DC v CSK: ருத்துராஜ் செய்யவேண்டியது என்ன? சென்னையின் தோல்விக்குக் காரணமான அந்த 3 விஷயங்கள்!

நடப்பு சீசனில் முதல் தோல்வியை அடைந்திருக்கிறது சென்னை அணி. டெல்லி அணிக்கு எதிராகக் கடைசி வரை போராடி, நெருங்கி வந்து தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கான முக்கியமான அந்த 3 காரணங்கள் பற்றி இங்கே...
DC

ஓப்பனர்கள் சொதப்பல்:

சென்னை அணியின் வெற்றிப் பயணத்திற்கு அதன் ஓப்பனிங் கூட்டணிதான் பெரிய காரணம். இருவருமே அடிப்பார்கள் அல்லது இருவரில் ஒருவராவது கட்டாயம் அடிப்பார்கள். இந்தப் போட்டியில் இருவருமே அடிக்கவில்லை. ருத்துராஜ் 1 ரன்னிலும் ரச்சின் 2 ரன்களிலும் கலீல் அஹமதுவின் பந்தின் வீழ்ந்தனர். ஐ.பி.எல் வரலாற்றில் சேஸிங்கில் சென்னை அணியின் பேட்டர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனது இதுதான் முதல் முறையாம். இவர்கள் இருவருமே சோபிக்காததால் தொடக்கத்தில் ஒரு மொமன்டமே கிடைக்கவில்லை.

CSK Openers

பவர்ப்ளேயில் ஸ்கோர் போர்டு நகரவே இல்லை. முதல் 6 ஓவர்களில் சென்னை அணி 32 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ரன்ரேட் 5-ஐ சுற்றிதான் இருந்தது. அப்போதே தேவைப்படும் ரன்ரேட் எகிறத் தொடங்கிவிட்டது. 10 ஓவர்கள் முடிந்திருந்த தறுவாயில் சென்னை அணியின் வெற்றிக்கு ஓவருக்குக் கிட்டத்தட்ட 12 ரன்கள் தேவைப்பட்டன. மிடில் ஓவர்களிலும் டெல்லியின் பௌலர்கள் சிறப்பாக வீச 19வது ஓவரிலேயே சென்னையின் தோல்வி உறுதியானது. ஆனாலும் தோனியின் அதிரடியில் சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றிருந்தது. அந்த 20 ரன்கள் பவர்ப்ளேயில் வந்திருந்தால் போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும். ஆனால், கலீல் அஹமது சிறப்பாக வீசி ஓப்பனர்கள் இருவரையும் வீழ்த்த, அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

வேகமெடுக்காத மிடில் ஆர்டர்:

ஓப்பனிங் சொதப்பியிருந்தாலும் ஆட்டம் மொத்தமாக சென்னையின் கையைவிட்டுச் சென்றுவிடவில்லை. ரஹானே போராடி ஆட்டத்தைப் பிடித்து இழுத்து வைத்திருந்தார். ஆனால், டேரில் மிட்செல், ஜடேஜா, துபே போன்றோர் அணி எதிர்பார்த்த ஆட்டத்தை ஆடவில்லை. ரஹானே 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தார். 26 பந்துகளை எதிர்கொண்ட டேரில் மிட்செல்லின் ஸ்ட்ரைக் ரேட் 130தான். சிக்ஸர் மணி சிவம் துபேவின் ஸ்ட்ரைக் ரேட் 105தான். ஃபினிஷர் ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் 123. தேவைப்படும் ரன்ரேட் 12க்கும் மேல் ராக்கெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருந்த சமயத்தில்தான் இவர்கள் இப்படி ஆடியிருந்தார்கள்.

Rahane

ஜடேஜாதான் அணியின் ஃபினிஷர் என்பதை தோனி பலமுறை சொல்லிவிட்டார். அப்படியிருக்க தோனியே டெத் ஒவர்களில் ஜடேஜாவுக்கு சிங்கிள் கொடுக்காமல் ஆட வேண்டிய நிலைமையில்தான் ஜடேஜாவின் ஆட்டம் இருந்தது. இவர்களில் யாரோ ஒருவர் அதிரடியாக ஆடியிருந்தால் கூட தோனியின் முயற்சிகள் வெற்றியில் முடிந்திருக்கும்.

சொதப்பல் பௌலிங்:

பதிரனாவைத் தவிர வேறு யாருமே பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. துஷார் தேஷ்பாண்டே எக்கனாமிக்கலாக வீசியிருந்தாலும் அதைப் பயன்படுத்தி இன்னொரு முனையில் யாரும் விக்கெட் எடுக்கவில்லை. தீபக் சஹார் பவர்ப்ளேயில் அடிவாங்கினார். பவர்ப்ளேயில் விக்கெட்டே இல்லை. பதிரனா அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து ஆட்டத்தை சென்னை பக்கமாகத் திருப்பிய போதும் அதைப் பயன்படுத்திக் கொண்டு டெல்லியைக் குறைவான ரன்களுக்குள் சுருட்டவில்லை. பதிரனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரைத் தவிர பந்துவீசிய அனைவரின் எக்கானமியும் 10க்கு மேல் இருந்தது.

பதிரனா
Ruturaj Gaikwad | ருத்துராஜ்

மேலும், இந்தப் போட்டியில் சென்னை அணி சரியாக 5 பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தனர். ஜடேஜா பயங்கரமாக அடிவாங்கியிருந்த போதும் ரச்சின் ரவீந்திராவை ஒரு ஆப்சனாக கூட யோசிக்கவில்லை. டேரில் மிட்செல் கடந்தப் போட்டியில் பந்துவீசி விக்கெட்டும் எடுத்திருக்கிறார். ஆனால், அவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதற்கு பின்னால் என்ன திட்டம் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

சென்னை அணியின் முதல் தோல்வி இது. ஆனாலும் ருத்துராஜ் கூலாகத்தான் இருக்கிறார்.

"இன்னும் இரண்டு மூன்று பவுண்டரிகள் அடித்திருந்தாலோ ஃபீல்டிங்கில் சில பவுண்டரிகளைத் தடுத்திருந்தாலோ நாங்கள் வென்றிருப்போம். அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதை பெரிய பின்னடைவாக பார்க்கவில்லை" என பேசியிருந்தார். நேர்மறையான பேச்சு. ஆனாலும் பிரச்னைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தொடர் சவாலானதாக மாறிவிடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.