CSK v RCB: `யாருக்குமே கொடுக்காமல் எதற்கு டிக்கெட் விற்கிறீர்கள்? - கொந்தளிக்கும் ரசிகர்கள்
மார்ச் 22-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டிக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் ஓப்பன் ஆகியிருக்கிறது. ஆனால், பெரும்பாலான ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் `யாருக்குமே கொடுக்காமல் எதற்காக டிக்கெட் விற்பனை எனப் பூ சுற்றுகிறீர்கள்! என்று கொந்தளித்து வருகின்றனர்.
வரப்போகும் ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியே இதுதான். தோனிக்குக் கடைசி சீசன். விராட் கோலி சில மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுக்கிறார். இருவரும் எதிர் எதிராக நின்று போட்டி போடப் போகிறார்கள் என்பதால் இந்தப் போட்டி மீது கடும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் முறையில் மட்டுமே வழங்கப்படும் என்றும் மார்ச் 18-ம் தேதி காலை 9:30 மணிக்கு விற்பனை தொடங்கும் என்றும் சென்னை அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அதை நம்பி ரசிகர்களும் இன்று ஆவலோடு காத்திருந்தனர்.
THE TIME IS NOW! ⏰
— Chennai Super Kings (@ChennaiIPL) March 18, 2024
Get your tickets now for the IPL 2024 Opener!⚡
Click the Link Below! #CSKvRCB #WhistlePodu
ஆனால், சொன்னதற்கு மாறாக 20 நிமிடங்கள் முன்பாக காலை 9:10 க்கே டிக்கெட் விற்பனையை தொடங்குவதாக சென்னை அணி திடீரென அறிவித்து உடனடியாக புக் செய்வதற்கான லிங்கையும் வெளியிட்டது. 9:30 மணி என நினைத்து சரியான நேரத்திற்கு வந்த ரசிகர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், டிக்கெட் ஓப்பன் ஆகியிருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களால் டிக்கெட்டை புக் செய்யவே முடியவில்லை. முதலில் சில ரசிகர்களுக்கு சீட்டைத் தேர்வு செய்வது வரைக்கும் சென்று புக் செய்ய முடியாமல் போயிருக்கிறது. பின்னர், சில ரசிகர்களுக்கு வரிசையில் காத்திருங்கள் எனச் சொல்லி 39,000, 40,000 என ஆயிரக்கணக்கில் வரிசை எண் காண்பித்திருக்கிறது. மொத்த டிக்கெட்களே இதைவிடக் குறைவுதான் எனும்போது நிச்சயம் டிக்கெட் கிடைக்காது என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். இன்னும் சில ரசிகர்களுக்கு வரிசைக்குள் செல்வதற்கே சில மணி நேரங்கள் ஆகும் காத்திருங்கள் எனக் காட்டியிருக்கிறது.

கடந்த முறையை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. 2000, 2500 ரூபாய் என விற்றுக்கொண்டிருந்த டிக்கெட் இந்த முறை 4000, 4500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிரமமெனினும் அதிக தொகையை கொடுத்து எப்படியாவது போட்டியைப் பார்த்துவிடலாம் என ஆவலோடு இருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டும் டிக்கெட் விற்பனையில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருந்தன. டிக்கெட்டுகளை புக் செய்ய ரசிகர்கள் கடுமையாக திணறியிருந்தனர். ஆனால், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை ஜரூராக நடந்திருந்தது. அதேபோல போட்டியின் போது சில இருக்கைகள் காலியாகவும் கிடந்தன. அதை முறைப்படி ரசிகர்களுக்கே விற்றிருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்தது. இப்படி நடந்தால் ரசிகர்களுக்கு என்ன மரியாதை? எனப் பலரும் சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
