Dhoni in CSK: `அந்தச் சம்பவம் நடந்து 16 வருசம் ஆச்சு! - கொண்டாடும் தோனி ரசிகர்கள்
ஐ.பி.எல் போட்டிகளில் ஈடு இணையற்ற வீரராக ஜொலித்து வருகிறார் தோனி. 5 முறை சென்னை அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார். 42 வயதைக் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பு குறையாமல் முரட்டுத்தனமான மாஸோடு வரவிருக்கிற சீசனிலும் சென்னை அணியை வழிநடத்தவிருக்கிறார். சென்னை அணியை பொறுத்தவரைக்கும் தோனி ஒரு சகாப்தம். தோனி இல்லையேல் அந்த அணியே இல்லை.
இப்படியொரு நெருக்கமான பந்தம் சென்னைக்கும் தோனிக்கும் உருவாகத் தொடங்கியதன் 16வது வருடம் இது. ஆம், 16 ஆண்டுகளுக்கு முன்பு இதே பிப்ரவரி 20-ம் தேதிதான் சென்னை அணி தோனியை ஏலத்தில் எடுத்திருந்தது.
ஐ.பி.எல் என்ற ஒன்றைத் தொடங்கலாம் என பிசிசிஐ முடிவு செய்த பிறகு, ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் பிராசஸ் தொடங்கியது. அப்போதைய கணக்குப்படி 8 அணிகளும் தங்களுக்கென ஒரு பிரதான வீரரை ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம் என்பதே விதி. இப்படி எடுக்கப்படும் வீரருக்கு ஏலத்தில் அந்த அணி அதிக விலை கொடுத்து எடுக்கும் வீரரை விட 15% தொகையை அதிகமாக வைத்து ஊதியம் கொடுக்க வேண்டும். மொத்தமாக ஒரு அணி 5 மில்லியன் டாலர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பிற்கு இது ஏறக்குறைய 20 கோடி ரூபாய் வரும். சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளைத் தவிர மற்ற 6 அணிகளும் தங்களுக்கான பிரதான வீரர்களை ஏலத்திற்கு முன்பே தேர்ந்தெடுத்துவிட்டார்கள். தங்கள் மண்ணைச் சேர்ந்த வீரர்களை பிரதான வீரராக மாற்றவே அணிகள் விரும்பின. மும்பை அணி சச்சினையும் பெங்களூர் அணி டிராவிட்டையும் தங்களுக்கான வீரராக எடுத்துக்கொண்டதை உதாரணமாகச் சொல்லலாம். தோனி சார்ந்திருக்கும் ஜார்க்கண்ட், பீகார் போன்ற பகுதிகளிலிருந்து எந்த அணியும் ஐ.பி.எல்-இல் இல்லை என்பதால் எந்த அணியும் அவரை ஏலத்திற்கு முன்பாக எடுக்கவில்லை. இந்நிலையில்தான், இதே நாளில் 16 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஏலம் தொடங்கியது. இந்த ஏலம் நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது.

தோனி இந்திய அணியின் வருங்கால நம்பிக்கையாகப் பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது. ஏலத்திற்கு முன்பாக எந்த அணியும் தோனியை சீண்டவில்லை என்றாலும் ஏலத்தில் அதிக டிமாண்ட் உடைய வீரராக தோனியே இருந்தார். ஏலதாரர் ரிச்சர்ட் மேட்லி, தோனியின் பெயரை உச்சரித்த உடனே அத்தனை அணிகளும் களத்தில் குதித்துவிட்டன. இருந்த 8 அணிகளும் தோனிக்குப் போட்டி போட்டு கையை உயர்த்திக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் இந்த ரேஸில் மும்பையும் சென்னையும் மட்டுமே இருந்தனர். உச்சபட்சமாக சென்னை அணி தோனிக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டது. இதுவரை மல்லுக்கட்டி நின்ற மும்பை அணி இந்த இடத்தில்தான் பின்வாங்கியது. ஏனெனில், ஏலத்திற்கு முன்பே மும்பை அணி சச்சினை அணியில் வைத்திருந்தது.
தோனியை 6 கோடிக்கு மேல் சென்று எடுத்தால் தோனிக்கு செலவளிக்கும் தொகையிலிருந்து 15% அதிகம் வைத்து சச்சினுக்குக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் வெறும் 2 வீரர்களுக்கு மட்டுமே மும்பை அணி தங்கள் கையிலிருக்கும் 75% தொகையை செலவளிக்க வேண்டியதாக இருந்திருக்கும். இதனாலயே மும்பை அணி பின் வாங்கியது.

