ஆசை... ஆடம்பரம்... கடன் வலை... பணச் சிக்கல் வராமல் காத்துக்கொள்ள 10 கட்டளைகள்!
“எனக்கு மாதம் 55,000 ரூபாய் சம்பளம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தபோது, கிடைத்த சம்பளத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளித்து, கொஞ்சம் சேமித்தும் வந்தேன். ஆனால், திருமணத்துக்குப் பிறகு என் வாழ்க்கை மாறியது. நண்பர்கள் சிலர் கார் வாங்கினார்கள்; உறவினர்கள் சிலர் சொந்த வீடு கட்டினார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமக்கும் அப்படி ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற ஆசை வந்தது.
முதலில் கடன் வாங்கி கார் வாங்கினேன். பிறகு டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என வீட்டுக்குத் தேவையான பொருள்களை இ.எம்.ஐ-யில் வாங்கினேன்.
அடுத்து, வீட்டுக் கடன் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கினேன். கடன் வாங்கும்போது எனக்கு சுமையாகத் தெரியவில்லை. சம்பளம் வந்ததும் தவணைகளைக் கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தில் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்ட போதுதான் எனக்கு சுமை அழுத்த ஆரம்பித்தது. விலைவாசி உயர்வு, குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு என அடுத்தடுத்த சுமைகள் வந்தபோது நிலைமை மோசமானது.
இப்போது என் சம்பளத்தில் பாதிக்கும் மேல் கடன் தவணைகளுக்கே செல்கிறது. சேமிப்பு இல்லை; அவசரத் தேவைக்கு பணமும் இல்லை. புதிய கடன் வாங்காமல் ஒரு மாதத்தைக்கூட ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறேன். இந்தச் சுழலில் இருந்து எப்படி மீண்டுவருவது எனத் தெரியாமல் தவிக்கிறேன். நிதி ஆலோசகர் உதவியுடன் எனக்கு வழிகாட்ட முடியுமா?’’ என்று பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகர் ஒருவர் போனில் வருத்தத்துடன் பேசினார்.
இவரை மட்டுமல்ல... அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பார்த்து நாமும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை, பலரையும் கடன் வலையில் சிக்கவைத்துவிடுகிறது. சம்பளம் வாங்கியதும் கடன்களுக்கான இ.எம்.ஐயைக் கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தில் மாதத்தை ஓட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது, ஒரே சமயத்தில் பல பொருள்களை இ.எம்.ஐ-யில் வாங்குவது, கிரெடிட் கார்டை வரம்பில்லாமல் பயன்படுத்துவது, சுற்றுலா மற்றும் ஆடம்பரச் செலவுகளுக்குக் கடன் வாங்குவது எனத் தொடங்கும் பழக்கங்கள், நாளடைவில் நிம்மதியையே பறித்துவிடுகின்றன. இதுபோன்ற கடன் சிக்கல்களில் விழாமல் இருக்கவும், ஏற்கெனவே கடனில் இருப்பவர்கள் அதிலிருந்து மீளவும் நிதி ஆலோசகர்கள் வலியுறுத்தும் 10 கட்டளைகள் இதோ...

1. வருமானத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழுங்கள்!
நம்முடைய சம்பளம் எவ்வளவு, மாதச் செலவுகள் எவ்வளவு, சேமிக்க வேண்டிய தொகை எவ்வளவு என்பதை முதலில் கணக்கிட வேண்டும். நண்பர் கார் வாங்குகிறார், உறவினர் வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்கிறார் என்பதற்காக நாமும் அதேபோல் வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர்களுடைய வருமானமும், நிதி நிலையும் வேறாக இருக்கலாம். நம்முடைய வருமானத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதே கடன் சுமையிலிருந்து தப்பிப்பதற்கான முதல் வழி.
2. இ.எம்.ஐ-க்கு ஒரு எல்லை வையுங்கள்!
‘உங்களுக்கு கார் கடன் வேண்டுமா, வீட்டுக் கடன் வேண்டுமா, பர்சனல் லோன் வேண்டுமா...’ என்றெல்லாம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்கலாம். சுலபமாகக் கிடைக்கிறது என்பதற்காகப் பலரும் கிடைக்கும் கடன் அனைத்தையும் வாங்கிவிடுகிறார்கள். வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என எல்லாவற்றுக்கும் சேர்த்து மாதச் சம்பளத்தில் பெரும்பகுதி இ.எம்.ஐ-யாகச் சென்றுவிட்டால், அன்றாட வாழ்க்கையை நடத்துவது சிரமமாகிவிடும். பொதுவாக, மொத்தக் கடன் இ.எம்.ஐ-கள் மாத வருமானத்தில் 30-40 சதவிகிதத்துக்குள் இருப்பதுதான் நல்லது. ஏற்கெனவே அதிகக் கடன் இருப்பவர்கள் புதிதாகக் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
3. கிரெடிட் கார்டை இஷ்டத்துக்குப் பயன்படுத்தாதீர்கள்!
கிரெடிட் கார்டு என்பது நம்முடைய பணம் அல்ல; அது கடன் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். கையில் கார்டு இருக்கிறது என்பதற்காகப் பொருள்களை வாங்கிக் குவிக்கக் கூடாது. முக்கியமான தேவைக்கு மட்டும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு மாதமும் முழுமையான பில் தொகையையும் உரிய தேதிக்குள் செலுத்துங்கள். குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்திவந்தால், மீதமுள்ள தொகைக்கு அதிக வட்டி சேர்ந்து கடன் சுமை அதிகரிக்கும்.

