Virat Kohli: `தந்தையான கோலியும்... தனிமனித சுதந்திரமும்; சில கேள்விகளும்! - ஓர் அலசல்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதை இன்ஸ்டா பக்கத்தில் நேற்று அறிவித்திருந்தார். இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், கோலியின் இந்த அறிவுப்புக்குப் பின்னால் இருக்கும் சமூக அழுத்தங்களைப் பற்றியும் இங்கே பேசியே ஆக வேண்டும்.
விராட் கோலி தம்பதி

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு முதல் குழந்தை கடந்த 2021 ஆம் ஆண்டில் பிறந்தது. அந்த நேரத்தில், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடிக்கொண்டிருந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அது. அந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே என் மனைவிக்கான பிரசவகாலம் நெருங்கி வருவதால் முதல் டெஸ்ட் போட்டியோடு விலகி இந்தியாவிற்கு திரும்பிவிடுவேன். என விராட் கோலி சொல்லியிருந்தார். இதற்காக விராட் கோலி கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்திய அணிக்காக ஆடும் வீரர் ஒருவர் தன் தனிப்பட்ட காரணங்களுக்கு அணியிலிருந்து விலகுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. `குடும்பம்தான் முக்கியமெனில் அணியிலிருந்தே மொத்தமாக விலகிவிடுங்கள்! என இணையத்தில் கடும் தாக்குதலை அவர் மீது நிகழ்த்தியிருந்தனர். சில முன்னாள் வீரர்களுமே கூட தங்களின் எல்லையை மீறி விராட் கோலியை விமர்சித்திருந்தனர். ஆனாலும் விராட் கோலி பின்வாங்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்துடனான ஒரு யூடியூப் உரையாடலில்,

விராட் கோலி - அனுஷ்கா
நான் தெளிவாக சிந்துத்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இந்திய அணிக்காக முழு ஈடுபாட்டுடன் ஆடுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானதுதான் இந்த விடுப்பும். என் வாழ்வின் இந்த சிறப்பான தருணத்தில் என்ன நடந்தாலும் என் அன்பானவர்களுடன் இருப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

என விராட் கோலி தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்திருந்தார். ஆனாலும் விமர்சனங்களும் வசவுகளும் ஓயவில்லை. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்து மோசமாகத் தோற்றது. கோலி திட்டமிட்டபடியே இந்தியா திரும்பினார். விமர்சனங்கள் இன்னும் வேகமெடுத்தன. 2015 உலகக்கோப்பையில் இதே ஆஸ்திரேலியாவில் இந்தியா ஆடிக்கொண்டிருந்த போதுதான் தோனிக்கு குழந்தை பிறந்தது. தேசத்திற்கு கடமையாற்றுவதுதான் எனக்கு முக்கியம் என கூறி தோனி தன்னுடைய குழந்தையை பார்க்க வராமல் அணியுடனே இருந்திருந்தார். இதைக் குறிப்பிட்டு கோலியை வசைபாடினர்.

Virat Kohli

கோலி இந்த விஷயங்களையெல்லாம் அப்போது பெரிதாக எடுத்துக் கொண்டதாக வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அவர் தன்னுடைய இரண்டாவது குழந்தையை பற்றிக் கொடுத்திருக்கும் அறிவிப்பில் அதன் பாதிப்புகளை நம்மால் உணர முடிகிறது. முதல் குழந்தை பிறப்பின் போது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அவரையும் அவரின் குடும்பத்தையும் உளவியல்ரீதியாக பெரும் மாற்றத்திற்கு உட்படுத்தியிருக்கிறது.

