Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வழுக்கைப் பிரச்னை... ரிவர்ஸ் செய்ய வாய்ப்பிருக்கிறதா?
Doctor Vikatan: என் மகனுக்கு 22 வயதாகிறது. அதற்குள் அவனுக்கு முன்னந்தலைப் பகுதியில் வழுக்கை ஆரம்பித்திருக்கிறது. இந்த வயதிலேயே வழுக்கை பிரச்னை பாதிக்குமா... இது தற்காலிகமானதா அல்லது அப்படியே நிரந்தரமாகத் தங்கிவிடுமா...? இந்தப் பிரச்னையை ரிவர்ஸ் செய்ய சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்கள்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
உங்கள் மகனுக்கு உள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியைப் பார்க்கும்போது அவருக்கு இருப்பது ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா (Androgenetic alopecia) எனப்படும் ஹார்மோன் தொடர்பான பிரச்னை இருக்கலாம் என்று தோன்றுகிறது.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனானது டிஹெச்டி எனப்படும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டீரான் ஆக மாற்றப்படும். அதன் விளைவாக கூந்தலின் வேர்க்கால்கள் பலமிழந்து, மெலிய ஆரம்பிக்கும். 18 வயதில் இதை நீங்கள் உணர்ந்திருந்தாலும், அதற்கு சில வருடங்கள் முன், அதாவது 12 வயதிலிருந்தே பிரச்னை ஆரம்பித்திருக்கும். ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா பாதிப்புக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். குடும்பப் பின்னணி காரணமாக, அதாவது உங்கள் குடும்பத்தில் அப்பா, அண்ணன், மாமா என யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடரலாம்.

வாழ்வியல் முறையும் இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். இரவில் தாமதமாக உறங்கச் செல்வது, கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிடுவது, ஸ்ட்ரெஸ் போன்றவை முடி உதிர்வுக்கு முக்கியமான காரணங்கள். முடி உதிர்வை உடனே நிறுத்துவதாகச் சொல்லி விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளைச் சிலர் உபயோகிக்கிறார்கள். இதை உபயோகிக்கத் தொடங்கியதும் முடி உதிர்வு நிற்கும். ஆனால் மருந்தை நிறுத்தியதும் மீண்டும் உதிரத் தொடங்கும். இதன் ஆபத்தை உணராமல் பலரும் இந்த மருந்தை நீண்ட காலமாக உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும்போது இது குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தக்கூடும்.
முதல் வேலையாக தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் மகனின் முடி உதிர்வுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ளச் சொல்லுங்கள். கல்லீரல் பாதிப்பிருக்கிறதா என்பதையும் செக் செய்யுங்கள். அப்படியிருந்தாலும் உடலால் சத்துகளை கிரகிக்க முடியாத நிலை ஏற்பட்டு, முடி உதிர்வாக வெளிப்படலாம். மருத்துவரை அணுகினால் கல்லீரல் ஆரோக்கியத்துக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார்.
ஜங்க் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இரவில் சரியான நேரத்துக்கு, சரியான அளவு தூங்குவதை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம் மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கும். ஸ்ட்ரெஸ்ஸைக் கட்டுப்படுத்த உதவும் அந்த ஹார்மோன், இரவில் 10 முதல் 12 மணி நன்றாகச் சுரக்கும். அந்த நேரத்தில் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தால், ஸ்ட்ரெஸ், பிசிஓடி, சருமத்தில் தேவையற்ற பகுதிகளில் ரோம வளர்ச்சி, கூந்தல் மெலிவது, எரிச்சல் உணர்வு, கோபம் போன்றவை வரலாம். அதனால்தான் பெரும்பாலான பிரச்னைகளுக்கும் முறையான தூக்கம் முக்கிய தீர்வாக வலியுறுத்தப்படுகிறது.
நெல்லிக்காய், முருங்கைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். காயாக, கீரையாக உண்ண முடியாதவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இவற்றையே மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளலாம்.
டாக்டர் தலத் சலீம்:
சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் செஹட் த ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் உரிமையாளர். 26 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செஹட் (Sehat) என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நிறுவி, கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு குறித்த சிகிச்சைகளை வழங்கி வருகிறார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

