இம்ரான்கான் குறித்து வீரர்கள் கருத்து தெரிவிக்க கூடாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் சிறையில் இருக்கும் நிலையில், அவரை பற்றி வீரர்கள் ஊடகங்களிடம் பேசக்கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் ஜாவேத் மியாண்டட் மற்றும் மொயின் கான் ஆகியோர் இம்ரான் கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. லார்ட்ஸ் மைதானத்தில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன், இம்ரான் கானின் மகன்களிடம் பேட்டி எடுத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் மதிய உணவு இடைவேளையில் அந்தப் பேட்டியை தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.

 

பேட்டியை ஒளிபரப்ப வேண்டாம் என PCB தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இல்லையெனில் போட்டியை புறக்கணிக்கலாம் என எச்சரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் கானுக்கு போட்டியை புறக்கணிக்கும் திட்டம் குறித்து எதுவும் தெரியாது என்றும், தாங்கள் உணவு அருந்திக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், இம்ரான் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பினால் எந்த வீரரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என PCB அறிவுறுத்தியுள்ளதாக PTI செய்தி தெரிவித்துள்ளது. இம்ரானின் மகன்கள், சிறையில் அவர் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாக பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.