IPL Mega Auction 2025: `8 வீரர்களை ரீட்டெய்ன் செய்யலாம்! - ஐபிஎல் அணிகளின் விருப்பமும் எதிர்ப்பும்

நடப்பு ஐ.பி.எல் சீசன் முடிந்தவுடன் மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பாக சில அணிகள் வீரர்களை தங்கள் அணியில் அப்படியே தக்கவைத்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
IPL

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐ.பி.எல் இல் மெகா ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில்தான் சில வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் புதிதாக எடுத்து புதியதொரு அணியைக் கட்டமைப்பார்கள். கடைசியாக 2022 ஐ.பி.எல் சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடந்திருந்தது. 2025 சீசனுக்கு முன்பாக மீண்டும் மெகா ஏலம் நடக்கும். ஆரம்பத்தில் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியிலுள்ளவர்களில் 3 வீரர்களை அப்படியே தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது. அதன்பிறகு, ஒரு மெகா ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை தக்கவைப்பதோடு 2 ரைட் டூ மேட்ச் (RTM) கார்டுகளையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த கார்டு மூலம் ஏல தினத்தன்று தங்கள் அணிக்கு ஆடிய வீரர்கள் இருவரை ஏலத்தில் கேட்கப்பட்ட அதிகப்படியான தொகையைக் கொடுத்து அப்படியே வாங்கிக்கொள்ள முடியும்.

IPL 2024 Auction
2022 மெகா ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்க வேண்டிய வீரர்களின் எண்ணிக்கை 4 ஆகவும் ரைட் டூ மேட்ச் கார்ட் மூலம் 1 வீரரையும் வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டது.

2025 ஏலத்திற்கு முன்பாக என்ன செய்யலாம் என்கிற பரிந்துரைகளை பிசிசிஐ, அணி நிர்வாகங்களிடம் பெற்று வருகிறது. அதன்படி, மெகா ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கையை 8 ஆக உயர்த்த வேண்டும் எனச் சில அணிகள் கோரிக்கை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. RTM ஆப்ஷன்கள் தேவையில்லை என்ற கண்ணோட்டமும் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 90 கோடி ரூபாயைச் செலவளிக்கலாம் என்று இருக்கிறது. இதையும் 100 கோடி ரூபாயாக உயர்த்தவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

8 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக தக்கவைத்து கொள்ள முடியுமெனில் ஏலத்தில் அணிகளுக்குப் பெரிய வேலையே இருக்காது. ஏறக்குறைய அது ஒரு மினி ஏலத்தைப் போன்றுதான் அது காட்சியளிக்கும். ஐ.பி.எல்-இன் சுவாரஸ்யம் கூடியிருப்பதற்கு ஏலமும் ஒரு பெரிய காரணம்.

IPL Auction 2022:

அணிகள் விரும்புகின்றன என்பதற்காக அந்தச் சுவாரஸ்ய அம்சத்தை மட்டுப்படுத்த ஐ.பி.எல் நிர்வாகம் முன் வராது. அதற்குப் பதிலாக வேறு ஏதாவது முறையை அறிமுகப்படுத்தியோ அல்லது வீரர்களை பண்டமாற்றும் முறையில் (Transfers) இன்னும் அதிக தளர்வுகளை கொடுக்கவோ பிசிசிஐ முன்வரக்கூடும். சில அணிகளின் கோரிக்கைப்படி, 8 வீரர்களைத் தக்கவைக்க வேண்டும் என்கிற இந்த முடிவுக்கு மற்ற அணிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து விவாதிக்க அகமதாபாத்தில் ஏப்ரல் 16 அன்று ஒரு கூட்டம் நடைபெற இருந்தது. இப்போது அணிகளின் எதிர்ப்பால் அது தள்ளிப்போயிருக்கிறது. அதேபோல மொத்தமாக ஒவ்வொரு அணியும் ஒரேயொருவரைத்தான் தக்கவைக்க வேண்டும் என்றும், RTM ஆப்ஷன்கள் முன்புபோலப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

வரவிருக்கும் மெகா ஏலம் எப்படி நடைபெற வேண்டும் என்கிற உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.