Dhoni: நம்பர் 7 எனக்குப் பிடித்த எண்; காரணம் இதுதான் -தோனியின் கலகல பதில்

சச்சினின் ஜெர்சி எண் 10 என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்று. அதையடுத்து அதிகம் பேசப்பட்ட ஜெர்சி எண் எதுவெனில் அது தோனியின் ஜெர்சி எண் 7 தான்.

கிரிக்கெட்டில் ‘7’ என்றாலே அது தோனிக்கான எண் என்றாகிவிட்டது. அது தோனிக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகவும் உணர்வுப்பூர்வமான எண்ணாகிவிட்டது.  தோனியை கெளரவிக்கும் வகையில் பி.சி.சி.ஐ-யும் இந்த எண்ணை கிரிக்கெட்டில் யாரும் பயன்படுத்தாத வண்ணம் சச்சினின் 10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வளித்ததைப் போல தோனியின் 7 நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வளித்து சிறப்பித்தது.

தோனி |Dhoni

இது தோனிக்கு ராசியான எண், அதனால் இதை தன்னுடைய ஃபேவரட் எண்ணாக வைத்துள்ளார் என்று பலரும் நீண்டகாலமாகவே கூறிவருகின்றனர். ஏனெனில், நடிகர்கள், பிரபல நட்சத்திரங்கள் பலரும் அதிர்ஷ்டம், ராசி, ஜாதகம் போன்ற காரணங்களால் தங்களுக்கென பெயரையும், அதிர்ஷ்ட எண்ணையும் வைத்துக்கொள்வர். அப்படித்தான் தோனியும் வைத்துள்ளதாகப் பலரும் கூறினர். 

‘Sarvatra Technologies‘ நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கும் தோனி, சமீபத்தில் அந்நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவரிடன் ‘நம்பர் 7’-யை ஜெர்சி எண்ணாகவும், விருப்ப எண்ணாகவும் தேர்ந்தெடுத்தற்கானக் காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த தோனி, “அந்த தேதியில்தான் என்னை என் பெற்றோர் இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தனர். 7ம் தேதி, 7 வது மாதத்தில் பிறந்தேன். நான் பிறந்த ஆண்டு 1981, இதன் கடைசி இரண்டு எண்களை எடுத்துக் கழித்தாலும் 7 வரும் (8-1=7). இப்படி எழு என்பது நான் பிறந்த நாள் தேதியில் எங்கும் இடம்பெற்றிருக்கிறது. அதனால், என்னுடைய ஃபேவரட் எண்ணாகிவிட்டது ‘7’.” என்றார்.

MS Dhoni talking about the importance of "7" in his life.

- A witty reply from Thala. pic.twitter.com/vnFVrD2YGk

— Johns. (@CricCrazyJohns) February 11, 2024

இதற்கும் முன்பு கடந்த ஆண்டு இதேபோன்ற நேர்காணல் ஒன்றில் ‘நம்பர் 7 உங்களின்  அதிர்ஷ்ட்ட எண்ணா?’ என்று தோனியிடன் கேட்டனர். அதற்கு அவர், “ஆரம்பத்தில் எல்லோரும் 7 என்பது என் அதிர்ஷ்ட எண் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், எனக்கு அதிர்ஷ்டம் போன்ற நம்பிக்கையெல்லாம் கிடையாது. நான் அந்த எண்ணைத் தேர்தெடுத்தற்கான காரணம் சாதாரணம்தான். நான் ஜூலை மாதம் 7-ம் தேதியில் பிறந்தேன், எனவே அந்த நாள் ஏழாவது மாதம் ஏழாம் தேதியில் வருகிறது. இந்த காரணத்திற்காகவே நான் என் ஜெர்சி எண்ணை 7 என வைத்துக்கொண்டேன்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.