`மாலை வேளையில் சேலம் வீதிகளில் நடந்து பாருங்க - தட்டுவடைக்குள் ஒளிந்திருக்கும் தனித்துவமான சுவை!
சேலம் என்றாலே மாம்பழம், ஏற்காடு, எஃகு, ஜவ்வரிசி எனப் பெருமை பேசப் பல விஷயங்கள் உண்டு. அந்தப் பட்டியலில் மாலை நேரத்தில் பலரையும் தேடிச் செல்ல வைக்கும் சுவையும் ஒன்று... அதுதான் தட்டுவடை செட்!
முதல் கடியிலேயே உணரப்படும் தட்டுவடையின் மொறுமொறுப்பு, நாக்கில் பட்டவுடன் சுறுக்கென்று ஏறும் சட்னியின் காரம், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் தரும் லேசான இனிப்புச் சுவை... இவை மூன்றும் ஒரே வாய்க்குள் சேரும்போது கிடைக்கும் சுவையே தனிதான்.
இரண்டு தட்டுவடைகளுக்கு நடுவே காரமான சட்னி, பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, சாட் மசாலா என வண்ணமயமாக அடுக்கப்படும் கலவை பார்ப்பதற்கே கண்களுக்கு விருந்து. ஒவ்வொரு கடையிலும் சட்னி, காய்கறிக் கலவையின் அளவும் சுவையும் மாறுபடும். அதுவே ஒவ்வொரு கடையின் தனி அடையாளமாகவும் இருக்கிறது!
மாலை வேளையில் சேலம் வீதிகளில் நடந்து பாருங்கள்; எங்கு திரும்பினாலும் தள்ளுவண்டிகளிலும் சிறிய கடைகளிலும் தட்டுவடை செட் விற்பனை களைகட்டும். சேலத்தின் இந்தச் சுவை எல்லை தாண்டி இன்று தமிழகத்தின் பல ஊர்களிலும் பரவி வருகிறது. இப்படி தட்டுவடை செட்டுக்குப் பெயர்பெற்ற சேலத்தில், தள்ளுவண்டியில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய தொழில், இன்று 30 ஆண்டுகளாக மூன்று தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து வருகிறது.

பட்டைக்கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி தட்டுவடை செட் கார்னர் உரிமையாளர்களில் ஒருவரான லோகேஷ், இந்தத் தொழிலின் தொடக்கம், வளர்ச்சி மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் குடும்பத்தின் உழைப்பு குறித்துப் பேசுகிறார்
தள்ளுவண்டியில் தொடங்கிய சுவைப் பயணம்!
லோகேஷ் கூறுகையில், அவருடைய பாட்டி வெங்கடலட்சுமிக்குச் சுயதொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது. அதன்படி, 1996-ம் ஆண்டு தள்ளுவண்டியில் தட்டுவடை செட் விற்பனையைத் தொடங்கியிருக்கிறார். அவருக்குத் துணையாக லோகேஷின் அப்பா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார்.

தள்ளுவண்டி வாங்க ரூ.4,500, ஆரம்ப முதலீடாக ரூ.500 என மொத்தம் ரூ.5,000-ல் இந்தத் தொழில் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் ஏழு துண்டுகள் கொண்ட ஒரு செட் ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் லோகேஷ் தெரிவிக்கிறார். இன்றும் ராமகிருஷ்ணன் அதே பட்டைக்கோயில் பகுதியில் தள்ளுவண்டியில் தட்டுவடை செட் விற்பனை செய்து வருகிறார்.
தற்போது சக்தி தட்டுவடை செட் கார்னர் என்ற பெயரில் தட்டுவடை செட் வகைகளுக்கான பிரத்யேகக் கடையை இரண்டாவது அக்ரஹாரம் பட்டைக்கோயில் பகுதியில் லோகேஷும் அவரது சகோதரர் ஹரிஹரனும் இணைந்து நடத்தி வருகின்றனர். இப்படிப் பாட்டி தொடங்கிய தொழிலை அடுத்தடுத்த தலைமுறையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
செட்டில் இத்தனை வகைகளா?
கடையில் கிடைக்கும் வகைகள் குறித்துப் பேசும் லோகேஷ், பூண்டு செட், ஆனியன் செட், பொடி செட், தக்காளி செட், வெள்ளரிக்காய் செட், ஊறுகாய் செட், காம்போ செட் எனப் பல வகைகளில் தட்டுவடை செட் விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகிறார்.
இதோடு பன் ரோஸ்ட், குல்கந்து பன் ரோஸ்ட், தக்காளி நொறுக்கல், மசாலா சுண்டல் உள்ளிட்ட சிற்றுண்டிகளும் கடையில் கிடைக்கின்றன. தட்டுவடை செட்டின் விலை ரூ.10-ல் தொடங்குகிறது; தேர்ந்தெடுக்கும் வகைக்கு ஏற்ப விலை மாறுபடும். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்பப் புதிய வகைகளையும் மெனுவில் சேர்த்து வருவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.

