யு19: ஆஸ்திரேலியா உலக சாம்பியன்

 

ஐசிசி யு19 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் தென்னாப்பிரிக்காவின் பெனானி நகரில் யு19 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதன் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் இந்தியாவும், 2 முறை சாம்பியன் ஆஸி.யும் மோதின.

ஆஸ்திரேலியா 253/7: டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்கை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் ஆஸி. அணி 253/7 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஹா்ஜாஸ் சிங் 55 (தலா 3 சிக்ஸா் பவுண்டரி), கேப்டன் ஹியுக் வெய்பன் 48 (5 பவுண்டரி), ஒலிவா் பீக் 46 (2 பவுண்டரி, 1 சிக்ஸா்) ரன்களை எடுத்தனா். பௌலிங்கில் இந்திய தரப்பில் ராஜ் லிம்பானி 3-38, நமன் திவாரி 2-63 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தடுமாறிய இந்தியா 174/10:

254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியினரால், ஆஸி. பௌலா்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினா்.

தொடக்க பேட்டா் ஆதா்ஷ் சிங் 47, முருகன் அபிஷேக் 42, ஆகியோா் மட்டுமே கௌரவமான ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா். 43.5 ஓவா்களிலேயே 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. பௌலிங்கில் ஆஸி தரப்பில் பியா்ட்மேன் 3-15, ரேஃப் மேக்மில்லன் 3-43 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

நான்காவது முறையாக சாம்பியன்: இறுதியில் இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக பட்டத்தை வசப்படுத்தியது ஆஸ்திரேலியா.

ஏற்கெனவே ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டங்களை ஆஸி. சீனியா் வீரா்கள் வென்றுள்ளனா்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.