Ashwin: ``தோனியும் செய்திருப்பார் ஆனால், ரோஹித் ஒரு படி மேல சென்றுவிட்டார் - அஷ்வின்

கடந்த பிப்ரவரி 16ம் தேதி ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அடைந்தார் அஷ்வின்.

ஆனால், இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் அந்த ஆட்டதின் அன்றே அஷ்வின், தன் அம்மாவின் உடல் நிலை சரியில்லாத செய்தி கேட்டு சென்னை திரும்பியது கண்கலங்க வைக்கும் தருணங்களாக அமைந்துவிட்டது. இது குறித்து அஸ்வினின் மனைவி பிரீத்தி நாராயணன், மிகுந்த வருத்தத்துடன் "எல்லோரும் நினைப்பதைப் போல மகிழ்ச்சியால் மட்டுமே நிறைந்ததல்ல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை" என்று கூறியிருந்தார்.

ரோஹித், அஷ்வின்

அதுமட்டுமின்றி, அந்த இக்கட்டான நேரத்தில் அஷ்வின் சென்னை திரும்புவதற்கு புஜாரா, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் உறுதுணையாக இருந்து உதவினார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

தற்போது, இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள அஷ்வின், "அம்மாவின் நிலை குறித்து என்னிடம் சொன்னவுடனே, அம்மா சுய நினைவுடன் இருக்கிறாரா, அவருடன் பேச முடியுமா, பார்க்க? என்று டாக்டரிடம் கேட்டேன். அதற்கு அவர், அம்மா இப்போது யாரையும் பார்க்கும் நிலையில் என்று கூறியதும் உடைந்து அழுதுவிட்டேன். சரி, உடனே சென்னைக்குத் திரும்பலாம் என்று விமானத்தை தேடியபோது அந்த நேரத்தில் எதுவும் கிடைக்கவில்லை. ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் விமானங்கள் எதுவுமில்லை.

அஷ்வின், தோனி

என்ன செய்வதென்று தெரியாமல் அறையில் தனியாக உட்கார்ந்திருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில் ரோஹித் ஷர்மா, டிராவிட் இருவரும் வந்து, இந்த நேரத்தில் நீ அங்கு இருக்க வேண்டும் என்று கூறி விமானத்தை ஏற்பாடு செய்து என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி, எனக்குத் துணையாக அணியின் பிசியோ பயிற்சியாளர் கம்லேஷையும் அனுப்பி வைத்தார். நான் கேப்டனாக இருந்தாலும் இப்படியான ஒரு உதவியைச் செய்திருப்பேனா என்று தெரியவில்லை. அன்று அணியின் கேப்டனைத் தாண்டி, நல்ல தலைமைப் பண்பு மிக்கவராக ரோஹித் உணர்ந்தேன். அந்த நேரத்தில் தோனியும் இதைத்தான் செய்திருப்பார். ஆனால், ரோஹித் அதைவிடவும் 10 அடி மேல சென்று செய்திருக்கிறார்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.