Scene Audio Launch: அதை பார்த்துட்டு எனக்கு விழுந்த அடியை வெளியே சொல்ல முடியாது! - கார்த்தி கலகல

சூர்யாவின் சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Suriya - Scene Title Teaser

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் கார்த்தி, "எனக்குத் தெரிந்து ஜோதிகா அண்ணி கலந்துகொண்ட முதல் நிகழ்வு இதுவென்று நினைக்கிறேன். காக்க காக்க திரைப்படத்திலிருந்தே அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் கெமிஸ்ட்ரி எப்போதும் தனித்துவமானதுதான்.

சமீபத்தில் நாங்கள் ஸ்காட்லாந்து சென்றிருந்தோம். சும்மா வாங்களேன் என்று கூப்பிட்டிருந்தார்கள். அங்கு சென்றால் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியங்கள். அந்த உறவுக்காக அண்ணி எடுக்கும் முயற்சிகள் எவராலும் செய்ய முடியாத ஒன்று. அவர்களுக்கு இடையில் லவ் ஓவராக இருக்கிறது (சிரித்துக் கொண்டே) அங்கு அவர்கள் காட்டிய அன்பைப் பார்த்துவிட்டு, கூட வந்த மற்ற தம்பதிகளுக்கெல்லாம் மரண அடி!

எனக்கு விழுந்த அடிகளை வெளியே சொல்ல முடியாது." என நகைச்சுவையாக தொடர்ந்தவர், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணனுக்கு ஒரு தீபாவளி ரிலீஸ் படம் அமைகிறது. எப்போதும் தீபாவளி வெளியீடு என்பது ஸ்பெஷல்தான்.

நான் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த காலத்தில் காக்க காக்க ரிலீஸானது. கமலா தியேட்டரில் படம் பார்க்கச் சென்றேன். அதற்கு முன் வரை எங்கள் அண்ணன் படத்திற்கு எப்போது கூட்டம் வரும், எப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள் என்று ஏங்கியிருக்கிறேன்.

Karthi - Scene Audio Launch
Karthi - Scene Audio Launch

ஆனால் காக்க காக்க படத்தின் முதல் காட்சியில் மாயா என்று கத்திவிட்டு அவர் விழும்போதும், உயிரின் உயிரே பாடல் தொடங்கும்போதும் தியேட்டரே பிளாஸ்ட் ஆனது. அண்ணனை ஒரு பீஸ்ட் மோடில் பார்த்த திரைப்படம் அது.

அதன்பின் பிதாமகன், ஆயுத எழுத்து என ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அண்ணனுக்கு அப்படிப்பட்ட ஒரு சிறப்பான கட்டம் அமைந்திருக்கிறது. கருப்பு படத்தில் அவரது மாஸ் லுக், அடுத்து விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தில் கிளாஸியான நடிப்பு என அசத்தியிருந்தார்.

இப்போது இயக்குநர் ஜித்து மாதவனின் சீன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆவேசம் படத்திற்குப் பிறகு ஜித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். சூர்யா அண்ணனை ஒரு டார்க் ஹியூமர் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஜித்து உருவாக்கியிருப்பது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் அளிக்கிறது." எனப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.