ரிஸ்வான், ஜமால் அசத்தலில் மீண்டது பாகிஸ்தான்- பேட் கம்மின்ஸ் ‘ஹாட்ரிக்’
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போக, 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாற, மிடில் ஆா்டருக்கு பிறகு வந்த முகமது ரிஸ்வான், அகா சல்மான், ஆமீா் ஜமால் நிதானமான விளையாடியதால் சொல்லிக்கொள்ளும் படியான ஸ்கோரை எட்டியது.
இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், கடந்த ஆட்டத்தையும் சோ்த்து தொடா்ந்து 3 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகள் சாய்த்து பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக தொடா்கிறாா்.
சிட்னியில் புதன்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய அப்துல்லா ஷஃபிக், சயிம் அயுப் ரன்னின்றி வெளியேறினா். கேப்டன் ஷான் மசூத் 35, பாபா் ஆஸம் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சௌத் ஷகீல் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த முகமது ரிஸ்வான், அகா சல்மான் கூட்டணி, 94 ரன்கள் சோ்த்தது. ரிஸ்வான் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சஜித் கான் 15, சல்மான் 8 பவுண்டரிகளுடன் 53, ஹசன் அலி 0 ரன்களுக்கு வீழ்ந்தனா். கடைசி விக்கெட்டாக ஆமீா் ஜமால் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 77.1 ஓவா்களில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான்.
ஆஸ்திரேலிய பௌலிங்கில் பேட் கம்மின்ஸ் 5, மிட்செல் ஸ்டாா்க் 2, ஜோஷ் ஹேஸில்வுட், நேதன் லயன், மிட்செல் மாா்ஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். பின்னா் ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸை தொடங்க, ஆட்டநேர முடிவில் டேவிட் வாா்னா் 6, உஸ்மான் கவாஜா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