எல்லா அணியிலுமே ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் பிரதானமாக இருந்ததால் சென்னை அணி தங்களுக்கும் அப்படி ஒரு வீரர் வேண்டுமென்று எண்ணியது. அதனால்தான் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என முடிவெடுத்து தோனிக்காக முட்டி மோதி அவரை ஏலத்தில் எடுத்திருந்தது.
சென்னை அணி அந்த ஏலத்தில் எடுத்தது ஒரு வரலாற்று முடிவு. அன்றிலிருந்து இன்று வரை ஐ.பி.எல்-இல் சென்னை அணி வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு தோனியே மிக முக்கிய காரணம். மற்ற எல்லா அணிகளும் தோனியை அன்று ஏலத்தில் எடுக்காமல் விட்டதற்காக இன்றளவும் மனம் வருந்திக் கொண்டிருக்கின்றனர். 2008-இல் தோனியோடு மற்ற அணிகளுக்கு கேப்டனாக இருந்த எந்த வீரருமே இப்போது கேப்டனாக இல்லை. அப்போது ஆடிய பெரும்பாலான வீரர்கள் ஓய்வையும் எட்டிவிட்டனர். தோனியின் தலைமையின் கீழ் வளர்ந்த கோலியும் ரோஹித்துமே கேப்டன்களாக தங்களின் பயணத்தை முடித்துக் கொண்டனர். ஆனால், சென்னை அணிக்கு தோனிதான் இன்னமும் கேப்டன். அவர் பெயருக்காகத்தான் இன்று இந்தியா முழுவதும் மைதானங்கள் நிரம்புகின்றன. குறிப்பிட்ட ஒரே அணியோடு ஒரு வீரர் 16 ஆண்டுகள் பயணிப்பது எளிதான காரியமல்ல.
அணி நிர்வாகம், வீரர் என இருதரப்புக்கும் இடையே பரஸ்பர புரிதலும் மரியாதையும் எந்தக் காலத்திலும் குறையாமல் இருந்ததுதான் இந்த நீண்ட நெடிய பயணத்திற்குக் காரணம். இந்திய அணியில் தோனியின் உச்சமெல்லாம் முடிந்து அவர் ஓய்வை எட்டிய பிறகும் சென்னை அணி அவரைக் கைவிடவில்லை. படுமோசமாகத் தோற்றபோதும் தோனிக்குத் துணையாய் நின்றனர். அதேமாதிரி, தோனியும் அணி நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருந்தார். தோனிதான் இப்போதும் சென்னையின் முகம். அவரை வைத்துதான் வர்த்தகமே நடக்கிறது. ஆனாலும் சென்னை அணியில் தோனியை விட ஜடேஜாவுக்குதான் சம்பளம் அதிகம். அணியின் நலனுக்காக தோனியே முன்வந்து எடுத்த முடிவு இது. தோனி சென்னையை தன்னுடைய சொந்த அணியாகவே பாவிக்கிறார். இப்படிப்பட்ட விஷயங்கள்தான் இருதரப்புக்கும் இடையே கெட்டியான பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரவிருக்கும் சீசனோடு விடைபெறுவேன் என தோனி சொல்கிறார்.

ஆனால், அது நடக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், ஐ.பி.எல்-இன் வணிக மதிப்பையே தோனி பெருமளவில் தன் முதுகில் சுமந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடட்டும் என்றே அத்தனை தரப்பும் விரும்பும். சிஎஸ்கே-வுடனான தோனியின் பயணம் இன்னும் நீள்வதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