4. தேவைக்கும் ஆசைக்கும் வித்தியாசத்தை அறிந்துகொள்ளுங்கள்!
புதிய மொபைல், பெரிய டிவி, விலை உயர்ந்த கார், ஆடம்பரமான வீட்டு உபயோகப் பொருள்கள் என எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் பொருள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே மாற்றுவது பற்றி யோசிக்கலாம். தள்ளுபடி, இலவசம், இ.எம்.ஐ சலுகை போன்ற விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு தேவையற்ற பொருள்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
5. அவசரகால நிதியை உருவாக்குங்கள்!
வேலை இழப்பு, மருத்துவச் செலவு, குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் போன்றவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்போது கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கான அத்தியாவசியச் செலவுகளுக்குத் தேவையான தொகையை அவசரகால நிதியாகச் சேமித்து வைக்க வேண்டும். இந்தத் தொகையை எளிதில் எடுக்கக்கூடிய வகையில் வங்கிக் கணக்கிலோ அல்லது லிக்விட் ஃபண்டுகளிலோ வைத்திருப்பது நல்லது.
6. சுற்றுலாவுக்கும், விழாக்களுக்கும் முன்கூட்டியே திட்டமிடுங்கள்!
ஜாலியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற ஆசை தவறில்லை. ஆனால், அதற்கு ஓர் எல்லை முக்கியம். பலர் செய்யும் தவறு... பர்சனல் லோன் வாங்கியும், பி.எஃப் பணத்தை எடுத்தும் டூர் போவதுதான். சிலர் உறவினர்கள் வீட்டு விழாக்களில் கெளரவமாகக் காட்டிக்கொள்ள தகுதிக்கு மீறிய பரிசுகளை வாங்கிக் கொடுப்பதைப் பார்க்கலாம். இது மிக மிகத் தவறு.
அன்பை வெளிப்படுத்த கொடுக்கும் பரிசு, உங்கள் வருமானத்துக்கு ஏற்றதாக இருப்பது முக்கியம். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதும், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் கடன் சுமையை அதிகரித்துக்கொள்வதாக இருக்கக்கூடாது. சுற்றுலா, பிறந்தநாள், திருமணம், குடும்ப விழாக்கள் போன்றவற்றுக்கு முன்கூட்டியே ஒரு தொகையை ஒதுக்கிச் சேமிக்க வேண்டும். கையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிட வேண்டும்.

7. சம்பளம் உயர்ந்தால் சேமிப்பையும் உயர்த்துங்கள்!
பலரும் செய்யும் தவறு... வருமானம் 1,000 ரூபாய் அதிகரித்தால், செலவை 2,000 ரூபாய் அதிகரித்துவிடுவதுதான். சம்பளம் உயரும்போதெல்லாம் புதிய கார், விலை உயர்ந்த மொபைல் என லைஃப் ஸ்டைலை பிரமாண்டமாக ஆக்கிக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. சம்பள உயர்வில் கணிசமான பகுதியைச் சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் ஒதுக்க வேண்டும்.
8. கடன் வாங்குவதற்கு முன், நூறு தடவை யோசியுங்கள்!
எந்தவொரு கடனாக இருந்தாலும் சரி, வாங்குவதற்கு முன்பு, நூறு முறை யோசனை செய்யுங்கள். கடன் வாங்கி, அதன் மூலம் வாங்கும் அந்தப் பொருள் உண்மையிலேயே அவசியமா எனப் பாருங்கள். அதற்கான தவணையைத் தொடர்ந்து செலுத்த முடியுமா எனக் கணக்குப் போட்டுப் பாருங்கள். எதிர்காலத்தில் குடும்பச் செலவுகள் அதிகரித்தால் சமாளிக்க முடியுமா என்று யோசியுங்கள். கடனின் வட்டி, மறைமுகக் கட்டணங்கள், மொத்தமாகத் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பாருங்கள். வருமானம் நிலையாக இல்லாத நிலையில், வீட்டுக் கடன் போன்ற நீண்டகாலக் கடன் வாங்குவதில் கூடுதல் எச்சரிக்கை முக்கியம்.
9. திரும்பிச் செலுத்தும் திறனை அறியுங்கள்!
பொதுவாகவே நிதி ஆலோசனையில் சொல்லும் அடிப்படை விஷயம் இதுதான்... கடன் வாங்குவது தவறல்ல; திருப்பிச் செலுத்தும் திறனைவிட அதிகமாகக் கடன் வாங்குவதுதான் தவறு. உங்கள் வருமானம், செலவுகள், கடன் திருப்பிச் செலுத்தும் திறன் அறிந்து கடனை முடிவு செய்யுங்கள்.
10. நிரந்தர நிம்மதிக்கான நிதி விதியைப் பின்பற்றுங்கள்!
நம்முடைய வருமானத்துக்குள் வாழ்வது, தேவையற்ற ஆசைகளைக் கட்டுப்படுத்துவது, அவசரகால நிதியை உருவாக்குவது, கடனைத் திட்டமிட்டுக் கையாள்வது ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் நிதி நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். ஆடம்பரமான வாழ்க்கை தற்காலிக மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், கடன் சுமையில்லாத வாழ்க்கை மட்டுமே, நமக்கும் நம் குடும்பத்துக்கும் நிரந்தர நிம்மதியைத் தரும்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


