SRH v CSK: ஆடுகளம் மட்டும்தான் சென்னையின் தோல்விக்குக் காரணமா? ருத்துராஜ் கோட்டை விட்டது எங்கே?
மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் ரெட் சாய்ல் பிட்சில் 277 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸோ சிஎஸ்கேவுடனான போட்டியில் பிளாக் சாய்ல் விக்கெட்டைத் தயார் செய்து புத்திசாலித்தனமாக வெற்றியைப் பெற்றுள்ளது.
யானைப் பசிக்கு சோளப் பொரியே போதாது என்றால் சன்ரைசர்ஸில் உள்ளதோ மதயானைக் கூட்டம்... அப்படியிருக்க இந்த ஸ்கோர் அவர்களுக்கான தீனி அல்ல என்பதே உண்மை. டிஃபெண்டிங் சாம்பியனான சி.எஸ்.கே-விற்கு பேக் டு பேக் தோற்றுள்ள இரு போட்டிகள் சில பலவீனங்களையும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளன.
சன்ரைசர்ஸ் முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகப் பதித்த அந்த 277 ரன்கள் பெஞ்ச் மார்க், எதிரணியின் பௌலர்களின் மனதில் ஒரு பயத்தை விதைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதேமாதிரி இன்னொரு ரன் மழை போட்டி நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சன்ரைசர்ஸ் சர்ப்ரைஸாக பிளாக் சாய்ல் விக்கெட்டைத் தேர்வு செய்து வைத்து சி.எஸ்.கே-வுக்கு முதல் செக்கை வைத்தது.
ரெட் ஹாட் ஃபார்மில் உள்ள சன்ரைசர்ஸ் பேட்களுக்கு வேகத் தடையோ விலங்கோ போடுவது கடினம். அதுவும் பதிரானாவும் முஸ்தாஃபிசுரும் இல்லாத நிலையில் பௌலிங் பலவீனம் அப்படியே காட்சிப்படுத்தப்பட வேண்டியிருந்தது. அப்படியிருக்க முடிந்த அளவு இலக்கை எங்கேயோ எட்டாத தூரத்தில் வைப்பதுதான் சி.எஸ்.கே கையில் எடுத்திருக்க வேண்டிய ஸ்ட்ராடெஜி. அதைச் சரியாகத் திட்டமிடாமல் கவனமின்றி அணுகியதுதான் அவர்கள் செய்த முதல் தவறு!
பௌலிங்கில் எப்படி மேட்ச் அப்களைக் கவனித்து அதற்கேற்ப கேப்டன்கள் திட்டம் தீட்டுவார்களோ அதேபோல் பேட்டிங்கிலும் கூட எதிரணியின் திட்டத்திற்கு எதிர் திட்டம் போடும் அளவிற்கு சாய்ஸுகளைத் தரக்கூடியதுதான் சி.எஸ்.கே பேட்டிங் யூனிட். ஆளுமைமிக்க பேட்ஸ்மேன்களால் நிரப்பப்பட்டது மற்றும் இறுதிவரை நீளுவது மட்டுமல்ல பலம். இடக்கை வலக்கை பேட்ஸ்மேன்கள் விரவிக் கிடப்பதும், ஸ்பின் ஹிட்டர்களும், வேகப்பந்துவீச்சு வீச்சை சிறப்பாகக் கவனிக்கும் பேட்ஸ்மேன்களும் கலந்தே உள்ளதும் கூடத்தான். இத்தனை இருந்தும் 166 என்னும் சராசரிக்கும் கீழான ஸ்கோரையே சி.எஸ்.கே செட் செய்திருந்தது.