காலை ஆறு மணிக்கே தொடங்கும் உழைப்பு!
கடையின் அன்றாடப் பணிகள் குறித்துக் கூறும் லோகேஷ், மதியம் 12 மணிக்குக் கடையைத் திறந்து இரவு 11 மணி வரை நடத்துவதாகவும், அதற்கான வேலைகள் காலை 6 மணிக்கே தொடங்கிவிடுவதாகவும் தெரிவிக்கிறார். சேலம் மெயின் மார்க்கெட்டுக்குச் சென்று தேவையான பொருள்களை வாங்கி வருவதாகவும், சட்னி, காய்கறிக் கலவை உள்ளிட்டவற்றை அன்றைக்குத் தேவையான அளவுக்குப் புதிதாகத் தயார் செய்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
தினமும் 150 முதல் 200 வாடிக்கையாளர்கள் வருவதாகவும், வார இறுதி நாள்களில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் இருப்பதாகக் கூறும் லோகேஷ், தற்போது தினமும் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை விற்பனை நடைபெறுவதாகத் தெரிவிக்கிறார்.

நாவூற வைக்கும் சுவையின் ரகசியம்!
தட்டுவடை செட்டின் சுவையில் சட்னியும் காய்கறிக் கலவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாகத் தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி சேர்த்து அரைக்கப்படும் சிவப்பு சட்னியும், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கப்படும் பச்சை சட்னியும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு தட்டுவடையில் சட்னியைத் தடவி, அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கிறார்கள். விருப்பத்துக்கு ஏற்ப எலுமிச்சைச் சாறு, சாட் மசாலாவும் தூவப்படுகிறது. பின்னர் மற்றொரு தட்டுவடையால் மூடி உடனடியாகப் பரிமாறுகிறார்கள். இந்தக் கலவையைப் பார்த்தாலே, “ஒரே ஒரு செட் கொடுங்க!” என்று கேட்கத் தோன்றும்.

மாலை நேரத்தின் சிற்றுண்டி!
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஈர்க்கிறது இந்தத் தட்டுவடை செட். பத்து ரூபாயில் தொடங்கும் இந்தச் சிற்றுண்டி, மாலை நேரப் பசிக்குச் சுவையான தேர்வாக இருக்கிறது. காரம், புளிப்பு, காய்கறிகள் தரும் லேசான இனிப்புச் சுவை, தட்டுவடையின் மொறுமொறுப்பு என ஒவ்வொன்றும் சேரும்போது, “இன்னொரு செட் சாப்பிடலாமா?” என்ற ஆசையைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
சேலம் வீதிகளில் சாதாரணச் சிற்றுண்டியாகத் தொடங்கி, இன்று பல ஊர்களிலும் விரும்பி உண்ணப்படும் உணவாகத் தட்டுவடை செட் வளர்ந்திருக்கிறது. தள்ளுவண்டியில் தொடங்கிய தொழிலை மூன்று தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் இந்தக் குடும்பத்தின் உழைப்பும், சேலத்தின் உணவுப் பெருமையும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


