த.வெ.க ஆட்சியைக் கலைச்சிடுங்க... டெல்லிக்கு பறந்த பா.ஜ.க ரிப்போர்ட்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கமாக விளக்கு ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது, பா.ஜ.க-வினரை கொதிப்படையச் செய்திருக்கிறது. "உச்ச நீதிமன்ற உத்தரவை எப்படி நிறைவேற்றாமல் இருக்கலாம்..." எனக் கேட்டு திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடந்த நிலையில், "அரசியலமைப்புச் சட்டத்தையே மீறியிருக்கிறது த.வெ.க அரசு. இந்த ஆட்சியைக் கலைத்துவிடுங்கள்..." என டெல்லிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க தலைவர்களும் சீனியர்களும்.

திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றத்தில், உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கு ஏற்றப்படுவது வழக்கம். மலை உச்சியிலுள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக இந்து அமைப்புகளும் பா.ஜ.க-வினரும் போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால், மலை உச்சியிலுள்ளது சர்வே கல் தான். அது தீபத்தூண் அல்ல என்ற வாதத்தை முன்வைத்து வருகிறது தமிழக அரசு. முந்தைய தி.மு.க ஆட்சியிலும் தற்போதைய த.வெ.க ஆட்சியிலும் அரசின் நிலைப்பாடு மாறவில்லை. இந்தச் சூழலில், தீபத் தூணிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது த.வெ.க அரசு.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டு மட்டும் மலை உச்சியிலுள்ள தூணிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கடந்த நவ.20-ம் தேதி உத்தரவிட்டது. அதற்கான பொறுப்பை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த உச்ச நீதிமன்றம், விளக்கேற்றுவதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்த தமிழக அரசு, திருப்பரங்குன்றம் பகுதியில் தடை உத்தரவை பிறப்பித்தது. மதுரை மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவுக்கு எதிரான அவசர மனு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதனால்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டது என்று அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சீராய்வு மனு தாக்கலாகி இருப்பதைக் கணக்குக் காட்டி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது. தவறினால், உச்ச நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைக்கு அதிகாரிகள் ஆளாக நேரிடும் என்று எச்சரித்தனர். அத்தனையையும் கேட்டுக்கொண்டுவிட்டு, தூணில் விளக்கு ஏற்றவில்லை தமிழக அரசு.

இதுதான் பா.ஜ.க-வினரை கடும் டென்ஷனாக்கியிருக்கிறது. எதற்கும் பெரிதாக ரியாக்ட் செய்யாத பா.ஜ.க-வின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், நேற்று நள்ளிரவு 12 மணி வரையில் த.வெ.க அரசின் நடவடிக்கை குறித்து தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் காரசாரமாக விவாதித்திருக்கிறார்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மாநில மையக்குழு உறுப்பினர்கள் சிலர், "மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 144 தடை உத்தரவுக்கு எதிரான மனு விசாரிக்கப்பட்டபோது, தீபத்தூண் என்று குறிப்பிடுவது தவறு. அது சர்வே கல் தான் என்று அரசுத் தரப்பில் மீண்டும் வாதிட்டனர். அதனைக் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் கோரிக்கை. அதை நிறைவேற்றப் பாருங்கள் என்றார். ஆனால், கடைசி வரையில் அவரது உத்தரவை அரசுத் தரப்பு கேட்டு நடக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மீறியிருப்பதால், நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

பி.எல்.சந்தோஷ்

அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு மாநில அரசு மீறும் போது, அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநில அரசை ஜனாதிபதியால் கலைக்க முடியும். அதற்கான ரிப்போர்ட்டை ஆளுநரிடம் இருந்து பெற்று ஆட்சியைக் கலைக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தெரிந்தே த.வெ.க அரசு மீறியிருப்பதால், அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்த முடியாத அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. இதையெல்லாம் பி.எல்.சந்தோஷிடம் எடுத்துக் கூறினோம்.

அதைத்தொடர்ந்துதான், தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில், பெரும் தவறை செய்கிறீர்கள் என்று த.வெ.க அரசையும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரையும் எச்சரித்தார் சந்தோஷ். இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க அணிகள் பிரிவுகளின் அமைப்பாளர் கே.டி.ராகவனும் எச்சரித்தார். த.வெ.க ஆட்சியைக் கலைப்பது குறித்து ஒரு ரிப்போர்ட்டும் டெல்லிக்குச் சென்றிருக்கிறது" என்றனர்.

த.வெ.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க-வினர் சலங்கைக் கட்டி ஆடும் நிலையில், சட்டரீதியாக அது சாத்தியமில்லை என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். நம்மிடம் பேசிய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சிலர், "எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், ஆட்சியைக் கலைப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவிட்டது உச்ச நீதிமன்றம். அதனால், தங்கள் இஷ்டத்துக்கு எந்த மாநில அரசின் ஆட்சியையும் மத்திய அரசால் கலைத்துவிட முடியாது. தவிர, திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் ஏற்படவில்லை. திருப்பரங்குன்றம் பகுதியில் மட்டுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே, பெரியளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிட்டதாகவும் சொல்ல முடியாது.

திருப்பரங்குன்றம் தேவஸ்த்தான அறங்காவலர் குழுவினர் எடுத்த முடிவின்படிதான், உச்சிபிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர், தீபம் ஏற்றுவது தேவஸ்த்தான அறங்காவலர் குழுவினரின் பணி. அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், எங்களால் மலை உச்சியில் தீபம் ஏற்ற முடியவில்லை. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்று விளக்கமளித்திருக்கிறார். இவ்விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேண்டுமானால் பாயலாமே ஒழிய, ஆட்சியையே கலைத்துவிடும் அளவுக்கு சட்டச் சிக்கல் உருவாகப் போவதில்லை என்றனர்.

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவினர் தீர்மானம்

நம்மிடம் பேசிய த.வெ.க முக்கிய தலைவர்கள் சிலர், "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த எத்தனையோ உத்தரவுகளை அமல்படுத்தாமல் புறந்தள்ளியிருக்கிறது கர்நாடகா அரசாங்கம். சாரதா சிட் பண்ட் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுகளையே மீறினார் அப்போதைய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதுபோல இல்லாமல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தயாராகவே இருந்தது தமிழக அரசு. ஆனால், தேவஸ்தான குழுவினர் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற முடிவெடுத்த பிறகு, நீதிமன்ற உத்தரவை எப்படி அமல்படுத்த முடியும்... என்றனர்.

திருப்பரங்குன்றம் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் எடுத்த முடிவுக்கு பின்னால் நின்றுகொண்டு, நாங்கள் என்ன செய்ய முடியும்... என்று கேட்கிறது த.வெ.க அரசு. இதெல்லாம் ஒரு காரணமா... இவர்கள் திட்டமிட்டு தீபத்தூணில் விளக்கு ஏற்றவில்லை. இந்த ஆட்சியைக் கலைத்துவிடுங்கள்... என்று குதிக்கிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.

டெல்லி என்ன முடிவெடுக்கப் போகிறது எனப் பார்ப்போம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.