைத்துக் கணக்கிட்டால் இதுவரை வந்த சீசன்களில் ரன்ரேட் 9-ஐக்கூட கடந்ததில்லை. இந்த ஆண்டின் ரன்ரேட்டோ 9.42. 15.2 பந்துகளுக்கு ஒருமுறை பவுண்டரிகள் முன்பெல்லாம் வந்திருக்க இப்போது 13.5 பந்துகளுக்கு ஒருமுறை பந்து பவுண்டரியைப் பார்த்துள்ளது. பௌலர்களின் 10+ எக்கானமி என்பதே நியூ நார்மல் என்றாகி இந்த ஐபிஎல் Self Destruction மோடுக்குள் கிரிக்கெட்டைப் புகுத்திவிடும்படியான பயங்காட்டுகிறது என்பதுதான் பலரது கவலையும்.
ஃப்ளாட் பிட்ச், ஒரே போட்டியில் மூன்றுக்கும் மேற்பட்ட சூப்பர் கேமியோக்கள், டி20-ன் பரிணாம வளர்ச்சி, டி20 லீக்குகளின் அசுர வளர்ச்சியால் அதற்கேற்ப தம்மைத் தாமே டி20 எக்ஸ்பர்ட்களாக தகவமைத்துக் கொண்டுள்ள பேட்ஸ்மேன்கள், சின்ன பவுண்டரிகள், கல்லி கிரிக்கெட் விதிகளோடு போட்டியிடும்படி பேட்ஸ்மேனுக்குக் கருணை காட்டும் விதிகள் என பலவும் புக் கிரிக்கெட் ஸ்கோரோடே போட்டியிடும்படியான ஹை ஸ்கோரிங் கேம்களுக்கு வித்திடுகின்றன. இதில் சாதகங்கள் இல்லாமல் இல்லை.

`More Runs More Fun என்பது போல் மிஷின் கன்கனில் வெளிப்படும் தோட்டாக்களாக அதிவேகமாக சிதறடிக்கப்படும் பந்துகள் ரசிகர்களின் உற்சாகத்தை றெக்கை கட்ட வைக்கின்றன. பும்ராவின் யார்க்கருக்கு எதிராக அஸுதோஸின் ஸ்வீப் ஷாட் போல் தனக்கான வாய்ப்புகளை உண்டாக்கிக் கொள்வதில் பேட்ஸ்மேன்கள் மேம்படுகிறார்கள், அழுத்தம் அவர்களை அதற்கேற்ப மாற்றியமைக்கிறது. "கடந்தாண்டு ரசிகர்களைத் தாலாட்டித் தூங்க வைத்த பல லக்னோ போட்டிகள் போலிருந்தால் ரசிகர்களை எப்படி வசீகரிக்க முடியும்? வருமானத்தை அதிகரிக்க ஃபுல் டைம் என்டர்டெயின்மென்டே அவசியம்" என்பதுதான் பல அணி நிர்வாகங்களின் கருத்து. ஆழமாகக் கிரிக்கெட்டை நேசிக்காமல் டி20 லீக்குகளிற்குள் தன்னைத் தொலைத்த சராசரி ரசிகனின் விருப்பமும் அதுதான். அதற்கான மேடையே இங்கே அமைக்கப்படுகிறது எனும் சமாதானங்கள் ஃப்ளாட் டிராக்களுக்காக கொடிபிடித்து ஆதரவுக்குரல் எழுப்புகின்றன. உண்மையில் இது சரியான திக்கில் கிரிக்கெட்டைப் பயணிக்க வைக்கிறதா?

கடைசியாக ஆடிய ஆறு போட்டிகளில் சன்ரைசர்ஸ் மூன்று முறை 250+ ரன்களைக் குவித்திருக்கிறது. ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாசன், மார்க்ரம் போன்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் தேக்கமின்றி ரன்கள் வந்து கொண்டே இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர். அவர்களது Fearless Cricket-ம், பவர்பிளே சூழலை தங்களுக்குச் சாதகமாக்கி கூடுதலாக 30 - 40 ரன்களை தேற்றிக்கொள்ளும் சாமர்த்தியமும் அவர்களுக்குக் கைகொடுக்கின்றன. சன்ரைசர்ஸ் விஷயத்தில் அந்த பேட்ஸ்மேன்கள் தத்தமது ப்ரைம் டைமில் இருப்பதுவும் கூடுதல் பலம். இது மட்டுமின்றி அணிகள் போட்டியை அணுகும் முறையும் மாறியிருக்கின்றது.
உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் பயிற்சியாளர் பயன்படுத்திய வொய்ட் போர்ட் ஸ்ட்ராடஜி நினைவிருக்கிறதா? சேஸிங்கின் போது மட்டுமல்ல முதலில் பேட்டிங் செய்யும்போதுகூட 200+ இலக்குகளை மனதில் நிறுத்திதான் அணிகள் களமிறங்குகின்றன. அதேபோல் கடந்தாண்டு சிஎஸ்கேவை சாம்பியனாக மாற்றிய "சிஎஸ்கே மாடல்" இம்முறை பலராலும் கையாளப்படுகிறது. செறிவுடையதல்ல என்றாலும் பேட்டிங் நீளம் போதும், சின்ன சின்ன கேமியோக்களே சிரத்தையேயின்றி 200+ ரன்களைக் கொண்டு வந்துவிடும் என்ற அவர்களது தந்திரோபாயம் இங்கே பாலபாடமாகி அதே அணுகுமுறையோடு அணிகள் போட்டிகளை அணுகுகின்றன. இதற்கு ஃப்ளாட் டிராக்குகளும் ரெட் கார்பெட் விரிக்கின்றன.

