ஆசிய துப்பாக்கி சுடுதல்: நான்சிக்கு தங்கம், இளவேனிலுக்கு வெள்ளி

 

ஜகார்த்தா: ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் நான்சி, இளவேனில் வாலறிவன் முறையே தங்கம், வெள்ளி பதக்கங்கள் புதன்கிழமை வென்றனர். 

10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் தனிநபர் இறுதிச்சுற்றில், நான்சி 252.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, இளவேனில் 252.7 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றார். சீனாவின் ஷென் யுஃபான் 3}ஆம் இடம் பிடிக்க, இந்தியாவின் மெஹுலி கோஷ் 210 புள்ளிகள் பெற்று நூலிழையில் வெண்கலப் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். 
என்றாலும், இதிலேயே மகளிர் அணிகள் பிரிவில் நான்சி, இளவேனில், மெஹுலி கூட்டணி தங்கம் வென்று அசத்தியது. 
10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் தனிநபர் பிரிவில் ருத்ராங்க்ஷ் பாட்டீல் 228.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் மா சிஹான், தென் கொரியாவின் டேஹன் கோ முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனர். மற்றொரு இந்தியரான அர்ஜுன் பபுதா இப்பிரிவில் 6}ஆம் இடம் பிடித்தார். 
ஆடவர் அணிகள் பிரிவில் ருத்ராங்க்ஷ், அர்ஜுன், ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் பெற்றது. 
ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இஷா தக்சேல் (253.1), கியாத்தி செளதரி (251.2), அன்வி ரத்தோட் (227.7) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்து பதக்கம் வென்றனர். 
இதையடுத்து, புதன்கிழமை முடிவில் இந்தியா 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்கள் வென்றுள்ளது.
 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.