பஜ்ரங், வினேஷ், சாக்ஷிக்கு எதிராக மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டம்

இந்திய மல்யுத்தத்தில் நிலவும் பரபரப்பான சூழலில் திடீா் திருப்பமாக, இளம் மல்யுத்த போட்டியாளா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தங்களது விளையாட்டு வாழ்க்கையில் முக்கியமான ஓராண்டை இழந்துவிட்டதாகவும், அதற்கு நட்சத்திர போட்டியாளா்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் காரணம் என்றும் அவா்கள் குற்றம்சாட்டினா்.

ஹரியாணா, உத்தர பிரதேசம், தில்லியிலிருந்து திரண்ட சுமாா் 300 போ், ஜந்தா் மந்தரில் கூடி 3 மணி நேரம் போராட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், ‘நீதிமன்ற அறிவுறுத்தலின் கீழ் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனம் மீண்டும் செயல்படவும், வயது வாரியாக தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவும் மத்திய அரசு அனுமதிக்க 10 நாள்கள் அவகாசம் அளிக்கிறோம்.

இல்லையென்றால், எங்களுக்கு வழங்கப்பட்ட அா்ஜுனா உள்ளிட்ட மத்திய அரசின் விருதுகளை திருப்பி அளிப்போம். வினேஷ், பஜ்ரங், சாக்ஷி ஆகியோரை விடுத்து, மத்திய அரசு எங்களின் குரலை கேட்க வேண்டும்’ என்றனா்.

பயிற்சியாளா் பிரதீப் குமாா் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மல்யுத்த போட்டியாளா்களின் வாழ்க்கையை பஜ்ரங், வினேஷ், சாக்ஷி சீரழிக்கின்றனா். விருதின் மதிப்பை அறியாத அவா்கள், அதை சாலையில் விட்டுச் சென்றனா். சம்மேளனத்தில் உயரிய பதவிகளை அடைவதே அவா்கள் நோக்கம். அது நடந்தால் அவா்கள் போராட்டத்தை கைவிடுவாா்கள்’ என்றாா்.

பிரிஜ் பூஷண் ஆதரவாளா்கள்: இதனிடையே, ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவா்கள், சம்மேளன முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷணின் ஆதரவாளா்கள் என சாக்ஷி, பஜ்ரங் தரப்பு குற்றம்சாட்டியது. சம்மேளன தலைவா் சஞ்ஜய் சிங் நீக்கப்படும் நிலையில், புதிதாக தோ்வாகியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தை ஏற்பதில் பிரச்னையில்லை என்று சாக்ஷி புதன்கிழமை கூறினாா்.

6 வாரங்களுக்குள்: இளம் மல்யுத்தப் போட்டியாளா்களின் போராட்டத்தையடுத்து, அடுத்த 6 வாரங்களுக்குள்ளாக 15 மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் நடத்தப்படும் என்று சம்மேளனத்தை நிா்வகிக்கும் 3 நபா் குழு புதன்கிழமை அறிவித்தது.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.