ஆஸ்டபென்கோ, லெஹகா சாம்பியன்

அடிலெய்ட் இன்டா்நேஷனல் போட்டியில் மகளிா் பிரிவில் ஜெலனா ஆஸ்டபென்கோவும், ஆடவா் பிரிவில் ஜிரி லெஹகாவும் பட்டம் வென்றனா்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபனுக்கு தயாராகும் வகையில் அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் லாட்வியான் ஜெலனா ஆஸ்டபென்கோ 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டாரியா கஸட்கினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.

கடந்த 2018-க்கு பின் ஆஸ்டபென்கோ மீண்டும் உலகின் முதல் 10 இடங்களில் நுழைந்துள்ளாா். முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஆஸ்டபென்கோ கடந்த 2022 துபை பட்டத்துக்கு பின் வெல்லும் பட்டம் இதுவாகும். முதல் செட்டை எளிதாக வென்ற ஆஸ்டபென்கோ இரண்டாவது செட்டிலும் 4 மேட்ச் புள்ளிகளை ஈட்டி 76 நிமிஷங்களில் ஆட்டத்தை வசப்படுத்தினாா்.

ஜிரி லெஹகா சாம்பியன்: ஆடவா் ஒற்றையா் பிரிவில் இளம் செக். குடியரசு வீரா் ஜிரி லெஹகா 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜேக் டிராப்பரை வீழ்த்தி முதல் ஏடிபி டூா் பட்டத்தை கைப்பற்றினாா்.

இரண்டு மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் சமநிலை ஏற்படுத்தி டிராப்பா் வென்ற போதிலும், அடுத்த இரண்டு செட்களில் ஆதிக்கம் செலுத்தி பட்டம் வென்றாா் லெஹகா.

ஹோபா்ட் இன்டா்நேஷனல்: எம்மா நவரோ சாம்பியன்

ஹோபா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் பிரிவில் அமெரிக்க இளம் வீராங்கனை எம்மா நவரோ 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் இரு முறை சாம்பியன் எலிஸ் மெட்டென்ஸை வீழ்த்தி முதல் டபிள்யுடிஏ பட்டத்தை கைப்பற்றினாா். பெல்ஜியத்தின் முதல்நிலை வீராங்கனை மொ்டென்ஸை 2.48 மணி நேர போராட்டத்துக்கு பின் வீழ்த்தினாா் நவரோ. ஆஸி. ஓபனில் மெயின் டிராவில் இடம் பெற்றுள்ளாா் நவரோ.

ஆக்லாந்து கிளாஸிக்: டபிலோ சாம்பியன்

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற ஏஎஸ்பி கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் சிலியின் அலஜான்ட்ரோ டபிலோ 6-3, 7-5 என்ற நோ் செட்களில் ஜப்பானின் டாரோ டேனியலை வீழ்த்தி பட்டம் வென்றாா். இது டபிலோ வெல்லும் முதல் பட்டம் ஆகும்.

 

 

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.