Slow Over Rate: `இரட்டிப்பு அபராதம்; மீண்டும் தொடர்ந்தால் தடை! - பண்ட்டின் தலைக்குமேல் கத்தி!

கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கும் டெல்லி அணி வீரர்களுக்கும் ஐ.பி.எல் நிர்வாகம் அபராதம் விதித்திருக்கிறது. எதற்கு? ஏன்?

Pant

ஐ.பி.எல் இல் Slow Over rate என்கிற விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒரு அணி 20 ஓவர்களை 90 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும். திடீரென ஏற்படும் காயங்கள், தவிர்க்க முடியாத இடைவெளி இதையெல்லாம் கழித்துவிட்டுதான் இந்த 90 நிமிடங்கள் கணக்கு வைக்கப்படும். அப்படி பார்க்கையில் 90 நிமிடங்களுக்குள் பந்துவீசி முடிக்கவில்லையெனில் அந்த அணியின் கேப்டனுக்கும், அணிக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.

DC

முதல் முறையாக ஒரு அணி இப்படி காலதாமதத்தைச் செய்து Slow Over rate பிரச்சனையில் சிக்கினால் அந்த அணியின் கேப்டனுக்கு மட்டும் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே அணி அதே தவறை செய்தால் கேப்டனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதமும் மற்ற வீரர்களுக்கு 6 லட்ச ரூபாய் அல்லது அவர்களின் போட்டி ஊதியத்தில் 25% தொகை என எது குறைவோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.

மூன்றாவது முறையாக இதே தவறை செய்தால் கேப்டனுக்கு 30 லட்ச ரூபாய் அபராதத்தோடு ஒரு போட்டியில் ஆடுவதற்கு தடையும் விதிக்கப்படும். வீரர்களுக்கு 12 லட்ச ரூபாய் அல்லது போட்டி ஊதியத்தில் 50% என அதில் எந்தத் தொகை குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டியை முடிக்க வேண்டி ஐ.பி.எல் நிர்வாகம் இப்படி ஒரு விதியை வைத்திருக்கிறது. ரிஷப் பண்ட் ஏற்கெனவே ஒரு போட்டியில் காலதாமதத்திற்காக அபராதம் கட்டியிருக்கிறார். இந்நிலையில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக மீண்டும் இதே கால தாமதத்தை டெல்லி அணி செய்திருக்கிறது. இதனால் ரிஷப் பண்ட்டிற்கு 24 லட்ச ரூபாயும் அணியின் மற்ற வீரர்களுக்கு 6 லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

DC
இன்னும் ஒரு போட்டியில் இதே தவறை டெல்லி அணி செய்தால் 30 லட்ச ரூபாய் அபராதத்தோடு ஒரு போட்டியில் ஆடுவதற்கான தடையையும் பண்ட் பெற வேண்டியிருக்கும். தொடரின் முக்கியமான கட்டத்தில் அது நிகழ்ந்தால் டெல்லிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.