Unhappy: சோகமா? 10 நாள் லீவு எடுத்துக்கோ! - ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!

வார விடுமுறைக்குக் காத்திருந்து வேலை நாள்களை நகர்த்தும் நிலை தான் பெரும்பாலான ஊழியர்களின் மனநிலையாக இருக்கிறது. `மனசு சரியில்ல’ என பணிபுரியும் நிறுவனத்தில் விடுப்பு கேட்டால், `எடுத்துக் கொள்ளுங்கள்’ என அனுமதிக்கப்படுவார்களா என்பது கேள்விக் குறிதான். உடலின் பிரச்னைகளை புரிந்து கொள்ளும் பலர் மனதின் பிரச்னைகளை புரிந்து கொள்ளத் தவறிவிடுகின்றனர். 

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான `Fat Dong Lai’ தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் (sad leave) நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

செல்லப்பிராணி

வாடிக்கையாளர் சேவை…

யூ டோங் லாய் என்பவர் தனது முதல் கடையை 1995-ல் தொடங்கினார். அதன்பிறகு ஹெனான் மாகாணத்தில் 12 விற்பனை நிலையங்களாகக் கடை விரிவடைந்தது. இந்நிறுவனம் வெறும் சூப்பர்மார்கெட்டாக மட்டுமல்லாமல் ரத்த அழுத்தச் சோதனைகள், செல்லப்பிராணிகளுக்கான உணவு நிலையங்கள் போன்ற தனித்துவமான சலுகைகளை வாடிக்கையாளருக்கு வழங்கி வருகிறது. அதனாலேயே `ஹைடிலாவ் ஆஃப் சூப்பர்மார்க்கெட்டுகள்’ (Haidilao of supermarkets) என்ற புனைப்பெயரோடு மக்களிடையே அழைக்கப்படுகிறது. 

ஊழியர்களுக்கான சேவை…

சீனாவின் சில நிறுவனங்களில் ஊழியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால், இதற்கு நேரெதிராக இந்நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் ஏழு மணிநேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.  

மேலும், இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுகிறது. அந்த சமயத்திலும் ஊழியர்கள் நிம்மதியாக இருக்கலாம்.  

அதோடு வாடிக்கையாளர் யாராவது பணிபுரியும் ஊழியர்களை அவமதித்தாலோ அல்லது ஏதேனும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினாலோ 5,000 யுவான் வரை ஊழியர்களுக்கு நிறுவனம் இழப்பீடாக வழங்குகிறது. ஊழியர்களின் மனநிலையை மகிழ்ச்சியாகச் வைக்க சமீபத்தில் அனைத்து ஊழியர்களையும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்வதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து தனது ஊழியர்களின் நலனில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.   

"ஒவ்வொருவருக்கும் அவர்கள் சோகமாக இருக்கும் நாள்கள் உண்டு, அதுதான் மனித இயல்பு. ஆனால், சுவாரஸ்யமாக அவர்களுக்குச் சோகமான நாள்களில் விடுப்பு கிடைத்தால், அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக உணர முடியும். இதன் பொருள் அவர்கள் நிறுவனத்தின் புரிதலையும் ஆதரவையும் உணர்கிறார்கள். மேலும், வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையின் சுவையைப் பெறுகிறார்கள். அதோடு, ஊழியர்களுக்கு எப்போது விடுப்பு எடுக்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கான சுதந்திரம் இருக்கும்’’ என்று யூ டோங் லாய் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.