Apple: இந்தியாவில் ஊழியர்களுக்காக 78,000 வீடுகளை கட்டும் ஆப்பிள்... தமிழகத்தில் எங்கு தெரியுமா?!

இந்தியாவிலுள்ள ஆப்பிள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக சுமார் 78,000 வீடுகளைக் கட்ட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 1,50,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Home | வீடு

ஆப்பிள் நிறுவனம் ஊழியர்களுக்காக வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே சீனா மற்றும் வியட்நாமில் இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. 

ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கான வீடுகள் எங்குக் கட்டப்படும்?!... 

இந்தியாவிலுள்ள ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளராக உள்ளது. அதனால் தமிழகத்தில் 58,000 வீடுகள் வரை அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பெரிய திட்டத்தில் தமிழகத்தின் சிப்காட், டாடா குழுமம் மற்றும் எஸ்.பி.ஆர் போன்ற குழுமங்களின் பங்களிப்பு இருக்கும். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவிகளும் பெறப்படும் என்று கூறியுள்ளனர். வீடுகளின் கட்டுமான பணிகள் 2025 மார்ச் 31-க்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

women empowerment

பெண்களுக்கு முக்கியத்துவம்…

தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காகப் பல பெண்கள் வெளியூர்களிலிருந்து வருகின்றனர். இவர்களில் பலர் 19 முதல் 24 வயதுட்பட்டவர்களாக உள்ளனர். இப்பெண்களில் பலரும் நீண்ட தூரம் பயணித்து வேலைக்கு வருகின்றனர், அதோடு வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே வீடுகளைக் கட்டி உதவ விரும்புகிறது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் நிறுவனத்துடன் பணிபுரியும் ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சால்காம்ப் போன்ற வேறு சில நிறுவனங்களும் இந்த வீடுகளை தங்கள் சொந்த தொழிலாளர்களுக்காகப் பயன்படுத்தும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.