Matheesha Pathirana: `நீ கொஞ்சம் அமைதியா இரு! - தோனி சொன்ன அறிவுரையும் பதிரனாவின் விக்கெட் மழையும்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி சிறப்பாக வென்றிருக்கிறது.

சரியான நேரத்தில் பதிரனா எடுத்துக் கொடுத்த 4 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதனால் ஆட்டநாயகன் விருதையும் பதிரனாவே வென்றிருந்தார். விருதை வாங்கிவிட்டு பேசுகையில் தோனி குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

மும்பை அணி ஒரு கட்டத்தில் சேஸிங்கில் நல்ல நிலைமையில் இருந்தது. ரன்ரேட்டையும் 10 க்கு மேல் மெயின்டெயின் செய்து வந்தது. அந்த சமயத்தில்தான் பதிரனா கைக்கு பந்து சென்றது. முதல் ஓவரிலேயே இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் என இரண்டு முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தார். இங்கிருந்துதான் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை பக்கமாகத் திரும்ப ஆரம்பித்தது. இதன்பிறகு, திலக் வர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் என இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். சென்னை அணி மொத்தமாக 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தது. அதில் 4 விக்கெட்டுகள் பதிரனா வீழ்த்தியது. கடந்த இரண்டு போட்டிகளாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த பதிரனா உள்ளே வந்தவுடனே இப்படி ஒரு பெர்ஃபார்மென்ஸை கொடுப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு பேசிய பதிரனா, பவர்ப்ளேயில் எங்களின் பந்துவீச்சைப் பார்த்து எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. தோனியிடம் சென்று நிலைமையைச் சொன்னேன்.

நீ கொஞ்சம் அமைதியாக இரு. வழக்கமாக என்ன செய்வாயோ அதை செய் போதும். என தோனி கூறினார். அவரின் அறிவுரை எனக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது.
Dhoni

முடிவுகளைப் பற்றி நான் பெரிதாக கவலை கொள்வதில்லை. நான் செய்ய நினைப்பதை சரியாகச் செய்கிறேனா என்பதிலேயே என்னுடைய கவனம் இருக்கும். அதைச் சரியாகச் செய்தால் எனக்குத் தேவையான முடிவு அப்படியே கிடைக்கும். சில நேரங்களில் பேட்டர்களுக்கு ஏற்றவாறு என்னுடைய திட்டங்களை மாற்றிக்கொள்வேன். இரண்டு வாரங்களுக்கு முன்பாக சிறிய காயத்தால் அவதிப்பட்டேன். ஆனால், அணியின் பயிற்சியாளர் குழுவினர் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு உறுதுணையாக இருந்தனர். என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.