இந்தியாவில் வெளியாகாத டாரண்டினோ - டேவிட் ஃபின்சர் படம்; நெட்பிளிக்ஸின் லாப கணக்கு! - பின்னணி என்ன?

ஃபைட் கிளப், செவன் உள்ளிட்ட ஹாலிவுட் படைப்புகளை இயக்கியவர் இயக்குநர் டேவிட் ஃபின்சர். அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கிற The Further Mis-Adventures of Cliff Booth திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

The Further Mis-Adventures of Cliff Booth

இந்தத் திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் குவெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் வெளியான Once Upon a Time in Hollywood படத்தின் ஸ்பின் ஆஃப் என்கிற தகவல் பலரும் அறிந்ததே. இதன் ஸ்பின் ஆஃப் கதையை இயக்குநர் டாரண்டினோவே எழுத, அதனை டேவிட் ஃபின்சர் இயக்கியிருக்கிறார்.

இப்படம், திரைக்கதை வடிவத்தில் இருக்கும்போதே இயக்குநர் டாரண்டினோவிடம் பெரிய தொகையை அளித்து இப்படத்திற்கான உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது.

அப்படி நெட்ஃபிளிக்ஸின் ஒரிஜினல் திரைப்படமானது இந்த The Further Mis-Adventures of Cliff Booth. நெட்ஃபிளிக்ஸ் நீண்ட காலமாகவே வியாபார உத்தியாகச் சில விஷயங்களைப் பின்பற்றி வருகிறது.

Brad Pitt|Quentin Tarantino
Brad Pitt|Quentin Tarantino

நெட்ஃபிளிக்ஸ் தனது ஒரிஜினல் திரைப்படங்களை, தனது தளத்தில் பார்வையாளர்களைப் பார்க்க வைப்பதற்காகக் குறுகிய திரைகளில் மட்டுமே அப்படங்களை வெளியிடும்.

அதுவும் குறுகிய நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓட்டி, வெகு சீக்கிரமாகவே தன்னுடைய நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டுவிடும். இது தன்னுடைய ஒரிஜினல் படைப்பை, தனது தளத்திலேயே பார்வையாளர்களைப் பார்க்க வைப்பதற்கான உத்திதான். ஆனால், இதற்குப் பின்னால் ஆஸ்கர் கணக்கும் இருக்கிறது.

ஆஸ்கர் அகாடமியின் விதிமுறைகளின்படி, ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற அப்படங்கள் கட்டாயமாகச் சில நாட்களாவது திரையரங்குகளில் ஓடியிருக்க வேண்டும்.

ஆஸ்கர் விருதுகளுக்குத் தன்னுடைய படைப்புகளைத் தகுதி பெறச் செய்வதற்காகவே நெட்ஃபிளிக்ஸ் இப்படிச் சில நாட்கள் மட்டும் திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது.

இதே பிசினஸ் கணக்கினால்தான், நெட்ஃபிளிக்ஸ் The Further Mis-Adventures of Cliff Booth திரைப்படத்தைச் சில நாட்களுக்கு மட்டும் திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான சீக்குவல் படம் இதுவென்பதால், தேர்ந்தெடுத்த ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தது நெட்ஃபிளிக்ஸ்.

ஆனால், திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரத்திற்கு உள்ளாகவே ஓடிடி தளத்தில் வெளியாவதால், முக்கியத் திரையரங்க நிறுவனங்கள் இப்படத்தைத் திரையிட மறுத்துவிட்டன. அதனால், நெட்ஃபிளிக்ஸ் திட்டமிட்டதை விடவும் குறைவான திரைகளிலேயே இப்படம் வெளியானது.

The Further Mis-Adventures of Cliff Booth
The Further Mis-Adventures of Cliff Booth

நெட்ஃபிளிக்ஸ் தனது வியாபார உத்திக்காக இதனைத் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ்கள் இப்படிச் சிறிய வட்டத்திற்குள் சுருங்கிவிடுவது, ரசிகர்களைக் கவலை கொள்ளச் செய்கிறது.

பல்வேறு முக்கியமான படைப்புகளைக் கொடுத்த டேவிட் ஃபின்சர் மற்றும் குவெண்டின் டாரண்டினோ படங்களுக்கு இந்தியாவிலும் எதிர்பார்ப்பு நிலவும். ஆனால், The Further Mis-Adventures of Cliff Booth படம் இந்தியாவில் எங்கும் ரிலீஸ் ஆகாததால், அது இந்திய ரசிகர்களை வருத்தமடையச் செய்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.