துணைக்கண்ட பிட்சாக இருந்தும்கூட ஸ்பின்னுக்கு பெரிதான ஆதரவில்லை. அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் டாப் 15-ல் சஹால் மற்றும் குல்தீப் என இரு சுழல்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அவர்கள்கூட தங்களது தனித்திறனால் மட்டுமே அதனை சாத்தியமாக்கி உள்ளனர். சரி சுழல்பந்துக்கான வாயில்கள்தான் அடைக்கப்பட்டுள்ளன. வேகமான களங்கள் அமைக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்காவது ஆதரவுக்கரம் நீட்டுமா என்றால் அதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. அதிவேகம், பவுன்ஸ், ஸ்விங் என எவையெல்லாம் வேகப்பந்துவீச்சுக்கு உயிரூட்டி ஆட்டத்தை சுவாரஸ்யமாக்குமோ அது எதையுமே களமும் சூழலும் தருவதில்லை. பௌலர்களது ரகசிய சிநேகிதனாக மாறும் `Unpredictability எனப்படும் கணித்தறிய முடியாத தன்மைதான் ஒவ்வொரு பந்தையும் பேட்ஸ்மேனுக்கு சவால் விடவைத்து ஆட்டத்தில் திருப்புமுனைகளைக் கொண்டு வரும். ஆனால் நடப்புத்தொடரிலோ பல போட்டிகள் வளைவுகளே அற்ற ஒற்றையடிப் பாதையாக அதுவும் ஒருவழிப் பாதையாக, பேட்ஸ்மேன்கள் மட்டுமே முன்னேறும் பாதையாக அபாய மணி அடிக்கின்றன.
ரெட் சாய்ல் பிட்ச்களும் உயிர்ப்பே இல்லாத களங்களும், ஈரப்பதமே அற்ற, பேருக்குக்கூட புற்கள் இன்றியோ முழுவதுமாக அது நீக்கப்பட்டதாகவோ களங்கள் டெட் பிட்ச்களாகி பௌலர்களது வானிலையை வறண்டதாக்கி உள்ளன.
சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை 19 எக்ஸ்ட்ராக்களையும், ஆர்சிபி 15 எக்ஸ்ட்ராக்களையும் வாரி வழங்கியிருந்தன. இப்படிப்பட்ட சராசரிக்கும் கீழான மோசமான பௌலிங் யூனிட்டை விலக்கிவைப்போம். திறன்மிக்க பௌலர்களேகூட இங்கே பாதிக்கப்படுவதுதான் கவனத்திற்குரிய, கவலைக்குரிய நிதர்சனம். ஒருகட்டத்தில் பந்துவீச்சின் கூறுகளால் பந்துகளை வலுமிக்கதாக்கும் பௌலர்களை உயிரற்ற களங்களால் முடக்கிப்போடுவதைவிட பௌலிங் மெஷின்களைக் கொண்டே பந்துவீசி விட்டுப் போகலாமே என்ற சலிப்பே மிஞ்சுகிறது. இதேநிலை சர்வதேசக் கிரிக்கெட்டிலும் நுழைந்தால் வரும் காலத்தில் பௌலராக ஆகவேண்டுமென்ற விருப்பம்கூட பல இளம் வீரர்களுக்கும் ஏற்படாமல் போகலாம். பௌலர்களுக்கு மட்டுமல்ல இது பேட்ஸ்மேன்களுக்குமே நல்லதல்ல.

