KKR v LSG : நீங்க உருட்டுனதெல்லாம் போதுங்கய்யா! - கொல்கத்தாவிடம் லக்னோ வீழ்ந்தது எப்படி?
ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற தொடரின் 28-வது போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியிருக்கிறது கொல்கத்தா.
160-க்குக் கீழே இலக்கினை நிர்ணயிப்பதும் பின் தனது பௌலர்களின் திறனால் அதை டிஃபெண்ட் செய்வதும் லக்னோவின் வழக்கம். இது அவர்களுக்கு ஒரு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறதோ என்னவோ பெரும்பாலும் அவர்களது பேட்டிங் அணுகுமுறை `பௌலர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்னும் ரீதியில் அசிரத்தையோடே இருக்கிறது.
ஸ்ட்ரைக்ரேட்டுக்காக பலமுறை விமர்சனங்களை சந்தித்துள்ள கேஎல் ராகுல் இந்தாண்டு தனது ஆங்கர் ரோலில் இருந்து சற்றே விடுபட்டு அடித்து ஆடும் மோடுக்குள் நுழைய முயல்கிறார். அவரது சமீபத்திய பவர்பிளேகளில் டில்லிக்கு எதிராக 14 பந்துகளில் 30 ரன்கள், கேகேஆருக்கு எதிராக 13 பந்துகளில் 23 ரன்கள் என ஓரளவு தனது ஆட்டபாணியில் மாற்றங்களைக் கொண்டுவர முயன்றார். அவர் பின்தங்குவது எங்கேயென்றால் எதிர்முனையில் விழும் விக்கெட்டுகள் அவரது பேட்டினை மௌன மொழி பேசத் தொடங்க வைத்து விடுகிறது.
2020-க்கு அடுத்த ஐபிஎல் சீசன்களில் எப்போதும் கேஎல் ராகுலின் வருடாந்திர ஸ்ட்ரைக்ரேட் 136-ஐ தாண்டவில்லை. லக்னோவின் அணியின் சராசரி ஸ்கோர் குறைவாகவே இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இதனை நேர்செய்ய லக்னோ இருவகையில் முயன்றிருந்தது. படிக்கல்லின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை என்பதால் கடந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த ஹூடா இம்முறை நேரடியாகவே பிளேயிங் லெவனில் நுழைந்து அவரது இடத்தில் ஆட வைக்கப்பட்டார். ஆனால் தாக்கம் காணக் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த 15 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே ஹூடா 20 ரன்களைக் கடந்திருக்கிறார். இந்தப் போட்டியில் கிடைத்த நல்வாய்ப்பையும் கைநழுவவே விட்டிருந்தார். சரி டில்லிக்கு எதிராக சிறப்பாக ஆடிய பதோனியின் திறனை ஏழாவது இடத்தில் இறக்கி வீணடிக்க வேண்டாம் அவரை அதிகப் பந்துகளை சந்திக்க வைக்கலாம் என நான்காவது இடத்தில் இறக்கினர். ராகுலுக்கும் அவருக்குமான பார்டன்ஷிப் ஓரளவு ரன்களைக் கொண்டு வந்தாலும் அது வெறும் 6.8 ரன்ரேட்டில் மட்டுமே வந்திருந்தது. பதோனியின் ஸ்ட்ரைக்ரேட் வெறும் 107 மட்டுமே. முந்தைய போட்டிகளில் ஓப்பனராக ஆடிப் பழக்கப்பட்ட படிக்கல்லை தவறான இடத்தில் இறக்கி சூடுவாங்கியதைப் போல் பதோனிக்கான சோதனை முயற்சியும் கைகொடுக்கவில்லை.
32 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருந்தார், ஒருசில கண்கவர் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்திருந்தார் என்றாலும் வெகுசீக்கிரம் இறங்கி இறுதிவரை நிலைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்ததால் பூரனால் தனது வழக்கமான முழு அதிரடியைக் கட்டவிழ்க்க முடியாமல் சற்றே கவனத்தோடே ஆடவேண்டி இருந்தது. ஆட்டத்தின் பிரேக் பௌலர்களிடம்தான் உள்ளது என சொல்லப்படுவதுண்டு. அதனை விழும் விக்கெட்டுகள் மூலமாக வெற்றிகரமாக அழுத்தி கேகேஆர் பேட்ஸ்மேன்கள் லக்னோவுக்கு வேகத்தடைகளை இட்டனர்.
வைபவ் அரோரா வீசிய போட்டியின் 18-வது ஓவரில் தரப்பட்ட 18 ரன்கள் மட்டுமே கட்டுக்கோப்பின்றி வந்து சேர்ந்தவை. மற்ற எல்லா ஓவர்களிலுமே அபாரமாக பந்து வீசினர் கேகேஆர் பௌலர்கள்.

குறிப்பாக சுனில் நரைன் டி20-க்கெனவே அளவெடுத்தது அவரது பௌலிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். வெறும் 17 ரன்களை மட்டுமே நரைன் கொடுத்திருந்தார்.