கடிக்கும் போது நுனிக்கரும்பில் இருந்து அடிக்கரும்பிற்கு நகர்ந்து இறுதியில் நுனிக்கரும்பிற்கே திரும்பியது போலத்தான் சி.எஸ்.கே-யின் மொத்த இன்னிங்ஸும் இருந்தது. அடிக்கரும்பாக அது இனித்தது ஷிவம் துபேயின் இருப்பின் போது மட்டுமே. ரன்களை அடித்துச் சேர்த்திருக்க வேண்டிய பவர்பிளே, டெத் ஓவர்கள் இரண்டிலுமே கோட்டை விட்டிருந்தனர். பவர்பிளேயில் வெறும் 48 ரன்கள் என்றால் இறுதி ஐந்து ஓவர்களில் வெறும் 38 ரன்கள் மட்டுமே வந்திருந்தன. ஓப்பனிங்கில் ருத்துராஜ், மிடில் ஓவர்களில் அஜிங்யா ரஹானே, டெத் ஓவர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் டேரியல் மிட்செல் என யாருமே பெரிதாக சாதிக்கவும் இல்லை, தாக்குப் பிடிக்கவும் கூட இல்லை. மிடில் ஓவர்களில் துபே சேர்த்து தந்த ரன்களும் கிடைக்காமல் போயிருந்தால் ஸ்கோர் போர்டு இன்னமும் வறட்சியை சந்தித்து இருக்கும். அவரது ஸ்ட்ரைக்ரேட் 188-ஐ நெருங்க, மற்ற பேட்ஸ்மேன்கள் யாரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 135-ஐ கூடத் தாண்டவில்லை.
சன்ரைசர்ஸ் இந்த பிட்சில் எந்தமாதிரி பௌலிங் வீச வேண்டும் என்ற தெளிவான திட்டத்தோடு வந்திருந்தது. ஸ்லோ கட்டர்கள், பேக் ஆஃப் லெந்த் டெலிவரிகளைத் தொடர்ந்து வீசி சி.எஸ்.கே பேட்ஸ்மேன்களைத் திணறச் செய்தது. பிளாக் சாய்ல் விக்கெட் என்பதால் பந்து கொஞ்சம் தாமதமாக பேட்டுக்கு வர அதை எதிர்த்து அடிக்க சி.எஸ்.கே பேட்ஸ்மேன்களால் முடியவில்லை. அவர்களிடம் அதை கவுன்ட்டர் அட்டாக் செய்ய மாற்றுத் திட்டமும் இல்லை. நடராஜன், புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ், உனத்கட் என அனைவரும் இந்த கட்டர்ஸ் பௌலிங் யுத்தியைப் பயன்படுத்தி சி.எஸ்.கே ரன்களை வெகுவாக மட்டுப்படுத்தி விட்டனர்.
சரி, இதே திட்டத்தை சி.எஸ்.கே பௌலர்களும் கையில் எடுத்து சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்துவார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. முகேஷ் சௌத்ரி தொடர்ந்து வேகமாக மட்டும் வீச, சிக்ஸர் மழையை பொழிந்து இரண்டாவது ஓவரில் மட்டும் 27 ரன்களை குவித்து, பவர்பிளே முடியும்போது 78 ரன்கள் எடுத்து போட்டியை மொத்தமாகத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டது சன்ரைசர்ஸ்.

முக்கிய பௌலர்கள் இருவர் இல்லாத நிலையில் சி.எஸ்.கே-விடம் எந்தப் பெரிய திட்டமும் இல்லை. ஓப்பனர்களில் ஒருவரான அபிஷேக் ஷர்மா அடித்த அடி சி.எஸ்.கே தலையில் பெரிய இடியை இறக்கியது என்றே சொல்ல வேண்டும். அதற்குபிறகு சி.எஸ்.கே-வால் சன்ரைசர்ஸை எந்தத் தருணத்திலும் பெரிதாகக் கட்டுபடுத்த முடியவில்லை.
15 ஓவர்களிலேயே ஜெயித்து விடுவார்கள் என்ற நிலையிலிருந்த போட்டியை ஸ்பின்னர்கள் துணைகொண்டு ரன் குவிப்பைச் சற்று கட்டுப்படுத்தி 18வது ஓவருக்குத் தோல்வியைச் சற்றே தள்ளிவைக்க மட்டுமே சி.எஸ்.கே-வால் முடிந்தது.
பேட்டிங் செய்த போது ரன்ரேட் மீதும் பார்வை படிய வேண்டும் என்பதை மறந்து ஆக்ஸிலேட்டரை அழுத்தி எந்த இடத்திலும் வேகத்தைக் கூட்டவே முயலாததுதான் மிகப்பெரிய பலவீனமாக, சி.எஸ்.கே-வின் தோல்விக்கான கதைக் களமாக மாறியது. இருப்பினும் அது தவிர பதிரானா மற்றும் முஸ்தாஃபிசுர் இல்லாததும் அணியின் பௌலிங் யூனிட்டை உருக்குலைத்தது என்பதே உண்மை. ஏழு பௌலிங் ஆப்சன் இருந்துமே ரச்சின் மற்றும் மொயின் அலி தவிர்த்து வேறு எந்த பௌலரும் சிறப்பாக பந்து வீசவில்லை. முகேஷ் சௌத்ரியின் அந்த ஒரு காஸ்ட்லி ஓவர் மரண அடி கொடுத்து தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

சி.எஸ்.கே, டாப் 4-ல் இருந்து நழுவி கீழே இறங்காவிட்டாலும் இரு அடுத்தடுத்த தோல்விகள் பௌலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலுமே உள்ள குறைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. இதனைச் சரி செய்வது மட்டுமே அவர்களை பழையபடி டிராக்கில் அமர்த்தும்.
ருத்துராஜ் தொடர்ந்து 4 போட்டிகளையும் டாஸில் தோற்றுள்ளார் எதிர்வரும் கே.கே.ஆர் உடனான போட்டியில் டாஸையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