இப்படிப்பட்ட களங்களில் ஆடிப் பழகிய பேட்ஸ்மேன்கள் சர்வதேச தரமுடைய களங்களில் சோபிப்பது கடினம். வேகமான களங்கள் பின்னிழுக்குமென்றால் பவுன்ஸ் அவர்களை நிலைகுலைய வைக்கும். குறிப்பாக டொமெஸ்டிக் கிரிக்கெட் அனுபவம் மட்டுமே வாய்க்கப்பெற்று ஐபிஎல்லை தங்களை பட்டை தீட்டும் பாசறையாகக் கருதும் இளம் இந்திய வீரர்களுக்கு இது சரியான சவாலும் அல்ல, அவர்கள் பயணிக்க வேண்டிய பழுதற்ற பாதையுமல்ல. அவர்களது டெக்னிக்களுக்கான தேர்வாக இல்லாமல் ஓங்கி அடிப்பது யார், அதிகமான தொலைவு பறக்கவிடுவது யார் என்பதில் மட்டுமே இக்களங்கள் கவனத்தைக் குவிக்கின்றன.
நாளின் முடிவில் ரன்கள் மட்டுமே முதல் தேவை எனக் கருதி டெக்னிக்கில் வல்லமையோடு மொத்த களத்தையும் ஆக்ரமித்து எல்லாப் பக்கத்திலும் ரன்களைக் கொண்டு வரவேண்டும் என்ற தேவை மறக்கடிக்கப்படுகிறது. பிட்சின் ஒருபக்கம் மட்டுமே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய Sloggersஆக இருந்தாலே போதும் என்பதுதான் இத்தகைய களங்கள் ஏற்படுத்தும் அபாயகரமான மனநிலை. ஃப்ளிக் ஷாட் உள்ளிட்டவற்றால் ஆஃப் சைடில் ரன்களைத் தேற்ற ரிஸ்ட் பவரும், பிக்அப் ஷாட்களில் நிபுணத்துவமும், கொஞ்சமாக அன் ஆர்தடாக்ஸ் ஷாட்களில் பயிற்சியும் போதும் என பேட்ஸ்மேன்களின் வட்டம் இங்கே குறுக்கப்படுவதோடு அவர்களுக்கு களங்கள் தரக்கூடிய சவாலும் சமன்பாட்டில் இருந்து அறவே நீக்கப்படுகிறது. முடிவு பின்ச் ஹிட்டர்கள் ஹீரோக்களாக மாறும் சூழலும் அது மட்டுமே போதுமென்ற எண்ணமும் இளம் பேட்ஸ்மேன்களிடம் உண்டாகலாம். இது சர்வதேச போட்டிகளில் அவர்களுக்கு பலத்த அடி கொடுக்கும். ஆழ்கடலில் நீந்துவதற்கான பயிற்சியை நீச்சல் குளத்தில் எடுப்பது போன்றதுதான் இது.
ஆகமொத்தம், போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கவைத்து சுடுவதைப் போல் பௌலர்களிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் பறித்துவிட்டு, பேட்ஸ்மேன்கள் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர்.
ரசிகர்களுக்காக இப்படிப்பட்ட கேலிக்கூத்துகள் அரங்கேறுகின்றன என சொல்லப்பட்டாலும் இதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பமா என்று பார்த்தால், மசாலா படங்களுக்கு மட்டுமே மக்களின் ஆதரவு இருக்கும் என எண்ணிக்கொண்டு விரிந்திருக்க வேண்டிய வானத்தை கைக்குட்டைக்குள் சுருக்கிக் கொள்ளும் ஓர் இயக்குனரின் மனோபாவம்தான் இது. கிரிக்கெட்டின் ஆன்மாவைக் குலைப்பதற்கான நடவடிக்கைதான் இது என்பதே உண்மை.

இம்பேக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டர்களே அரிதாகக் காணக்கிடைக்கும் உயிரினமாக மாறுவது குறித்து ரோஹித், சிராஜ், ஏபிடி வில்லியர்ஸ், டாம் மூடி என பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஹர்சா போக்லே உள்ளிட்ட வல்லுனர்கள் இந்த விதி அறிமுகம் ஆகும்போதே இது தேவையற்றது என சுட்டிக் காட்டி இருந்தனர். இன்னொவேசன் என்ற பெயரில் இப்படிப்பட்ட சமநிலையைக் குலைக்கும் வழிமுறைகளை உட்புகுத்தாமல் பவர்பிளே ஓவர்களை நான்காகக் குறைப்பது, போஸ்ட் கார்ட் சைஸ் கிரவுண்டுகளை தரமுயர்த்துவது போன்ற நகர்வுகளைப் பற்றி பிசிசிஐ சிந்திக்கலாம்.
உண்மையில் ரசிகர்களின் வரவேற்பு பேட்டுக்கும் பந்துக்குமான சமமான யுத்தமாக நடந்தேறும் ஆட்டங்களுக்குத்தான். அதுதான் கிரிக்கெட் செல்லும் பாதை சரியானது என்பதை உறுதி செய்யும்.
இந்த பிட்ச்கள், இம்பேக்ட் பிளேயர் போன்றவை குறித்த உங்களின் கருத்துகளைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


