`வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்... அஷ்வின் சொன்ன அறிவுரை! - `ஹல்லா போல் நல்லா போல் ராஜாமணி

ஐ.பி.எல் தொடர் நெருங்கி வரும் சூழலில் ராஜஸ்தான் அணியின் உடற்தகுதி நிபுணராக இருக்கக்கூடிய ராஜா மணியை நேரில் சந்தித்து ஐ.பி.எல் குறித்தும் அவரது நண்பர் அஷ்வின் குறித்தும் நிறையவே பேசினோம். அவை இங்கே.

கடந்த முறை ஹல்லா போல் நல்லா போல் என அஷ்வினோடு இணைந்து இன்ஸ்டாவில் கலக்கினீர்கள். இந்த முறை என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

Raja Mani

"அஷ்வினுடன் சேர்ந்து செய்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. வெளியே தெரியாமல் பின்னணியில் வேலை செய்யும் எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் வெளிச்சம் கிடைக்குமா என நினைத்திருக்கிறேன். ஹல்லா போல் நல்லா போல் சீரிஸூக்குப் பிறகு நான் எங்கே சென்றாலும் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். தனிப்பட்ட முறையில் தொழில்ரீதியாகவும் இதன்மூலம் நல்ல இடத்தை எட்டியிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கு அஷ்வினுக்கும்தான். இந்த முறை என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி இன்னும் பேசவில்லை. எங்களின் இயக்குநரும் அஷ்வினும்தான் முடிவு செய்ய வேண்டும்."

Ashwin

"ஐ.பி.எல் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே இருக்கின்றன. இந்தக் கட்டத்தில் அணிகளின் பயிற்சித் திட்டங்கள் எப்படியிருக்கும்?"

"சீசன் இல்லாத சமயங்களில் வீரர்களை முழுமையாக உடற்தகுதி நிபுணர்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிடுவார்கள். வீரர்கள் ஆரோக்கியமான கட்டுமஸ்தான உடல்கட்டை எட்ட நாங்கள் பயிற்சிகளைக் கொடுப்போம். சீசன் நெருங்குகையில் வீரர்களின் நேரத்தை நாங்களும் பயிற்சியாளர்களும் பாதி பாதியாக எடுத்துக் கொள்வோம். சீசன் தொடங்கியவுடன் வீரர்கள் பெரும்பாலும் பயிற்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள். பேட்டிங், பௌலிங், பீல்டிங் எனத் திறன் சார்ந்த பயிற்சிகளே அதிகம் வழங்கப்படும்."

"உங்களின் நண்பர் அஷ்வின் 100 டெஸ்ட் போட்டிகளை எட்டியிருக்கிறார். அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்."

"அஷ்வின் ஒரு காதலன். கிரிக்கெட் மீது அவருக்கு அளவுகடந்த அன்பு இருக்கிறது. கிரிக்கெட் தனக்கு எதைத் திருப்பிக் கொடுக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உயிரைக் கொடுத்து ஆடுவார். இந்திய அணிக்காக ஆடி பல சாதனைகளை செய்த பிறகும் டிவிஷன் போட்டிகளில் ஆடிக்கொண்டிருப்பார். அந்த டிவிஷன் போட்டிகளுக்காக தனியாக உடற்தகுதி பயிற்சியெல்லாம் செய்வார். கிரிக்கெட்டில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேலுக்குக் காயம் எனும் போது ரோஹித்தும் டிராவிட்டும் அஷ்வினை போனில் அழைத்தார்கள்.

Ashwin
`நீங்கள் கிரிக்கெட் ஆட உடற்தகுதியுடன் இருக்கிறீர்களா? இல்லை ஓய்வில் இருக்கிறீர்களா? என்று கேட்டனர். `நான் எப்பவுமே ரெடி என அஷ்வினும் உலகக்கோப்பைக்குக் கிளம்பிவிட்டார். எப்போதும் கிரிக்கெட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால்தான் இதெல்லாம் சாத்தியப்படுகிறது. அவர் இன்னும் சாதிப்பார்."

"இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிக்கொண்டிருந்த போது அவருடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. ஒரே ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு மீண்டும் அணிக்கு வந்துவிட்டார். இந்த மனவலிமை அவருக்கு எப்படி வாய்த்தது?"

"அன்றைய தினம் இரவில் எனக்கு ராஜஸ்தான் அணி சார்ந்த பலரும் போன் செய்திருந்தார்கள். இலங்கையிலிருந்து சங்ககரா அழைத்து அஷ்வின் குடும்பத்தில் யாருக்கோ உடல்நலம் சரியில்லையாம் என்னவென்று பாருங்கள் என்றார். மறுநாள் காலையிலேயே நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அஷ்வினின் அம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. நான் அஷ்வினைப் பார்த்த உடனேயே அழுதுவிட்டேன். அவரும் அழுதுவிட்டார்.