கேகேஆருக்கு இப்போட்டியில் இன்னுமொரு ஆறுதலான விஷயமும் இருந்தது. முதல் மூன்று போட்டிகளில் இரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்த ஸ்டார்க் இப்போட்டியில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், 10+ எக்கானமியில் ரன்களைக் கொடுத்தவர் இப்போட்டியில் 8.3 என முடித்திருந்தார். ஸ்டார்க் பந்தில் தீபக் ஹூடாவை வெளியேற்றிய ராமன்தீப்பின் கேட்சும், ஸ்டோய்னிஸை ஆட்டமிழக்க வைத்த சால்டின் கீப்பர் கேட்சும் அபாரம்.
டெத் ஓவர்களில் 9.6 என்ற ரன்ரேட் பூரனின் உபயம். அதுவும் இல்லாமல் போய் இருந்தால் இந்தளவு கூட லக்னோவால் ரன்களை சேர்த்திருக்க முடியாது. வெறும் 8.1 ரன்ரேட்டோடு எட்ட வேண்டிய இலக்கு என்பதுவும் தனது பேட்டிங் லைன் அப்பில் நீண்ட நெடிய பவர் ஹிட்டர்களின் இருப்பும் கேகேஆரை பதற்றமேயின்றி போட்டியை அணுக வைத்தது. இவர்களைக் கட்டிப் போடும் நோக்கோடு தான் காயத்திலிருந்து மீண்ட மோசின் கானையும் மாயங்க் யாதவின் இடத்தை நிரப்புவார் என்னும் நம்பிக்கையில் ஷமர் ஜோசஃபை அவரது அறிமுகப் போட்டியிலும் ஒருங்கே களமிறக்கியது லக்னோ. அதில் 50 சதவிகிதம் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
வேறு நாடுகளில் ஜொலிக்கும் பௌலர்கள் இந்திய துணைக்கண்டத்தில் தொடக்கத்தில் சற்றே அடிவாங்குவார்கள். தங்களுக்கான ரிதத்தைக் கண்டறிய அவர்களுக்கு சில போட்டிகளோ குறைந்தபட்சம் சில ஓவர்களோ பிடிக்கும். ஷமர் ஜோசஃபின் காஸ்ட்லியான 20 ரன்கள் ஓப்பனிங் ஓவரிலும் எதிரொலித்தது அதுதான். அடுத்த இரு ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து மீண்டார் என்றாலும் பவர்பிளே 58 ரன்களை எட்ட அதுவே காரணமாகியது. க்ருணாலுக்குத் தரப்பட்ட ஒரு ஓவரும் ஹாட்ரிக் பவுண்டரிகளை சால்டினால் பார்த்ததும் இன்னுமொரு காரணம். ஷமரது ஸ்பெல்லின் கடைசி ஓவரும் ஸ்ரேயாஸால் ஏகமாக அடிவாங்கியது. ஷமரின் வரவு கைகொடுக்கவில்லை எனினும் மோசின் கான் தனது ரீ எண்ட்ரியை பிரம்மாண்டமாக அறிவித்தார்.
பவர்பிளேயில் 58 ரன்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் லக்னோவை ஒரே நம்பிக்கையோடு போட்டியை அணுக வைத்தது நரைன், ரகுவன்ஸி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய மோசின் கானின் ஸ்பெல்தான். வேகம் தாங்கிய அந்த இரு ஷார்ட் பால்கள், லக்னோவினை சற்றே ஆசுவாசப்பட வைத்தது. அடிக்கடி காயத்தில் சிக்காமல் மட்டும் இருப்பாரேயானால் எதிர்கால இந்திய அணியில் அவருக்கான இடமும் இருக்கிறதென்பதே உண்மை. ரவி பிஷ்னாய், மோசின் கான் போன்றோரால் கட்டுப்படுத்தப்பட்ட ரன்கள் அர்ஷத் கான், யாஷ் தாகூர் போன்றோர்களின் மூலம் கசிந்தது லக்னோவால் டிஃபெண்ட் செய்ய முடியாததற்கான இன்னுமொரு காரணம் ஆனால் மூல காரணம் சால்ட் - ஸ்ரேயாஸ் கூட்டணி.

முதல் இரு விக்கெட்டுகளை அதிவேகமாக இழந்த போதும் வேரூன்றி விட்ட சால்ட் - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அணியை இலக்கை நோக்கி அதிவேகமாக எடுத்துச் சென்று விட்டது. உண்மையில் ஸ்ரேயாஸ் விக்கெட்டை தக்க வைத்துக் கொண்டு விக்கெட்டுகளுக்கு இடையே ஓடினால் மட்டும் போதுமானதாக இருந்தது. மற்ற அத்தனை சேதாரங்களையும் சால்ட் லக்னோவுக்கு சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
குறிப்பாக ஸ்லோ பால்களை அவர் பவுண்டரிகளுக்கு இரையாக்குவது புரிந்தும் அதே ஸ்ட்ராடெஜியைக் கையில் எடுத்து உதைப்பட்டது லக்னோ. முதல் 26 பந்துகளிலேயே அரைசதம் அடித்தவர் இறுதியில் 189 ஸ்ட்ரைக்ரேட்டில் அடிக்கப்பட்ட 89 ரன்களால் அணியை வெல்ல வைத்தார்.

அடுத்த நான்கு போட்டிகளையும் ஈடன் கார்டன்ஸில் ஆட உள்ள கேகேஆர் அதன் முதல் படியிலேயே வெற்றிகரமாகக் கால் வைத்துள்ளது. அடுத்த நான்கில் எத்தனை போட்டிகளை வெல்லுகிறது என்பதைப் பொறுத்து ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

