`மைதானத்தில் இரண்டாவது மரணம்! திடீரென தாக்கிய மின்னல்; உயிரிழந்த கால்பந்து வீரர்; என்ன நடந்தது?
இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் செப்டெய்ன் ரஹர்ஜா (35) உயிரிழந்த பரிதாபம்.
இந்தோனேஷியாவில் க்ளப் அணிகளுக்கிடையே நடந்த நட்பு ரீதியிலான போட்டி ஒன்றில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பாந்தங் என்கிற அணிக்கும் சுபாங் என்கிற அணிக்கும் இடையிலேயே இந்த போட்டி நடந்திருக்கிறது. 12 ஆம் தேதியான நேற்று இந்தப் போட்டி நடந்திருக்கிறது. போட்டி தொடங்கிய சமயத்தில் வானம் தெளிவாக நல்ல வானிலையுடனேயே காணப்பட்டிருக்கிறது. ஆனால், போட்டி செல்ல செல்ல மழை மேகங்கள் தோன்றி இடி மின்னல் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. இந்த சமயத்தில்தான் சுபாங் அணியின் 35 வயது வீரரான செப்டெய்ன் ரஹர்ஜா என்பவர் துடிப்பாக ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்.
Tragjedi në futboll, rrufeja i merr jetën lojtarit në fushën e lojës. #newsport #indonesia #thunder #football #tragedy #SeptainRaharja pic.twitter.com/YijLAkv7yO
— Newsport Albania (@NewsportAlbania) February 12, 2024
அப்போது திடீரென ஒரு மின்னல் அவரின் மீது தாக்க மைதானத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறார். அவரது உடல் கருகியிருந்த போதும் அவர் உயிரிழக்கவில்லை. சுவாசம் இருந்திருக்கவே செய்கிறது. அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை. செப்டெய்னுடன் ஆடிய சக வீரர்கள் மற்றும் எதிரணி வீரர்கள் என அத்தனை பேரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தோனேஷியாவில் ஆடிக்கொண்டிருக்கும் போதே மின்னல் தாக்கி உயிரிழக்கும் இரண்டாவது வீரர் இவர். சில மாதங்களுக்கு முன்பு 13 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடர் ஒன்றில் ஆடும்போது இளம் வீரர் ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.
அசாதாரணமான வானிலை நிகழ்வுகளின் போது வீரர்களின் பாதுகாப்புக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

