Dating App வலையில் சிக்கிய டாக்டர்; விடுதியில் கட்டிப்போட்டு நகை, பணம் பறிப்பு; பகீர் பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியின் நுழைவுப் பகுதி அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், கடந்த 20-ம் தேதி ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்தி மணிகண்டன் (23) என்பவரது பெயரில் 8 பேர் கொண்ட குழுவினர் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

தென்காசியிலிருந்து வாடகை காரில் வந்த இவர்கள், பகலில் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு இரவில் விடுதியில் தங்கியுள்ளனர். இதற்கிடையில், 22-ம் தேதி மேலும் இரு சிறுவர்கள் அந்த அறைக்கு வந்துள்ளனர். 22-ம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில், அருமனை பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் மழுக்கோடு தட்டான்விளை பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் அந்த விடுதிக்குச் சென்றுள்ளார்.

அறையிலிருந்த நபர்களில் ஒருவர் அவரை உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர், உள்ளே இருந்த கும்பல் தன்னைக் கட்டிப்போட்டுத் தாக்கி, தான் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் செயின், 2 பவுன் காப்பு, 1.5 பவுன் எடையுள்ள 2 மோதிரங்கள் என மொத்தம் 12.5 பவுன் நகைகளையும், கையிலிருந்த 500 ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டதாக விடுதிப் பணியாளரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், செல்போன் பாஸ்வேர்டை மிரட்டிப் பெற்று, வங்கிக் கணக்கிலிருந்த பணத்தையும் சுமார் 53,000 ரூபாயை அவர்களின் கணக்கிற்கு மாற்றிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

டேட்டிங் ஆப்

விடுதிக்கு வெளியே வந்து பார்த்தபோது அக்கும்பல் வந்த கார் அங்கு இல்லை. உடனடியாக விடுதி உரிமையாளருக்கும், குலசேகரம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் விசாரணையில், அவசர சிகிச்சைக்காக அழைத்ததன் பேரிலேயே விடுதிக்குச் சென்றதாக டாக்டர் தெரிவித்திருந்தார். ஆனால், சிகிச்சைக்கான எந்தவொரு மருத்துவ உபகரணங்களோ, மருந்துகளோ இன்றி நள்ளிரவு நேரத்தில் டாக்டர் விடுதிக்கு வந்தது போலீசாருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து கைரேகை நிபுணர்களின் உதவியோடு அறையில் சோதனை நடத்தியதுடன், டாக்டரின் செல்போன் சிக்னல் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைப் பின்பற்றி போலீசார் தென்காசிக்கு விரைந்தனர். தென்காசியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட 4 பேரை குலசேகரம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

விசாரணையில் டேட்டிங் ஆப் மூலமாகத் தொடர்பு கொண்டு, சிக்குபவர்களை தனிமையில் வரவழைத்து மிரட்டிப் பணம், நகை பறிக்கும் கும்பலின் திட்டமிட்ட சதி இது என்பது தெரியவந்தது.

டாக்டரின் செல்போனிலிருந்து பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள், பிடிபட்ட இரு சிறுவர்களுடையது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த இரு சிறுவர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தப்பியோடிய மற்ற நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.