அஷ்வின் | Ashwin
`என்ன ராஜாமணி ராத்திரி முழுக்க அழுதிட்டு இருந்திருக்கேன். இப்போ நீங்களும் அழணுமா... ன்னு கேட்டாரு. `வாழ்க்கைன்னா இப்டித்தான் இருக்கும்ன்னு என்னை அவர் சமாதானப்படுத்தினார்.

மறுநாள் பார்த்தால் இந்திய அணியில் ஆடிக்கொண்டிருந்தார். அப்பா, அம்மாவுக்கு அஷ்வினும் கிரிக்கெட்டும்தான் உலகம். இரண்டு பேருக்குமே நன்றாக கிரிக்கெட் தெரியும் என்பதால் அஷ்வினுக்கு ரொம்பவே சப்போர்ட் செய்வார்கள். அவர்கள்தான் அஷ்வினின் பெரிய பலமே. அஷ்வின் அம்மா கண் விழித்தவுடனே கூட நீ ஏன் டெஸ்ட் ஆடாம இங்க வந்தே...ன்னு தான் கேட்ருக்காங்க. அஷ்வினுக்கும் சரி, அவங்க குடும்பத்துக்கும் சரி, கிரிக்கெட்தான் எல்லாமே! அதுதான் அவங்களுக்கு அவ்வளவு மனவலிமையை கொடுக்குது."

"யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் உங்களைப் போன்று எளிய குடும்பத்திலிருந்து வந்து வென்றவர். அவரின் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"இங்கிலாந்து தொடருக்கு முன்பாக, யாஷஸ்வி நீ எப்படியாச்சு ஒன்னு ரெண்டு சென்ச்சூரி அடிச்சிரு அப்ப உனக்குன்னு தனியா ட்ரெய்னர்லாம் கொடுப்பாங்கன்னு சொன்னேன். அதற்கு ஒண்ணு ரெண்டு இல்ல, பத்து பதினைஞ்சு அடிப்பேன்னு சொன்னான். சொன்ன மாதிரியே இங்கிலாந்து சீரிஸ்ல நல்லா ஆடிருக்கான். அவனோட திறமையெல்லாம் கடந்து அடிப்படையிலேயே அவன் ஒரு நல்ல பையன். இப்ப அவனுக்குன்னு மும்பைல ஒரு ப்ளாட் வாங்கிருக்கான். கூடவே அவங்க அண்ணனுக்கும் ஒரு ப்ளாட் வாங்கிக் கொடுத்துருக்கான். கூடவே கடைகளும் வச்சு கொடுத்துருக்கான்.

Yashasvi Jaiswal | ஜெய்ஸ்வால்
`நாளைக்குக் கல்யாணம்லாம் ஆகிட்டா எதுவும் பிரச்னை வந்துற கூடாது. நான் பட்ட கஷ்டத்த என் குடும்பம் படக்கூடாதுன்னு சொன்னான். அந்த மனசுக்காகவே அவன் இன்னும் பல வெற்றிகளை அடைவான்."

துருவ் ஜூரேலுக்கும் நீங்கள்தான் ட்ரெய்னர். அவர் எப்படியானவர்?

"துருவ் கடினமான உழைப்பாளி. உடற்தகுதிக்காக அதிக சிரத்தை எடுப்பார். இந்தியாவிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய வீரர்களில் துருவ் ஜுரேல் கட்டாயமாக முதல் இரண்டு இடங்களுக்குள் வருவார். 34.5 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்வார். இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பாக ஒரே நாளில் 140 ஓவர்களுக்கு வலையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அதை முடித்துவிட்டு விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். அந்த கடின உழைப்புதான் அவரின் வெற்றிக்குக் காரணம்."

கடந்த ஒரு வருடம் உங்களுக்கு எப்படி இருந்தது? புதிதாக டெக்னிக் எதையும் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

"கரீபியன் ப்ரீமியர் லீகில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. உளவியல் ரீதியாக அவர்களை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. தென்னாப்பிரிக்க டி20 லீகில் என்னுடைய குழு வேலை செய்தது. தனிப்பட்ட முறையில் டூப்ளெஸ்ஸியின் பிடித்தமான ட்ரெய்னராக மாறியிருக்கிறேன். இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அமெரிக்கா சென்று பேஸ்பால் வீரர்கள் பந்தை செங்குத்தாக ஓங்கி வலுவாக அடிக்கப் பயன்படுத்தும் சில டெக்னிக்குகளை கற்று வந்திருக்கிறேன். அதை ராஜஸ்தான் வீரர்களுக்குக் கற்றுக்கொடுத்து இன்னும் அதிக சிக்ஸர்களை அடிக்க வைக்கப் போகிறேன்."

ராஜாமணியின் முழுமையான பேட்டியை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.