IPL 2024 Preview - CSK: `தலைவன் இருக்கின்றான்! தோனிக்குப் பெருமை சேர்க்கும் கடைசி சீசனாக இருக்குமா?
"நான் ஓய்வு பெறுவதற்கு இதைவிட சிறந்த தருணம் வாய்க்குமா எனத் தெரியவில்லை. மக்கள் என் மீது அளவுகடந்த அன்பைப் பொழிந்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி எனக்கூறிவிட்டு செல்வது எளிது. ஆனால், அவர்களின் அன்புக்காகக் கடினமாக உழைத்து இன்னும் ஒரு சீசனில் ஆட முயற்சி செய்வேன்" கடந்த சீசனில் குஜராத்துக்கு எதிரான இறுதிப்போட்டியின் இறுதிப்பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து சென்னையை சாம்பியனாக்கிய பிறகு தோனி பேசியவை இவை.
கடந்த சீசனின் மீது ரசிகர்களுக்கும் சரி, சிஎஸ்கே வீரர்களுக்கும் சரி அத்தனை பிடிப்பும் ஈர்ப்பும் ஏற்படக் காரணம், அது தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்கிற அனுமானமே! அதற்காகத்தான் ரசிகர்கள் புயலென புறப்பட்டு மைதானத்திற்கு வந்தார்கள். சென்னை அணியின் மற்ற வீரர்களின் தோனிக்காக உயிரைக் கொடுத்து ஆடியிருந்தார்கள். தோனி இந்த சீசனிலும் ஆடப்போவதால், கடந்த முறை செய்த அத்தனையையும் மீண்டும் அப்படியே ரிப்பீட் மோடில் செய்ய வேண்டும். தோனிக்குச் சரியான விடைபெறலைக் கொடுக்க வேண்டுமெனில் கடந்த முறையைப் போன்று கோப்பையை வென்றே ஆக வேண்டும். அதற்கு சிஎஸ்கே தயாராக இருக்கிறதா?
"சென்னையில் வைத்துதான் என்னுடைய கடைசிப் போட்டியை ஆட விரும்புகிறேன்!" - 2021 சீசனில் கோப்பையை வென்ற சமயத்தில் தோனி கூறியது இது.
அடுத்த இரண்டு சீசனிலும் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. இந்த முறை அப்படியில்லை. கடந்த முறை சென்னை அணிதான் சாம்பியன் என்பதால் இறுதிப்போட்டி சென்னையில் வைத்தே நடக்கும். தோனி எதிர்பார்த்ததை போன்று சரியான விடைபெறல் மேடை அவருக்கு வாய்க்கும் சாதகம் இருக்கிறது. அதற்கு சென்னை அணி இறுதிப்போட்டி வரை தகுதிப்பெற வேண்டும். இல்லையெனினும் கடைசிப்போட்டியை சென்னையில் வைத்து முடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், இறுதிப்போட்டி என்பதுதான் தோனிக்கான சரியான சமர்ப்பணமாக இருக்க முடியும்.

தோனியை மையப்படுத்திய மற்றுமொரு சீசன் என்பதால் தோனியிலிருந்தே தொடங்கிவிடுவோம். தோனி ஒரு கேப்டனாக மட்டுமே தன்னைப் பார்க்கிறார். அந்த ஒரு வேலையை சரியாகச் செய்தால் போதும் என நினைக்கிறார். ரசிகர்களின் விருப்பத்திற்காக மட்டுமே கடைசி ஓவரில் களமிறங்குகிறார். அதில் இந்த சீசனிலும் எந்த மாற்றமும் இருக்கப்போவதாகத் தெரியவில்லை. அதேபோல, தோனியின் கேப்டன்சியைப் பற்றிப் பெரிதாக எந்த விமர்சனமும் இருக்கப்போவதில்லை.
இன்னமும் அவர்தான் சிறந்த கேப்டன். 2கே கிட்டான கில்லுடன் நேருக்கு நேராக நின்று டாஸ் போடப் போகிறார். ஐ.பி.எல் தொடரில் இனி இப்படி இத்தனை வருடம் நீடித்து நிலைக்கக்கூடிய கேப்டன் வாய்ப்பாரா என்பது சந்தேகமே.

கடந்த முறை தோனியின் முட்டியில் காயம் ஏற்பட்டிருந்தது. கொஞ்சம் சிரமப்பட்டாலும் கீப்பிங்கைச் சிறப்பாகவே செய்திருந்தார். இந்த முறையும் தோனிதான் கீப்பிங் செய்வார். சிரமப்பட்டாலும் தொடர் முழுவதும் அந்தப் பணியைச் சிறப்பாக செய்து முடித்துவிட வேண்டும் என்பதில் தோனி உறுதியாக இருப்பார்.
கடந்த சீசனில் ருத்துராஜூம் கான்வேவும்தான் சென்னை அணியின் வெற்றிக்கான பிரதான காரணமாக இருந்தனர். வலது இடது காம்பீனேஷனில் இந்தக் கூட்டணி அசத்தியது. கான்வே 672 ரன்களை அடித்திருந்தார். ருத்துராஜ் 590 ரன்களை அடித்திருந்தார்.

