LSG v DC: ஒரு நாயகன் உதயமாகிறான்! அசத்திய அறிமுக வீரர் மெக் மர்க்ல்; குல்தீப் சூழலில் காலியான லக்னோ!

புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவிலுள்ள வாஜ்பாய் மைதானத்தில் இந்த சீசனின் 26வது போட்டியை எதிர்கொண்டன. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சென்ற போட்டியில் காயமான அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ்க்குப் பதிலாக அர்ஷத் கான் அணியில் சேர்க்கப்பட்டார். ரிஷப் பண்ட் டாஸ் ஜெயித்திருந்தால் `நாங்களும் பேட்டிங்தான் செய்து இருப்போம் என்று கூறியவர், குல்தீப் மற்றும் முகேஷ் அணிக்குத் திரும்புவதாகக் கூறினார். 
LSG v DC

டெல்லி என்னவோ புள்ளிப் பட்டியலில் கீழே இருந்தாலும், பர்ப்பிள் தொப்பிக்கான ரேஸில் அந்த அணியின் கலீல் அகமது மூன்றாவது இடத்தில் உள்ளார். அந்த அணி பெற்ற ஒரே வெற்றியான சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியின் விக்கெட் சப்ளேயராக அசத்தியிருந்தார். இந்தப் போட்டியின் முதல் ஓவர் அவர் கைக்கு வரத் தொடக்க வீரர்களான டி காக் மற்றும் ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டத்தின் முதல் பந்தை ஃபோருக்கு அனுப்பி அதே ஓவரில் மற்றொரு ஃபோரினை அனுப்பி 10 ரன்கள் அணிக்குச் சேர்த்தார் டி காக். கலீல் போட வந்த அடுத்த ஓவரிலும் இந்த ஜோடி 6, 4 என மைதானத்துக்கு வெளியே பந்தை அவர்கள் அனுப்ப, 4வது பந்தில் டி காக்கின் 19 (13) அவசர கேமியோவை முடித்து வைத்தார் கலீல். அதேபோல பவர்பிளேயில் தனது மூன்றாவது ஓவரில், தேவ்தத் படிகலின் காலிலே போட்டு LBW  முறையில் 2வது விக்கெட்டைச் சாய்த்தார். 6வது ஓவர் முடிவில் 57-2 என்ற நிலையை LSG அடைந்தது.

அடுத்து வந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் தனது மந்திர சுழலாளால் மார்க்கஸ் ஸ்டோனிஸை அவரது முதல் ஓவரிலேயே ஆபத்தான ஷாட் ஆட தூதுவிட்டார். அதற்குப் பலனாக பேக்வர்டு பாயின்ட் திசையில் இருந்த இஷான் ஷர்மாவிடம் கேட்ச் ஆனார். அவர் பெவிலியன் போய் கிளவுஸைக் கழட்டுவதற்குள் நிக்கோலஸ் பூரனுக்கு அற்புதமான கூகுளி ஒன்றை வீசி ஸ்டம்புகளைத் தெறிக்க வைக்க, குவா குவா வாத்தாக பூஜ்ஜியத்தில் வெளியேற்றினார். எப்படியாவது அணியைக் கரையேற்றி விடலாம் என்ற நம்பிக்கை முயற்சிகளை ஏற்படுத்தி ஆடிக்கொண்டிருந்த கேப்டன் கே.எல்.ராகுல்லின் விக்கெட்டையும், தனது 10வது ஓவரில் மூன்றாவது விக்கெட்டாக மாற்றினார். இதற்கு அம்பயர் விக்கெட் கொடுக்க மறுக்க, ரிஷப் பண்ட் DRS முறையை பயன்படுத்த, விக்கெட் பரிசாக விழுந்தது. 10 ஓவர் முடிவில் குல்தீப்பின் மாயாஜால சூழலினால் 80-5 என்ற நிலையை அடைந்தது LSG.

LSG v DC

அடுத்ததாக இம்பேக்ட் பிளேயராக வந்த ஹூடா 10 (13), இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் வார்னரிடம் ஸ்பீடாக கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். முகேஷ் குமாரின் 13வது ஓவரில் சோதனை சோதனை மேல் சோதனையாக’ மற்றொரு ஆல்ரவுண்டரான குர்ணால் பாண்டியா காலியாக, 13 ஓவர்களில் 94 ரன்களில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு பரிதாபமான நிலைக்கு வந்தது LSG. எப்படியும் 120 ரன்களுக்குள் அணி சுருண்டுவிடும் என்ற நினைக்க “அந்தப் பையனுக்குப் பயமில்ல” என்னும் ரகமாக உள்ளே வந்தார் ஆயுஷ் படோனி. 24 வயதான இளம் வீரரான இவர் டெத் ஓவர்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார், கலீல் மற்றும் இஷான் ஷர்மா ஆகியோரின் பந்துகளைச் சிறப்பான ஷாட்களால் வெளுத்து வாங்கினார்.