வாமிகா பிறப்பதற்கு முன்பே அதைப்பற்றி விராட் கோலி வெளிப்படையாக அறிவித்துவிட்டார். முன்னாதகவே விடுப்பும் கேட்டுவிட்டார். ஆனால், இரண்டாவது குழந்தைக்கு அப்படியில்லை. தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது என்பதை அவர் எங்குமே குறிப்பிடவில்லை. `தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகுகிறார்! என பிசிசிஐ அறிவித்தது. இடையில் கோலியின் நெருங்கிய நண்பரான டீவில்லியர்ஸ் கோலி தனது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறார். என விஷயத்தை போட்டுடைத்திருந்தார். சில நாட்கள் கழித்து அவரே வந்து நான் கூறிய தகவலில் உண்மையில்லை என அறிவித்தார். ஆனால், நேற்று விராட் கோலியே தனக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

முதல் குழந்தைக்கு செய்ததை போலவே இரண்டாவது குழந்தைக்கும் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் செய்திருக்கலாம். ஆனால், அப்படி செய்தால் அவர் மேல் விழும் விமர்சனங்கள் கொடியதாக இருந்திருக்கும்.

விராட் கோலி
ஒரு தனிப்பட்ட மனிதன், அவன் குடும்பம், அவனது விருப்பு வெறுப்புகள் சார்ந்த தனிமனித சுதந்திரம் என எதையும் அந்த விமர்சனங்கள் கருத்தில் கொள்ளாது. எல்லாவற்றையும் தூக்கிஎறிந்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி, நரம்பு புடைக்க சேத்தின் மீதான அபிமானத்தைக் காட்டு என்று சொல்ல வேண்டும் என அந்த விமர்சனங்கள் நிர்பந்திக்கும். தேவையற்ற மன உளைச்சல்களை மட்டுமேதான் அந்த விமர்சனங்கள் கொடுக்கும்.

முதல் குழந்தை பிறந்த போதே விராட் கோலி இதையெல்லாம் அனுபவித்துவிட்டார். தனக்கும் தன் குடும்பத்துக்கும் நடக்கும் ஒரு அதி மகிழ்ச்சியான தருணத்தின்போது அவர் ஏன் அத்தனை வெறுப்புகளை எதிர்கொள்ள வேண்டும்? அதற்காகத்தான் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பை அத்தனை ரகசியமாக அவர் வைத்துக்கொண்டார்.

குழந்தை பிறப்பை அறிவிப்பதும் அறிவிக்காமல் இருப்பதும், விடுப்பு எடுப்பதும் எடுக்காமல் இருப்பதும் தனிப்பட்ட விவகாரம். ஆனால், இது எதன் அடிப்படையில் நிகழ்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விராட் கோலி துணிச்சல்மிக்க வீரர். களத்தில் சீண்டிப் பார்க்கும் வீரர்களுக்கு நேருக்கு நேர் பதில் கொடுப்பவர். தான் சரியென நம்பும் ஒரு விஷயத்திற்கு எதிராக ஒரு கூட்டமே நின்றாலும் அதிலிருந்து பின்வாங்கவே மாட்டார். அணியின் நலனுக்காக தன் பேட்டிங்காலும் சரி, சக வீரர்களை உற்சாகப்படுத்துவதிலும் சரி, அசராமல் களத்தில் நிற்கக் கூடியவர். ஆனால், இந்தக் குழந்தை பிறப்பு விஷயத்தில் சமூக வலைதளங்கள் அவரை பின்வாங்க வைத்துவிட்டன. தான் பேச நினைப்பதை தான் செய்ய நினைப்பதை விராட் கோலி போன்ற ஒரு நபராலயே சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை.

Virat Kohli - Anushka Sharma

எனில், சமூக வலைதளங்களில் தாக்குதல்களையும் வன்முறைகளையும் எதிர்கொள்ளும் சாமானியர்களோ விராட் கோலியளவுக்கு பலமில்லாதவர்களோ எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

பிரபலமாக இருப்பதனாலேயே தனி மனித சுதந்திரத்தை இழக்க நிர்பந்திக்கப்படுவது சரியல்ல. தனியொரு மனிதனின் சுதந்திரம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க வேண்டியது அந்த தனிமனிதன் மட்டுமே தான். சமூக வலைதளங்களோ புறக்காரணிகளோ அல்ல.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.