அணிக்காக பெரும்பாலான ரன்களை இவர்கள்தான் அடித்திருந்தனர். இந்தக் கூட்டணி இப்போது முறிந்திருக்கிறது. கான்வேவுக்கு காயம். சீசனின் பிற்பாதியில்தான் அவரின் உடற்தகுதி பற்றித் தெரியவரும். ஓப்பனிங்கில் ஒரு மொமண்டம் இருக்க வேண்டும் என்பது தோனியின் விருப்பம். தோனியின் விருப்பத்தை ருத்துராஜ் + கான்வே கூட்டணி சரியாக பூர்த்தி செய்து வந்தது. இப்போது புதுக்கூட்டணியை உருவாக்க வேண்டும். அந்தக் கூட்டணி செட் ஆகி அணிக்குத் தேவையான மொமண்டத்தை கொடுக்க வேண்டும். கான்வேயை அப்படியே ரீப்ளேஸ் செய்யும் வகையில் ரச்சின் ரவீந்திராவை மினி ஏலத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையில் ரச்சின் 578 ரன்களை எடுத்திருக்கிறார். கூடவே பந்தும் வீசக்கூடியவர். ஆகையால் கான்வேக்குப் பதில் என யோசிக்கையில் தோனியின் முதல் சாய்ஸாக ரச்சின் இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை ரச்சின் சரியாக பெர்பார்ம் செய்யாவில்லை அல்லது ஓவர்சீஸ் ஸ்லாட்டில் பிரச்னை என்றால் ரஹானேவை கூட ஓப்பனராக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ரஹானே கடந்த சீசனில் தனது சுபாவத்தை மீறிய அதிரடியை வெளிக்காட்டியிருந்தார். 326 ரன்களை 172 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். ஓப்பனிங்கோ நம்பர் 3-யோ எந்த இடத்தில் இறங்கினாலும் இதே துடிப்பான ஆட்டத்தை ரஹானே ஆடியே ஆக வேண்டும்.
கடந்த முறை பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது சிவம் துபேதான். பெரிய பெரிய சிக்ஸர்களாக பறக்கவிட்டு அசத்தினார். 418 ரன்களை 158 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். பெரிதாகக் கால்களை நகர்த்தாமல் நின்ற இடத்தில் இருந்தே ஸ்பின்னர்களைப் பறக்கவிடும் துபே இந்த முறையும் வெளிப்பட்டாக வேண்டும். ஜடேஜா ஃபினிஷர், மேட்ச் வின்னர்! கூடவே சேப்பாக்கத்தில் நடக்கும் 7 போட்டிகளில் அவரின் பந்துவீச்சும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். கடந்த முறை 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜடேஜா இந்த முறை தோனிக்காக இன்னும் வேகமாக வாள் வீச வேண்டும்.

பேட்டிங்கில் சென்னை அணி ஹார்ட்டுகளை அள்ளிவிடும். ஆனால், பௌலிங் கடந்த முறை கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது. பௌலிங் யூனிட்டாகவே அனுபவம் குறைவாக இருந்தது. போதாக்குறைக்கு தீபக் சஹாரும் காயம் காரணமாக சில போட்டிகளைத் தவறவிட்டார். மீண்டு வந்த போதும் அவர் பழைய ஃபார்மில் இல்லை. துஷார் தேஷ்பாண்டே 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் ஏறக்குறைய 10 ஆக அவரின் எக்கானமி இருந்தது. ரன்களை மணல் லாரிக்களை போலக் கணக்கில்லாமல் அள்ளிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
பதிரனாவும் அனுபவமற்றவர்தான் எனினும் தோனி ஒவ்வொரு பந்துக்கும் அட்வைஸ் செய்து அவரை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இப்போது அவருக்கும் எதோ காயம். வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இடையில் வெளியேறியிருக்கிறார். முதல் சில போட்டிகளை அவர் தவறவிட்டாலும் ஆச்சர்யமில்லை. தீபக் சஹார், பழைய ஃபார்முக்கு வந்தே ஆக வேண்டும். பவர்ப்ளேக்களில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை சீராக வீழ்த்திக் கொடுக்க வேண்டும்.
இடையில் சில சீசன்கள் வெளியே சென்றுவிட்டு ஷர்துல் தாக்கூர் மீண்டும் மஞ்சள் உடை தறிக்கவிருக்கிறார். ரஞ்சிப் போட்டியில் மும்பையை வெல்ல வைத்த குஷியில் இருக்கிறார். அவர் ரன்களை அதிகமாகக் கொடுக்கக்கூடியவர் எனினும் விக்கெட் எடுக்கக்கூடிய பௌலர். கூட்டணிகளை நன்றாக முறிப்பார்.

நல்ல ரிதத்தில் இருந்தார் எனில் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக மாறுவார். இவர்களுடன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரியும் இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அவரும் தனது வெரைட்டியை காட்ட வேண்டும். மஹீஷ் தீக்சனா கடந்த சீசனை விட இன்னும் அதிக உத்வேகத்தோடு வீச வேண்டும். தவறாமல் கேட்ச்களைப் பிடிக்க வேண்டும்.
ஓவர்சீஸ் ஸ்லாட்டைப் பொறுத்து மொயீன் அலி, டேரில் மிட்செல் போன்றோருக்கான இடம் லெவனில் கிடைக்கக்கூடும். இரண்டு பேருக்கும் வெவ்வேறு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கக்கூடும். வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்பவரே அணியில் நீடிக்க முடியும்.

சென்னை அணியின் முன்பு இருப்பது இமாலய சவால். தங்களின் தலைவனுக்காக அவர்கள் வெல்ல வேண்டும். கடந்த முறை ஓர் ஆகச்சிறந்த வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த முறை அதைத் தாண்டிய ஒரு வெற்றியை சென்னை அணியினர் தோனிக்குப் பரிசாக கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். என்ன நடக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
