LSG v GT: `மேலே ஏறி வர்றோம், நீ ஒதுங்கி நில்லு! - தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவுசெய்த லக்னோ
அறிமுகமாகி இரண்டே சீசன்கள்தான் ஆகின்றன; மும்பை, சென்னை, பெங்களூரு அணிகள் போலப் பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லை. இருந்தாலும் குஜராத், லக்னோ இடையேயான போட்டியை எதிர்நோக்க சில காரணங்கள் உண்டு.
ஒரு பக்கம் அனுபவமிக்க கே.எல்.ராகுல், இன்னொரு பக்கம் இள ரத்தம் சுப்மன் கில். சேஸிங்கில் வெற்றி பெறுவதில் சிறப்பான ரெக்கார்டு கொண்ட அணி குஜராத். சேஸிங் செய்த போட்டிகளில் 75% வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால், லக்னோ அணியோ டிபெண்ட் செய்வதில் கில்லாடி. இதுவரை முதல் பேட்டிங் பிடித்த 82% போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. பங்குகொண்ட இரண்டு சீசன்களிலும் இரண்டு அணிகளுமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கின்றன. ஆனால், நேருக்கு நேர் மோதிய நான்கு போட்டிகளிலும் குஜராத் அணி மட்டுமே இதுவரை வெற்றிவாகை சூடியிருக்கிறது.
எதிர்பார்த்தது போலவே டாஸ் வென்று லக்னோ பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. ஒருபுறம் ராகுல் பொறுமையாக ஆட, மறுபுறம் டி காக் அடித்து விளாசுவார் என்ற அதே அணுகுமுறையுடனே லக்னோ களமிறங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே உமேஷ் யாதவ் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு டி காக் நடையைக் கட்ட பவர்பிளேயில் ராகுல் அதிரடி காட்டினால்தான் ஸ்கோர் வரும் என்ற நிலைமை. அடுத்து வந்த தேவ்தத் படிக்கலும் சீக்கிரமாக பெவிலியன் திரும்பினார்.
அதன்பிறகு இறங்கிய ஸ்டோய்னிஸ் அடித்த சில பவுண்டரிகளின் தயவில் 47-2 என்ற ஸ்கோருடன் பவர்பிளேயை முடித்தது லக்னோ. இருந்தாலும் பேட்டிங் அடுத்த கியரை எட்டவே இல்லை. ராகுலும் ஸ்டோய்னிஸும் திக்கித் திணறி ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தாலும் அது போதிய வேகத்தில் அமையவில்லை. 62 பந்துகளில் 73 ரன்களைச் சேர்த்தது இந்த இணை. ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சமீபகாலங்களில் சிறப்பாக பந்துவீசாமல் திணறி வந்த ரஷீத் கான் இந்தப் போட்டியில் எக்கனாமிக்கலாக பந்துவீசினார். சக ஆப்கன் வீரரான நூர் அஹமதும் ரன்களை விட்டுக்கொடுக்காமல் பந்துவீசியிருந்தார். இந்த வேகத்தில் 150 என்ற ஸ்கோரை தொடுவதே கடினம்தான் என்ற நிலையில் கடைசியில் ஆயுஷ் பதோனியும் [20(11)] நிகோலஸ் பூரணும் [32(22)] அதிரடி காட்டி 163 என்ற ஸ்கோரை எட்டவைத்தனர். அந்த பிட்ச்சில் அடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஸ்கோரை விட 20 ரன்கள் குறைவு என்ற உணர்வே ஏற்பட்டது. இருந்தும், இதுவரை 160+ இலக்கை நிர்ணயித்தபோது லக்னோ தோற்றதே இல்லை என்ற சாதனை அவர்களை ஆசுவாசப்படுத்தியிருக்கும்.

ஆனால், பவர்பிளே லக்னோ நினைத்தது போல அமையவில்லை. பலரது கவனத்தையும் பெற்ற எக்ஸ்பிரஸ் வேக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஒரே ஒரு ஓவர் வீசி தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். சாய் சுதர்சன் சிறப்பாக ஆட, பவர்பிளேயிலேயே 50 ரன்களைக் கடந்தது குஜராத். 100-க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்த கில் பவர்பிளேயின் கடைசி பந்தில் அவுட்டானார். பார்ட்னர்ஷிப் முறிந்தது. அப்போது கிடைத்த அந்தச் சிறிய பொறியில் பெரும் நெருப்பை எரிய விட்டனர் ஸ்பின்னர்கள். கேன் வில்லியம்சனை வெறும் 1 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார் ரவி பிஷ்னாய். அவரது பந்துவீச்சில் அவரே பிடித்த அந்த கேட்ச் இந்த சீசனின் சிறந்த கேட்ச்சாக பதிரனாவின் கேட்ச்சுடன் போட்டிப் போடும்.
மறுபுறம் குருணால் பாண்டியா ரன்களை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாகப் பந்துவீசினார். அதன் விளைவாக விக்கெட்களும் சரியத்தொடங்கின. அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் சாய் சுதர்சனும் ஆட்டமிழந்தார். தர்சன் நல்கண்டே, விஜய் சங்கர் இணையும் ரன்கள் குவிக்கத் திணறினர்.
குருணால் பாண்டியா நான்கு ஓவர்களில் வெறும் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். மீதியிருந்தவர்களை யாஷ் தாக்கூர் தனது வேகப்பந்துவீச்சால் சுருட்டினார். மொத்தமாக 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார். தனியாகப் போராடிக்கொண்டிருந்த ராகுல் தேவேதியாவும் 30 ரன்களில் ஆட்டமிழக்க 130 ரன்களுக்கு ஆல்அவுட்டானது குஜராத்.
போட்டிக்குப் பிறகு பேசிய கில், "பேட்டிங்கிற்குச் சாதகமான பிட்ச்சில் இந்த இலக்கை எட்டமுடியாததற்கு எங்களது மோசமான பேட்டிங்கே காரணம்" என்றார். சிறப்பாகப் பந்துவீசிய தங்களது பௌலர்களையும் பாராட்ட அவர் தவறவில்லை. மில்லர் போன்ற வீரர் இல்லாமலிருப்பது குஜராத் அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. பீல்டிங்கின்போது துடிப்புடன் வீரர்களை வழிநடத்தும் கில், இந்த பேட்டிங் பிரச்னைக்கும் தீர்வுகண்டால் மட்டுமே இந்தத் தொடரில் குஜராத் சோபிக்க முடியும்.

லக்னோ தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. குஜராத் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவுசெய்திருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகனாக இருந்த மயங்க் யாதவ் இல்லாமலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டது லக்னோவுக்குப் பெரிய ப்ளஸ். பேட்டிங்கிலும் இதே அதிரடியை காட்டினால் இந்த சீசனில் அதிசயங்களை நிகழ்த்தும் இந்த லக்னோ அணி. அதைத் தொடங்கி வைக்க வேண்டிய இடத்திலிருக்கும் ராகுல் அதை செய்வாரா என்பதுதான் கேள்வி!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


