Sachin: தோனி குறித்த எனது கணிப்பு சரியாக இருந்தது! - சச்சின் பகிர்ந்த `கேப்டன்சி ரகசியம்

2007-ல் தன்னை இந்திய அணியின் கேப்டனாகப் பதவியேற்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், தனக்குப் பதிலாக தோனியை கேப்டனாக்குமாறு கூறியதாகவும் சச்சின் டெண்டுல்கர் பேசியிருக்கிறார்.

இந்திய டி20 அணியின் கேப்டனாக தோனி 2007-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அந்தச் சமயத்தில் டி20 உலகக்கோப்பை தொடரை அவரது தலைமையில் இந்திய அணி வென்ற நிலையில், அவர் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். தோனியை கேப்டனாக நியமிக்குமாறு தான்தான் கூறியதாக சச்சின் டெண்டுல்கர் இப்போது பேசியிருக்கிறார்.

தோனி

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிக்கு இடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின் டெண்டுல்கர், “2007-ம் ஆண்டு பிசிசிஐ மீண்டும் எனக்கு கேப்டன் பதவியை வழங்கும் முடிவில் இருந்தது. ஆனால், அப்போது நான் முழு உடற்தகுதியோடு இல்லை. எனது உடல் மோசமான நிலையில் இருக்கிறது. கேப்டன் அணியில் வருவதும், போவதுமாக இருக்கக் கூடாது என்று கூறி கேப்டன் பதவியை மறுத்தேன்.

தோனி மீதான என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது. அவரது மனம் நிலையாக இருந்தது. சரியான முடிவுகளை அவர் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்தச் சமயத்தில் நான் பிசிசிஐ தலைவரிடம், தோனியிடம் தலைமைக்கேற்ற பண்புகள் உள்ளன. அவரை நீங்கள் கேப்டனாக்க ஆலோசிக்கலாம் எனக் கூறினேன்" என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருக்கிறார்.

சச்சின், தோனி

2007 முதல் 2017 வரைக்கும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் தோனி நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தலைமையில்தான் இந்திய அணி 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வென்றிருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.