Ashwin 100: `புறக்கணிப்பாங்க... ஆனாலும் போராடு! - நூறு டெஸ்ட் போட்டிகளைத் தொட்ட அஷ்வினின் கதை

சிட்னியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி அது. தொடரை இழக்காமல் இருக்கக் கடைசி நாளில் இந்தியா போராடி டிரா செய்ய வேண்டிய நிலை. அணியில் அஷ்வினும் இருக்கிறார். ஆனால், அவருக்கோ கடுமையான முதுகுவலி. அந்த ஐந்தாம் நாளின் காலையில் அவரால் படுக்கையிலிருந்தே எழுந்தி நிற்க முடியவில்லை. மனைவியின் உதவியோடு எழுந்து நிற்கிறார். ஆனாலும் அந்த நாளை அவர் தவிர்க்க விரும்பவில்லை. இந்தியாவிற்கு மிக முக்கியமான நாள். நகரமுடியாமல் விடாப்பிடியாகப் போராடி மைதானத்திற்கு வந்து சேர்ந்தார். இந்திய அணி தடுமாறுகிறது. முக்கிய பேட்டர்கள் வீழ்கிறார்கள். அஷ்வின் களமிறங்க வேண்டிய சூழல். அணி நிர்வாகம் அஷ்வினின் உடல்நிலையை மனதில் வைத்து கொஞ்சம் யோசிக்கிறது. அஷ்வினுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

Ashwin
முதுகுவலி பிய்த்து எடுக்கிறது. நகரமுடியவில்லை. ஆனாலும் பேட்டோடு உள்ளே வந்தார். அடுத்த 3 மணி நேரம் நடந்தது ஒரு வலிமிகு போராட்டம். விஹாரியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் வேகப்புயல்களையும் நேதன் லயனையும் லாகவமாகச் சமாளித்து போட்டியை டிராவை நோக்கி அழைத்துச் சென்றார்.

அந்தப் போட்டியை டிரா செய்ததால் மட்டுமே இந்தியா அந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற முடிந்தது. 100 டெஸ்ச் போட்டிகள் எனும் மாபெரும் மைல்கல்லை எட்டும் அஷ்வினின் கிரிக்கெட் மீதான காதலுக்கு ஒரு சிட்டிகை சாம்பிள்தான் இது.

டெஸ்ட் கிரிக்கெட் மனவலிமை உடல் வலிமை இரண்டையும் அதிகமாகச் சோதனைக்கு உட்படுத்தும். அதனால்தான் ஆயிரக்கணக்கான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போதும் இதுவரை 76 வீரர்கள் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். இந்த 76 வீரர்களில் 13 வீரர்கள்தான் இந்தியர்கள்.

#INDvENG
உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர்களில் கிட்டத்தட்ட 15% வீரர்கள் மட்டுமே இந்தியர்கள். இதுவரை ஒரு தமிழக வீரர் கூட இந்த மைல்கல்லை எட்டியதில்லை என்பதும் கூடுதல் சுவாரஸ்யம்.

இந்திய அணிக்காக ஆடியிருக்கும் 13 பேரிலுமே கூட அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா என மூன்று பேர்தான் முழுமையான பௌலர்கள். கபில்தேவ்வையும் இதில் இணைத்துக் கொண்டால் மொத்தம் நான்கு பேர் என எடுத்துக் கொள்ளலாம். 100 டெஸ்ட் போட்டிகள் எனும் சாதனை மைல்கல்லின் முக்கியத்துவத்தை இந்த எண்களின் மூலமே புரிந்துகொள்ள முடியும்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிவிட்டார். மூன்று உலகக்கோப்பைகளில் ஆடிவிட்டார். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டார். 100 டெஸ்ட் போட்டிகளை எட்டிவிட்டார். தோனி, கோலி, ரோஹித் என மூன்று கேப்டன்களின் கீழ் ஆடிவிட்டார். இந்திய அணியில் தற்போது இருக்கும் மூன்று, நான்கு சூப்பர் சீனியர்களுள் ஒருவர். ஆனால், இது எதுவுமே இந்திய அணியில் அவருக்கு நிலையான இடத்தை வாங்கிக் கொடுத்ததே இல்லை என்பதுதான் அஷ்வின் கரியரின் மகத்துவமும் சாபமும்.

Ashwin

அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இவர்களின் காலகட்டத்திற்கு இந்திய ஸ்பின் பாரம்பரியத்தின் கண்ணி அறுபடாமல் பார்த்துக் கொண்டவர் அஷ்வின். முன்னவர்களைப் போலவே ஒரு தசாப்தத்தை தன் பெயரில் எழுதிக் கொண்டவர். ஆனாலும், ஒவ்வொரு கட்டத்திலுமே பெரும் போராட்டங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. 2011 - 2015 வரை தோனி முழுமையாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த சமயத்தில் அஷ்வினின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. எந்தச் சூழலிலும் தோனியின் முழு நம்பிக்கையையும் பெற்ற வீரர்களாக சுரேஷ் ரெய்னாவும் அஷ்வினும் இருந்தனர். 2015க்குப் பிறகு தோனி மெது மெதுவாக கேப்டன் பதவிகளிலிருந்து விடைபெறுகிறார். முதலில் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டன் ஆகிறார். அவர் தனக்கான அணியைக் கட்டமைக்க முயல்கிறார். அதில் முதல் சாய்ஸாக அஷ்வின் இல்லை. பிரதான வீரர் எனும் இடத்திலிருந்து தேவைப்பட்டால் அழைத்துக் கொள்ளலாம் எனும் இடத்திற்கு அவர் தள்ளப்படுகிறார்.