LSG v DC

அவருக்குப் பக்க துணையாக அர்ஷத் கான் தன் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் சிங்கிள் ரொட்டேட் செய்து கொண்டிருந்தார். 8வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 73 ரன்களைச் சேர்த்தது.  படோனி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து “டாமி எந்திரி” என்ற முறையில் எல்எஸ்ஜியின் இன்னிங்சை மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 167-7 என்ற கௌரவமான நிலையை எட்டியது LSG. இன்னிங்ஸ் நாயகனாக குல்தீப் 10 டாட் பந்துகள் உட்பட 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

டெத் ஓவர்களைத் தவிர்த்து சிறப்பாகப் பந்து வீசிய டெல்லி அணி உற்சாகமாக 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. அர்ஷத் கான் முதல் ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். நவீன் வீசிய இரண்டாம் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் ப்ரித்வி ஷா. ஆனால் நான்காவது ஓவரில் யஷ் தாக்கூரின் பந்தில் போல்ட்டாகி வெளியேறினார் டேவிட் வார்னர். ஆக, நான்கு  ஓவர் முடிவில் 30-1 என்ற நிலையில் டெல்லி அணி இருந்தது. இந்த விக்கெட் இழப்பு டெல்லி கேப்பிட்டல்ஸின் ரன் சேஸிங்கில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்களின் 22 வயதான பிரேசர் மெக் மர்க் தனது ஐபிஎல் அறிமுகத்தில் ஓர் அற்புதமான வாணவேடிக்கையை  நடத்தினார்.

அவரும் பிருத்வி ஷாவும் ‘சகல இன்னைக்கு அடிக்குற அடில... என்னும் ரேஞ்சில் பவுண்டரி அடிக்கும் விருந்துக்குச் சென்றனர்.  ஒருபுறம் அர்ஷத் கான் ஓவரில் 15 ரன்களையும், குருணால் பாண்டியாவின் ஓவரில் 17 ரன்களையும் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸை 6 ஓவர்களில் 62/1 என்ற நிலைக்குக் கொண்டு சென்றனர்.

LSG v DC

ஆனால் ரவி பிஷ்னோய் ஏழாவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பிரித்வி ஷாவின் விக்கெட்டை டீப் மிட்விக்கெட் கேட்ச் எடுத்து காலி செய்தார். இது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குப் பின்னடைவைத் தந்தது. ஒரு விக்கெட் மட்டுமே போன நிலையில் அடுத்த 4 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். “இது சோக் ஆகும் முயற்சியா” எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே “எங்க ஆரம்பிச்சுக்கோ அங்கேயே முடிக்குறேன்” என ரிஷப் பண்ட் 11வது ஓவரில் பிஷ்னோயை ஒரு ஸ்ட்ரைட் சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 

அடுத்து ஓவரில் பிரேசர் மெக் மர்க், ஸ்டானிஸ் பந்தில் தந்த கேட்சினை பிஷ்ணோய் தவறவிட டெல்லி கேப்டன் பண்ட் ஸ்டோனிஸை இரண்டு பவுண்டரிகளுக்கு விரட்டினார். 100 ரன்களை 12 ஓவரில் வெற்றிகரமாகக் கடந்தனர். அடுத்து குருனால் பாண்டிய வீச வந்த 13வது ஓவரில் “ஒரு நாயகன் உதயமாகிறான்” என்ற பாடலைப் பின்னணியில் போட்டு விட்டது போல பிரேசர்-மெக் மர்க் மூன்று தொடர்ச்சியான ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து தேவையான ரன்ரேட் சமன்பாட்டைக் குறைத்தார். அதுமட்டுமில்லாமல் தனது அறிமுக போட்டியிலே 31 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார்.

LSG v DC
இந்த ஜோடியிடம் எந்த அளவுக்கு செய்கூலி சேதாரம் வாங்க முடியுமோ வாங்கிய பின்னர், பிரேசர்-மெக் மர்க் 55(35), பண்ட் 41(24) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த ஓவரில் வெளியேற்றியது LSG. 27 பந்துகளில் வெறும் 20 ரன்கள் மட்டுமே இன்னும் தேவை என்ற நிலையில் ஸ்டப்ஸ் மற்றும் ஹோப் ஜோடி 18.1 ஓவரிலே எளிதாக இலக்கைக் கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது அணியை வெற்றிபெறச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆர்.சி.பி அணியை பின்னுக்குத் தள்ளி ஒருபடி மேலே ஏறியிருக்கிறது டெல்லி அணி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.