Made in India: விம்பிள்டன் மைதானத்தில் மின்னும் இந்தியத் தயாரிப்பு டவல்களின் சுவாரசிய வரலாறு!

விம்பிள்டன் (Wimbledon) டென்னிஸ் தொடர் என்றாலே அங்கு நடைபெறும் விறுவிறுப்பான போட்டிகள், பச்சை நிற புல் தளம், வீரர்களின் வெள்ளை நிற ஆடைகள் ஆகியவைதான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தத் தொடரில் டென்னிஸ் மைதானங்களில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற வண்ணமயமான டவல்கள் (Towels) தற்போது பேசுபொருளாகியுள்ளன. காரணம், அந்த டவல்களுக்கும் நமது இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

விம்பிள்டன் இந்திய டவல்

விம்பிள்டன் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பயன்படுத்தும் அந்தச் சிறப்பு வாய்ந்த டவல்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வாபி (Vapi) என்ற நகரில்தான் தயாரிக்கப்படுகின்றன.

க்றிஸ்டி என்ற பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் 1987-ம் ஆண்டு முதல் விம்பிள்டன் டவல்களை அதிகாரபூர்வமாகத் தயாரித்து வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி நிறுவனமான வெல்ஸ்பன் (Welspun) இந்த க்றிஸ்டி பிராண்டை வாங்கியது. அதன்பிறகு, இந்த டவல்களின் உற்பத்தி பிரிட்டனில் இருந்து இந்தியாவின் குஜராத்திற்கு மாற்றப்பட்டது.

விம்பிள்டன் டவல்கள் சாதாரணமானவை அல்ல.

இதன் உருவாக்கத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஒரு விம்பிள்டன் டவலை வடிவமைத்து தயாரிக்கும் பணி, போட்டி தொடங்குவதற்கு சுமார் 18 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடுகிறது. நிறங்கள் மற்றும் டிசைன்களை முடிவு செய்த பிறகு, ஒரு டவலை முழுமையாக உற்பத்தி செய்து முடிக்க சுமார் 7 நாட்கள் ஆகிறது.

இந்த ஆண்டுக்கான டவல்கள், விம்பிள்டனின் பாரம்பரிய பச்சை மற்றும் ஊதா நிறங்களில் (Purple and Green) நெசவு செய்யப்பட்டுள்ளன. மேலும், விம்பிள்டனின் புகழ்பெற்ற ஸ்ட்ராபெர்ரி, க்ரீம் உணவை நினைவூட்டும் வகையிலும் சிறப்பு நிறங்களில் டவல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மிகச்சிறந்த தரமான பருத்தி நூல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. இதனால், மிகவும் மென்மையாகவும், வியர்வையைத் துரிதமாக உறிஞ்சக்கூடிய வகையிலும், பல முறை துவைத்தாலும் தரம் குறையாத வகையிலும் உள்ளன.

விம்பிள்டன் இந்திய டவல்
விம்பிள்டன் இந்திய டவல்

விம்பிள்டன் விதிமுறைப்படி, போட்டிகள் முடிந்ததும் வீரர்கள் அந்த டவல்களைத் திருப்பி அளிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வீரர்கள் அதைத் திருப்பித் தருவதில்லை! ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,500 டவல்கள் வீரர்களின் பைகளுக்குள் சென்றும், ரசிகர்களுக்குப் பரிசளிக்கப்பட்டும் காணாமல் போகின்றன. வெறும் 15% டவல்கள் மட்டுமே போட்டி அமைப்பாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.

முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (Iga Swiatek), போட்டி முடிந்ததும் தனது பைகளில் இந்த டவல்களை மகிழ்ச்சியாக எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரைச் செல்லமாக `விம்பிள்டன் டவல் திருடி’ (Wimbledon towel thief) என்றே அழைக்கின்றனர்.

முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) கூட, இந்த டவல்களைத் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்குவதற்காக போட்டி முடிந்ததும் எடுத்துச் செல்வதாக ஒருமுறை வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

டவல்கள் தயாரிப்பு மட்டுமின்றி, சமீபகாலமாக விம்பிள்டன் நிர்வாகம் இந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. ரோஜர் பெடரர், ஜோகோவிச் போன்ற முன்னணி வீரர்களின் வீடியோக்களுக்குப் பாலிவுட் மற்றும் இந்தியப் பாடல்களை இணைத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் ஒரு சிறப்பம்சமாக, டெல்லியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் புகழ்பெற்ற குரேமால் குல்ஃபி (Kuremal Kulfi) நிறுவனத்துடன் இணைந்து, விம்பிள்டனின் புகழ்பெற்ற ஸ்ட்ராபெர்ரி, க்ரீம் சுவையில் ஒரு சிறப்பு குல்ஃபியையும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இகா ஸ்வியாடெக் (Iga Swiatek)
இகா ஸ்வியாடெக் (Iga Swiatek)

விம்பிள்டன் மைதானத்தில் உலகின் தலைசிறந்த டென்னிஸ் ஜாம்பவான்கள் பயன்படுத்தும் அந்தப் புகழ்பெற்ற டவல்கள், நம் இந்தியாவின் குஜராத் மண்ணில் உருவாகின்றன. வெறும் வியர்வையைத் துடைக்கும் ஒரு துணியாக மட்டுமல்லாமல், பல டென்னிஸ் வீரர்களின் வீடுகளை அலங்கரிக்கும் ஒரு மதிப்புமிக்க நினைவுப் பரிசாகவும் இந்த மேட் இன் இந்தியா டவல்கள் வலம் வருவது உண்மையில் இந்தியாவுக்கு பெருமைக்குரிய விஷயம்தான்.!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.