ஒயிட் பால் கிரிக்கெட்டில் முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். பிசிசிஐ அவரை முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டராக மட்டுமே பார்த்தது. அதிலும் ஒரு க் வைக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவில் ஆடப்படும் போட்டிகளில் மட்டுமே அஷ்வின் பிரதான சாய்ஸாக இருந்தார். குல்தீப் யாதவ்விற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் அவர்தான் முதல் சாய்ஸாக பார்க்கப்பட்டார்.

"ஓவர்சீஸ் போட்டிகளில் அணியில் ஒரே ஒரு ஸ்பின்னருடன் ஆடுகிறோம் எனில் அந்த ஒரு இடம் குல்தீப்புக்கு மட்டுமே!" என அப்போதே பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்.
அஷ்வின் | Ashwin

ஆனால், அதே ரவி சாஸ்திரி 2021-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியின் போது, "அஷ்வின் போன்ற வீரர்களை பிட்ச்சை மனதில் வைத்தெல்லாம் தேர்வு செய்ய முடியாது. அவர்கள் உலகின் எல்லா பிட்ச்களிலும் ஆடத் தகுதியானவர்கள்" என Taking Pitch Out of Equation தியரியை கூறினார். இந்தியா தோற்றபோதும் அந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அஷ்வின் மிகச்சிறப்பாக வீசியிருப்பார். அந்த இறுதிப்போட்டி முடிந்து ஒன்றரை மாத இடைவெளியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி களமிறங்கியது. இந்த ஒன்றரை மாத இடைவெளியில் மற்ற வீரர்கள் கிரிக்கெட் ஆடவில்லை.

அஷ்வின் | Ashwin

ஆனால், அஷ்வின் கிட் பேக்கைத் தூக்கிக் கொண்டு கவுண்டி போட்டிகளுக்கு ஆடச் சென்றார். இந்த ஒன்றரை மாத இடைவெளியை வரவிருக்கும் இங்கிலாந்து தொடருக்கான பயிற்சி காலமாக பார்த்தார். சர்ரே அணிக்காக தனது மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசி ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முழு உத்வேகத்தோடும் தீர்க்கத்தோடும் இங்கிலாந்து தொடருக்கு வந்து சேர்ந்தார் அஷ்வின்.

Ashwin

ஆனால், நடந்தது என்ன தெரியுமா? அந்தத் தொடரின் ஒரு போட்டியில் கூட அஷ்வின் இல்லை. எல்லா போட்டிகளிலும் பெவிலியனில் ஒரு ஓரமாக அஷ்வின் அமர்ந்திருந்தார். அங்கு மட்டும்தான் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியிலுமே ப்ளேயிங் லெவனில் அஷ்வினுக்கு இடம்கொடுக்கப்படவில்லை. இன்னமும் பதின்ம வயதின் ஆர்வத்தோடு பந்தைச் சுழற்றிக் கொண்டு எப்போதும் தயாராக நிற்கும் இந்தியாவின் சீனியர் பௌலரின் நிலை இதுதான். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் போராட வேண்டியிருந்தது. தனக்கான இடத்தையும் முக்கியத்துவத்தையும் அணியில் பெற்றுக்கொள்ள கடுமையான சோதனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அஷ்வின் இடத்தில் கொஞ்சம் மனவலிமை குன்றிய சலிப்புத்தட்டும் வீரர் வேறு யாராவது இருந்திருந்தால் எப்போதோ ஓய்வை அறிவித்துவிட்டு கமென்ட்ரி பக்கமாகச் சென்றிருப்பார்.

அஷ்வின் நெஞ்சுரம் மிக்கவர். போராடும் வலிமைமிக்கவர். அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒயிட் பால் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆடிவிட்டார். டி20 உலகக்கோப்பைக்கும் கம்பேக் கொடுத்துவிட்டார். டெஸ்ட்டிலும் அவரை இன்னும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லைக் கடந்து சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருக்கிறார்.

Ashwin

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனினும் ஒரே நாள் விடுப்பில் சென்றுவிட்டு அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத மாதிரி மீண்டும் ஓடி வந்துவிடுகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் ஏலத்தில் அமர்கிறார். இந்திய அணிக்காக ஆடிவிட்டு மறுநாளே சென்னையின் எதோ ஒரு கல்லூரி மைதானத்தில் டிவிஷன் போட்டிகளில் ஆடுகிறார். கிரிக்கெட்டின் மீதான அவரின் ஆத்மார்த்த காதல்தான் அவரை பல தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி ஓட வைக்கிறது.

நூறோடு நிற்காமல் வெள்ளை உடை தரித்த கிரிக்கெட் காதலனாக இன்னும் இந்த மைல்கல்லை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். வாழ்த்துகள் அஷ்வின்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.